மயிலே முண்டகக்கண்ணி அம்மனுக்கு 1008 கூடைகளில் மலர் அபிஷேகம்

மயிலே  முண்டகக்கண்ணி அம்மனுக்கு 1008 கூடைகளில் மலர் அபிஷேகம்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
      
மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள்.

சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாப்பூருக்கு எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன. மயிலை என்றதும் பெரும்பாலானவர்களுக்கு கபாலீஸ்வரர் தான் நினைவுக்கு வருவார். அதனால் தான் மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்பார்கள். ஈசன் சிறப்புப் பெற்ற இந்த இடத்தில் அம்பிகையின் ஆட்சி இல்லாமல் இருக்குமா? மயிலையில் அம்மன் என்றதும் மறுவினாடி முண்டகக்கண்ணி அம்மன் தான் நம் மனக்கண் முன் வந்து நிற்பாள்.

மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள். சென்னையில் உள்ள பழமையான பல ஆலயங்களுடன் ஒப்பிடுகையில் முண்டகக்கண்ணி அம்மன் அதைவிட பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டிருப்பது தெரியவரும்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி இருப்பதை கண்டனர்.

ஒரு தாமரை மொட்டு எப்படி இருக்குமோ, அப்படி அந்த சுயம்பு வடிவம் இருந்தது. தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதால் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை குறிப்பிடும் வகையில் அம்மனுக்கு முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் வைக்கலாம் என்ற கருத்து எழுந்தது. அம்பிகையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

இதனால் அந்த அம்மன் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். முண்டகக் கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவளை தாயாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எப்போதும் இவளுடைய கோவிலில் பெண்களின் கூட்டத்தை மிகுதியாகக் காணலாம். பெற்ற தாயையும் விட மிகுந்த வாஞ்சையுடன் அவர்களுக்கு அம்மன் உதவி மகிழ்விக்கின்றாள்.


எந்த வகையான குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும் இவளிடம் வந்து முறையிட்டால் போதும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து விடுவாள்.
பெண்கள் சிறப்பாகப் புகழுடன் நலமாக வாழ்வதற்கு அன்னை எப்போதுமே அன்புடன் அருள் பாலிக்கின்றாள். அவர்களின் கவலைகளைப் போக்குகின்றாள். அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து உதவுகின்றாள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் துணையாக இருந்து, நலம் சேர்க்கின்றாள்.

பெண்கள் போற்றும் பெருமாட்டியாக விளங்குபவள் இந்த அன்னை! அவர்கள் குழந்தைகளையும் குடும்பத்தாரையும் காப்பவள் இந்த அன்னை! அவர்கள் பக்தியுடன் படைக்கும் பொங்கலையும், செய்யும் வழிபாடுகளையும் ஆசை, ஆசையாக ஏற்று முண்டகக்கண்ணி அம்மன் மகிழ்கிறாள்.

அதனால்தான் விழா நாட்களில் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பெண்கள் இத்தலத்துக்கு மனநிறைவுடன் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இவளைத் தொழுது வழிபட்டு, இவளருளால் செல்வ வளமைகளை மிகுதியாகப் பெற்றும் மகிழலாம்.தொழில் வளர்ச்சியும், வியாபார வளர்ச்சியும் அடையலாம். வருமானப் பெருக்கமும் சொத்து சுகங்களும் பெற்று, ஆனந்தம் அடைந்தவர்கள், அடைபவர்கள் பலர்.

செல்வத்துக்கு மட்டும் அல்ல, செல்வாக்குப் பெருக்கத்துக்கும், வெற்றிகளைப் பெறுவதற்கும், வசதியான வாழ்க்கை அமைவதற்கும், வீடு, வண்டி, நிலம் போன்றவைகளைப் பெறுவதற்கும், நல்ல மனைவியை அல்லது கணவனை அடைவதற்கும் முண்டகக்கண்ணி அம்மன் அருள்புரிந்து வருகின்றாள்.
முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதியில் தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.

இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மயிலாப்பூர் பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.

பொங்கல் படையல் :

அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் பொங்கல். எனவே இத்தலத்துக்கு வரும் பெண்களில் கணிசமானவர்கள் பொங்கல் படையல் வைத்து அம்மனை வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பொங்கல் வைப்பதற்கு என்று ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது. ஆடி மாதம் முழு வதும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த இடங்கள் நிரம்பி விட்டால் மக்கள் வெளியில் ரோட்டோரத்தில் கூட பொங்கல் வைத்து விடுவதுண்டு.

இங்கு பொங்கல் வைப் பதற்கு மக்கள் விறகை பயன் படுத்துவது இல்லை. நன்கு விபரம் தெரிந்தவர்கள் பசு சானத் தினால் உருவாக்கப்பட்ட வறட்டியைத்தான் எரிக்க பயன் படுத்துவார்கள்.

