Showing posts with label தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம். Show all posts
Showing posts with label தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம். Show all posts

தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம்

தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!


"பேசும் சிற்பம்" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா..??

உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் !!

படம் 1 :
18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்.

படம் 2 :
சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்

படம் 3 :
சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ? ஆஹா ஒரு யானை !! பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!?? அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்…?!?!?!?!?!?

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் ! என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள்…

(இ-1) : இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது.

(இ-2) : அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது

(வ-1) : வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது.

(வ-2) : கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது.

நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.

இது ஒன்று தானா..?? இல்லவே இல்லை.... இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா..?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது, அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது, அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.!!

அழிவிலிருந்து காப்பாற்றுவோம் நம் கலைப் பொக்கிஷங்களை.!!!