புதுக்கோட்டை இலுப்பூர் பொன்வாசிநாதர் ஆலயம் - Pudhukottai Ponvachinathar Temple.

புதுக்கோட்டை இலுப்பூர் பொன்வாசிநாதர் ஆலயம் - Pudhukottai Ponvachinathar Temple.

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை இலுப்பூர் பொன்வாசிநாதர் ஆலயம் - Pudhukottai Ponvachinathar Temple.

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

இறைவன், பொன்னம்மாள், ராஜகோபுரம்,
புதுக்கோட்டை அருகே உள்ளது இலுப்பூர். இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது. இங்குதான் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயத்தின் காலம் உறுதியாகக் கூற முடியவில்லை. எனினும் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றில் காணப்படும் கல்வெட்டுகளில், குலசேகர பாண்டியன் (1190-1218) மற்றும் சுந்தர பாண்டியன் (1218-1244) ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. எனவே இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது. இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம், மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.

கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் முன் மண்டபம் உள்ளது. கொடி கம்பம், பலி பீடம், நந்தி ஆகியவை இங்கு காட்சி தருகின்றன. முன் மண்டபம் 12 தூண்களுடனும், யாளி, ஆறு கரங்களுடன் நர்த்தன விநாயகர் மற்றும் நாயக்கர் மன்னர்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. வலது புறம் நடராஜ சபை அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. அடுத்ததாக சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை சொர்ணாம்பாள் சன்னிதி உள்ளது. அன்னையின் இன்னொரு பெயர் ‘பொன்னம்மாள்’ என்பதாகும்.

அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் பொன்வாசி நாதர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பிறபெயர்கள் ‘ஹேம விருத்திஸ்வரர்’ மற்றும் ‘பொன் வளர்ச்சி நாதர்’ என்பதாகும். இதுவே நாளடைவில் மருவி ‘பொன்வாசி நாதர்’ என அழைக்கப்படுகிறது.

இங்கு அன்னை தென் முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேலிரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்கிறாள். இத்தல இறைவி, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளின் சக்தியுடன் இணைந்து கருணையுடன் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

இறைவனின் வட்டவடிவ விமான கோபுரத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டு திசையை நோக்கி காவல் புரிவது போல் காணப்படுகிறது. மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பழமையான சிவன் கோவில்களில்தான் இது போன்ற அமைப்பு உள்ள விமானத்தைக் காணலாம்.

இந்த ஆலய திருச்சுற்றின் தெற்கில் நால்வர் திருமேனிகளும், மேற்கில் கன்னிமூலை கணபதி, வீர விநாயகர், லட்சுமி நாராயணன், விசுவநாதர், விசாலாட்சி, பூரண - புஷ்கலா சமேத ஐயனார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, வீரபத்ரர், அருணகிரிநாதர், ஆத்ம லிங்கம், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பட்டினத்தார் திருமேனிகளும் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் சுப்ரமணியருக்கு கந்த சஷ்டி உற்வசம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி யின் போது ஆறு நாட்களும் ஸ்தந்த ஹோமம் நடை பெறுவதுடன் சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெறும். நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இறைவன், இறைவிக்கு சகஸ்ரநாம பாராயணம் நடை பெறுவதுடன், பத்தாம் நாள் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடையப்பட்டி கிராமம் சென்று அம்பு போடும் வைபோவமும் நடைபெறும்.

இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் கொங்கணச் சித்தர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனர் அருள்பாலிக்க, இறைவியின் தேவ கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகள் அருள்பாலிக்கின்றனர்.

இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும், இறைவி பொன்னம்மாள் அம்பிகையையும் வழிபட்டுதான், தேவர்களின் குருவான குரு பகவான், ‘பொன்னன்’ என்ற பெயரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு பொன்னும் பொருளும் விருத்தியாகும். தவிர அட்சய திருதியை நன்னாளில் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு அனைத்து நலன்களும் விருத்தியாகும்.

சித்திரை மாதம் 10 நாட்கள் இங்கு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது. 8-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். 10-ம் நாளில் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவுபெறும். இந்த நாட்களில் பஞ்ச மூர்த்திகள் தினசரி காலை, மாலை என இரு வேளையும் வீதியுலா வருவதுண்டு.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம் மற்றும் மகிழ மரம். இறைவியின் சன்னிதியின் வலது புறம் பள்ளியறையும், இடது புறம் காலபைரவர் சன்னிதியும் உள்ளன. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ ஆராதனைகள் நடை பெறும். திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பெற வேண்டியும் பள்ளியறையில் 48 நாட்கள் பால் பழம் வைக்க, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

ராமபிரானும், லட்சுமணரும் சீதா பிராட்டியைத் தேடி தென் திசை செல்லும் போது, இத்தலத்தின் வழியாக சென்றதாகவும் அப்போது இங்குள்ள இறைவன் -இறைவியை சிவபூஜை செய்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது.

‘சொர்ணம்’ என்றால் ‘பொன்.’ தங்கள் பெயரிலேயே பொன்னைக் கொண்ட இத்தல இறைவன், இறைவிக்கு அர்ச்சனை தட்டில் நகைகளுடன் ஆராதனை செய்து நகைக் கடை தொடங்குபவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பது உண்மை.

புதியதாய் நகை வாங்கும் பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பூ, பழம், தேங்காயுடன் வாங்கிய நகைகளை வைத்து இறைவன் இறைவியை ஆராதனை செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. இதனால் அவர்கள் மேலும் மேலும் நகைகள் வாங்குவது நிஜம்.

களவு போன நகைகள் திரும்ப கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட பக்தர்கள், இங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரு மண்டல காலத்திற்குள் களவு போன நகைகள் திரும்ப கிடைப்பது உறுதியாம்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பொன்னை வாரி வழங்கும் இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும் அன்னை பொன்னம்மாளையும் நாமும் ஒருமுறை தரிசித்து பயன் பெறலாமே!

அமைவிடம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது இந்த பொன்வாசி நாதர் ஆலயம். விராலிமலையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. மேற்கூறிய மூன்று ஊர்களில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.