அந்த வறட்டியில் இருந்து கிடைக்கும் சாம்பலை அம்மன் முன் வைத்து திருநீறாகவும் பெண்கள் பூசிக் கொள்வதுண்டு.


ஆகஸ்டு 12-ந் தேதி 1008 கூடை பூச்சொரிதல் விழா :

அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவிலுக்கு தினம், தினம் பக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

விழா நாட்களில் பெண்கள் அலை, அலையாக வரும் அதிசயத்தை இத்தலத்துக்கு நேரில் சென்றால் காணலாம். தற்போது ஆடி மாதம் என்பதால் முண்டகக்கண்ணி அம்மன் அருளைப் பெற பக்தர்கள் முண்டியடித்தபடி செல்கிறார்கள்.

ஆடி மாதம் முழுவதுமே இத்திருத்தலத்தில் கோலாகலம் தான். அதுவும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஆடி கடைசி ஞாயிறு 1008 கூடை பூச்சொரிதல் விழா இரட்டிப்பு கோலாகலத்தை தரும்.

அன்று 1008 பெண்கள் கூடைகளில் பூ ஏந்திச் சென்று அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள். அன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் விழா சில மணி நேரங்களுக்கு நடைபெறும்.

இந்த பூச்சொரிதல் நிகழ்வின் போது, அம்மனுக்கு தங்க கவசம் சார்த்தப்பட்டிருக்கும். பூக்குவியலில் அம்மன் ஜொலிப்பதை அன்று கண்டு களிக்கலாம். எனவே ஆகஸ்டு 12-ந் தேதி 1008 கூடை மலர் பூச்சொரிதல் விழாவை கண்டு தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்.

பூச்சொரிதல் முடிந்ததும் இரவு 8 மணிக்கு முண்டகக்கண்ணி அம்மன் உற்சவர் வீதிஉலா நடைபெறும். 4 மாட வீதிகளையும் அம்பாள் சுற்றிவருவாள்.
சுப்பிரமணியர் தெரு, பஜார் தெரு, மாதவப்பெருமாள் கோவில் தெரு, நாச்சியார் செட்டித்தெரு மற்றும் கல்லுக்காரன் தெரு வழியாக அம்பாள் வீதிஉலா சென்று வருவாள்.

கூழ் சாப்பிட வாங்க :

முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் தற்போது ஆடி மாத திருவிழா நடந்து வருகிறது. மொத்தம் 10 வாரங்களுக்கு ஆடித்திருவிழா நடைபெறும். இந்த 10 வாரங்களிலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தல் நடைபெறும். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு கோவில் சார்பில் கூழ் வழங்கப்படும். அந்த கூழ் மருத்துவகுணம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 2 ஆயிரம் முட்டை :

மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. தோஷங்களை நீங்கச் செய்யும் இந்த வழிபாட்டை நாளுக்கு நாள் அதிக அளவில் பெண்கள் செய்து வருகிறார்கள்.

முன்பெல்லாம் தினமும் சுமார் 20 முட்டைகளே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம். அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அது போல நாகர் சிலைகளுக்கு பெண்கள் பாக்கெட், பாக்கெட்டாக பால் கொண்டு வந்து ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

இந்த முட்டை+ பாலை உடனுக்குடன் கோவில் பணியாளர்கள் அகற்றி தொடர்ந்து மற்ற பெண்கள் வழிபாடு செய்ய உதவுகிறார்கள்.

அம்மனுக்கு அலங்காரம் :

ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மனுக்கு தினமும் செய்யப்படும் அலங்காரம் மிகவும் அலாதியானது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மனை பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போவீர்கள். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை முண்டகக்கண்ணி அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். எனவே காலை முதல் மதியம் வரை அம்மனை அலங்காரத்தில் தரிசிக்க இயலாது. அபிஷேகங்கள் முடிந்தபிறகு பிற்பகலில் அம்மனை அலங்காரம் செய்வார்கள்.

அம்மன் சுயம்புவாக தோன்றியவள் என்பதால் உருவம் கிடையாது. எனவே தாமரை மொட்டுப் போன்று இருக்கும் அந்த சுயம்பின் உச்சிப் பகுதியில் சந்தனத்தை நன்றாக குழைத்து உருண்டையாக வைப்பார்கள். அந்த சந்தன உருண்டைதான் அம்மனின் சிரசாகும். அதில் கண், மூக்கு, வாய் போன்றவற்றை வரைந்து தோற்றம் ஏற்படுத்துவார்கள். நெற்றியில் குங்குமம் வைத்து தலைக்கு பின்புறம் நாக கிரீடம் சூட்டு வார்கள். பிறகு சுயம்பு அருகில் 2 கைகளைப் பொருத்துவார்கள். வேப்பிலை பாவாடை அணிவிப்பார்கள். இந்த அலங்காரத்தில் பார்க்கும் போது முண்டகக்கண்ணி அம்மன் அமர்ந்த நிலையில் நமக்கு அருள்பாலிப்பதை உணர முடியும்.