வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி

வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை பார்ப்போம்.

அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை முதலில் பார்ப்போம்.

வஜ்ராசனம்:

பெயர் விளக்கம்:  தேவர்களின் தலைவரான இந்திரனின் கையில் உள்ள பலம் பொருந்திய வஜ்ராயுதம் போல இந்த ஆசனம் உடலுக்கு அதிக வலிமை அளிப்பதால் வஜ்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை:  தரை விரிப்பின் மேல் அமர்ந்து, கால்கள் இரண்டையும் நேராக நீட்டி வைக்கவும்.  வலது காலை மடக்கி, வலது குதிகாலை வலது புட்டத்தின் அடியிலும், இடது காலை மடக்கி இடது குதிகாலை இடது புட்டத்தின் அடியிலும் வைக்கவும். இரு குதிகால்களுக்கு இடையில் புட்டம் இருக்கட்டும். முழங்கால்கள் இரண்டும் சேர்ந்திருக் கட்டும். பாத விரல்கள் முதல் முழங்கால்கள் வரைக்கும் விரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.

முதுகு, கழுத்து, தலை நேராக இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி தொடை களின் மேல் கைவிரல் களால் சின் முத்திரை செய்யவும், முழங்கால்கள் சற்று மடங்கிய நிலையில் இருக்கட்டும், கண்களை மூடவும் உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். ஆரம்பப் பயிற்சியில் சிலருக்கு வஜ்ராசனத்தில் அமரும் போது குதிகால் பகுதியில் அதிக வலி உண்டாகலாம்.

அத்தகையவர்கள் இரு பாதத்திற்கு அடியில் மிருதுவான துணி ஒன்றை சுருட்டி வைத்து அதன்மேல் அமர்ந்து செய்யலாம்.  அல்லது அமருவதற்கு சரியாக இருக்கும் அளவு சிறிய இருகால் மனை ஒன்றை தரை விரிப்பின் மேல் வைத்து அதன் மேல் அமர்ந்து செய்யலாம். மனையின் இடை வெளியில் கால்களும் மனையின் மேல் புட்டமும் இருக்கட்டும்.

பயன்கள்:  இந்த ஆசனத்தினால் தொடை, முழங்கால், கணுக்கால், பாதம், உறுதி பெறும்.

பெயர் விளக்கம்:

ஜாலந்தர பந்த்:  ஜாலந் என்றால் வலைப் பின்னல், வலை போன்ற அமைப்பு என்றும் ‘தர’ என்றால். ஆறாகப் பாய், ஒரு தொடர் ஓட்டம் என்றும் பொருள் படுகிறது. ஜாலந்தர பந்தம் என்றால் கழுத்துப் பகுதியில் உள்ள வலை போன்ற நாடிகளில் செல்லும் பிராணவாயு மற்றும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் என்று பொருள் படுகிறது.

செய்முறை:  வஜ்ராசனத்தில் அமரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைத்து இரு கை விரல்களாலும் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும் உடலை தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக முடிந்த அளவு மூச்சுக் காற்றை இழுத்து நிறுத்தவும். மெதுவாக தலையை தாழ்த்தி முகவாய்க்கட்டை, கழுத்துப்பட்டை எலும்பை தொகுப்பு அழுத்தி வைக்கவும். மூச்சை வெளியே விடாமல் 5 முதல் 10 வினாடி அப்படியே நிலைத்திருக்கவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: தொண்டை மற்றும் முதுகுப் பகுதியின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சி குறிப்பு: கழுத்து நரம்புகளில் வளையும் தன்மை குறைவாக உள்ளவர்கள், முரட்டுத் தனமாக கழுத்தை வளைக்காமல் முடிந்த அளவு செய்யவும். நாள்பட சரியாக வந்து விடும்.

எடை குறைப்பு: கழுத்து நரம்பு வலி, தலை கிறுகிறுப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

பயன்கள்: தைராய்டு, பாரா தைராய்டு, நன்கு இயங்க உதவுகிறது. தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, அடைப்பு நீங்கும் மன அழுத்தம் படபடப்பு, கோபம் குறையும் மனம் அமைதியுறும்.

அக்னி சார தௌதி

பெயர் விளக்கம்: இப்பயிற்சி ஜீரண கருவிகளை தூய்மைப்படுத்தி ஜடராக்னியை விருத்தி செய்வதால் அக்னி, சார தௌதி என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும், மூச்சை ஆழமாக உள்ளுக்குள் இழுக்கவும். மூச்சை வெளியே விட்டு நுரை யீரலில் இருக்கும் காற்றை முடிந்த அளவு வெளியேற்றவும். முதுகை வளைக்காமல் சிறிதளவு முன் பக்கம் உடலை சாய்க்கவும், உள்ளங்கைகளை முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். தலையை தாழ்த்தி ஜாலந்தரபந்தம் செய்யவும். மீண்டும் மூச்சுக் காற்றை உள்ளுக்கு இழுக்காமல் இருந்து வயிற்றை சுருக்கி முடிந்த அளவு முதுகுடன் வயிற்றுத் தசைகளை ஒட்டி இருக்கும்படி செய்து உடனே வயிற்று தசைகளை விரித்து வயிற்றை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வரவும்.

இப்படியே வயிற்றுத் தசைகளை உள்நோக்கி இழுப்பதும் மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவதுமாக 5 முதல் 10 முறை அவரவர் தேக நிலைக்கு தக்கபடி செய்யவும், இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை சில நாட்கள் 3 முதல் 5 சுற்று வரை செய்யவும். நன்கு பயிற்சி பெற்ற பிறகு 10 சுற்று வரை செய்யலாம். ஒவ்வொரு சுற்றுக்கு இடையிலும் தலையை மேலே உயர்த்தி சாதாரண மூச்சுடன் சில வினாடிகள் ஓய்வு பெறவும்.

கவனம் செலுத்தவேண்டிய இடம்:  மூச்சின் இயக்கம், வயிற்றுத்தசை சுருங்கி விரிதல் மற்றும் மணிப்புர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு:  இந்த பயிற்சியில் தொடர்ந்து வயிற்று தசைகளை சுருக்குவதும், விரிப்பதுமாக செய்யும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கக்கூடாது.

எப்பொழுது பயிற்சி செய்யலாம்:  காலையில் வெறும் வயிற்றில் செய்யலாம். ஆசனம் அல்லது பிராணாயாமத்தின் முடிவிலும் செய்யலாம்.

தடைக்குறிப்பு: வயிறு, குடல்புண், உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, தைராய்டு சுரப்பி அதிக அளவு இயக்கு நீரை சுரத்தல் போன்ற குறைபாடு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

பயன்கள்: வயிற்றுத்தசை மற்றும் உதரவிதானம் பலம் பெறும். அஜீரணம், மலச்சிக்கல், அதிக அமில சுரப்பு நீங்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், அதிக அமில சுரப்பு நீங்கும், மந்தமாக செயல்படும் கல்லீரல், சிறுநீரகம், கணையம் நன்கு இயங்கும் ஆற்றல் பெறும், தொந்தி குறையும். வயிற்றில் உண்டாகும் வாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும், சோர்வு நீங்கும், சுறுசுறுப்பு அதிகரிக்கும். மன அழுத்தம், எந்த காரியத்திலும் மந்தமாக செயல்படுதல் போன்ற குறைபாடுகளை நீக்கவும் இந்த பயிற்சி பயன்படுகிறது.