முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை

முக்திக்கு திருவாரூர் கமலாம்பிகை

கமலாம்பிகை தனிக் கோவிலில் தவக்கோலத்தில், கால் மேல்கால் போட்டுக்கொண்டு யோகாசனமாக வீற்றிக்கிறாள். இந்த அம்பிகை அழகே உருவானவள்.

சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருஉருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம்.

கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் நீலோத்பலாம்பிகைக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு அவள் நின்ற கோலத்தில் வலது திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஒன்றை ஏந்திய வண்ணம் காட்சி தருகின்றாள்.

அம்பிகையின் அருகிலே தோழி ஒருத்தி தமது தோள் மீது பாலமுருகனைச் சுமந்திருக்க முருகனின் சுட்டு விரலைத் தனது இடது கரத்தால் பற்றி நிற்கின்றாள்.
பிற எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி இது.

நீலோத்பலாம்பிகை, தன் இளைய பிள்ளையோடு எழுந்தருளித் திகழும் காட்சியானது, இல்லற வாழ்வின் மாண்பினை உயர்த்துவதாகும். இந்த அன்னை இல்லற வாழ்வு அமைதியாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இன்னருள் சுரப்பவளாக திகழ்கின்றாள்.

இந்த அன்னையை போன்றே, துறவற வாழ்வை மேற்கொள்ள விரும்பும் பக்தர்களுக்கு அன்னை கமலாம்பிகையும் ஒரு தனிகோவிலில் எழுந்தருளித் அருளுகின்றாள்.

கமலாம்பிகை தனிக் கோவிலில் தவக்கோலத்தில், கால் மேல்கால் போட்டுக்கொண்டு யோகாசனமாக வீற்றிக்கிறாள். அதோடு அவள் பாசம், உருத்திராக்கம், தாமரை, அபயம் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி அருளுகின்றாள். இந்த அம்பிகை அழகே உருவானவள்.

யோக நிலையில் பிறப்பதே சுத்த சித்தி நிலை. இந் நிலையை அடைய இந்த அன்னையை தியாகம் புரிதல் வேண்டும். இதனை உணர்த்தவே அன்னை கமலாம்பிகை தவக்கோலத்து யோக நிலையில் எழுந்தருளி விளங்குகின்றாள்.

இந்தத் திருத்தலத்திலே அன்னை பராசக்தி இருவித தோற்றம் கொண்டு காணப்படுவதற்கு சிறப்பான பொருள் உண்டு. குழந்தை பால முருகனுடன் காட்சி தரும் நீலோத்பலாம்பிகை இம்மை வாழ்க்கையின்தத்துவ விளக்கமாகும்.

கமலாம்பிகை தவத் திருக்கோலத்தில் காணப்படுவது மறுமைக்கு வழிகாட்டும் தத்துவ விளக்கமாகும். இம்மைக்கும் மறுமைக்கும் அருளதிகாரியாக அன்னை பராசக்தி திகழ்கின்றாள் என்ற தத்துவ விளக்கமாகவே அன்னை திருவாரூரில் இருவிதத் தோற்றங்களுடன் எழுந்தருளி இருக்கிறாள்.

கமலாம்பிக்கையை உளத்தூய்மையோடு தியானம் செய்தல் வேண்டும். அவ்வாறு அன்னையை தியானித்தால் மாயையான மனங்களில் இருந்து மனமானது விடுபட்டு விடும்.

எந்நேரமும் ஓயாது தியாம் செய்தால் கட்டுப்பாடில்லாமல் ஓடும் மனமானது உள்முகமாகிடும். அப்படி ஒருமுகப்படும் மனதில் ஓர் உணர்வு பிறந்திடும். உணர்வினிலே தெளிவான காட்சி தோன்றும். அத்தெளிவான காட்சியே முக்தியான வீடுபேற்றினை அருளும்.