சிவப்பு முள்ளங்கி

சிவப்பு முள்ளங்கி

இதயத்தின் நண்பன்:
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

புற்றுநோய் தடுப்பு:
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன. சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.

உறுதியான எலும்பு:
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

பார்வைக்கு பலம்:
தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும். லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது. இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்:
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது. சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.

கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்

கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்!!!
கும்பகோணத்திலிருந்து குடவாசல் அருகே உள்ளது திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோயில்.
பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம். அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.
ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான். நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான். அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர். அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்துவிட்டு அவன் சென்றுவிட்டான்.
இப்போது, கங்கையும் காவிரியும் யார் புனிதமானவர் என்று போட்டியிட்டனர். இந்த விவகாரம் பிரம்மாவிடம் சென்றது. அவர், “நான் நித்திய பூஜைக்கு ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வரும் கங்கை நீரையே பயன்படுத்துகிறேன். எனவே, கங்கையே புனிதமானவள், உயர்ந்தவள்” என்றார். இதனால், காவிரிக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. தனக்கும் அதே கவுரவம் வேண்டும் என்று எண்ணினாள் காவிரி. பெருமாளின் பாதம் தொட்டு வருவதால்தானே கங்கைக்குப் புண்ணியம். அதுபோல் தான் பெற விரும்பினாள் காவிரி. பெருமாளை நோக்கித் தவம் புரிய எண்ணினாள்.
இந்த மனக்கவலையுடன் பெருமாளிடம் வந்தாள் காவிரி அன்னை. திருச்சேறைத் தலத்தில், சார புஷ்கரிணியில் ஓர் அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய ஸ்ரீமந் நாராயணர், ஒரு குழந்தையின் வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார். ஆனால், காவிரியோ தனக்கு இதைக் காட்டிலும் பெருமை வேண்டும் என்றாள். எனவே காவிரியின் வேண்டுகோளை ஏற்று சங்கு சக்ரதாரியாக, கருட வாகனத்தில் ஏறி, தேவியர் ஐவருடன் காட்சி தந்தார் பெருமாள்.
மேலும், காவிரியிடம் வேண்டும் வரம் கேட்டுப் பெறக் கூறினார். ஐந்து லட்சுமியருடன் அழகு தரிசனம் பெற்ற காவிரித் தாயோ, தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கே தரிசனம் தர வேண்டும். மேலும், கங்கையிலும் புனிதமான மேன்மையை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாள். ஆயிரம் வருட தவத்துக்குப் பிறகு, விந்திய மலைக்குத் தெற்கே கங்கைக்கு சமமான அந்தஸ்து காவிரிக்கும் கிடைத்தது. மேலும், காவிரி அன்னைக்குக் காட்சி தந்த பெருமாள் திருச்சேறையில் அவ்வண்ணமே எழுந்தருளினார். கருவறையில் சாரநாதப் பெருமாளுக்கு இடப்புறத்தில் காவிரித்தாய் அமர்ந்து கொண்டார்.
ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்ட புகழ்பெற்ற வைணவத் திருப்பதிகள் 108ல் இந்தத் தலமும் ஒன்று. சார என்ற சொல்லுக்கு, ஆன்மா, சாரம் என்று பொருள். பெருமாளுக்கு பக்தர்கள் தங்கள் ஆன்மாவை அர்ப்பணிப்பதால் பெருமாளுக்கு ஆன்மாக்களின் நாதனாக, சாரநாதனாகப் பெயர் ஏற்பட்டது. இதுவும் சார க்ஷேத்ரம் என்று பெயர் பெற்றது. சாரநாதன் என்ற திருப்பெயருடன் திகழும் பெருமாள், சாரநாயகி என்ற திருப்பெயருடன் திகழும் தாயார், சார விமானம் என்ற பெயருடன் விமானம், சார புஷ்கரிணி என்ற பெயருடன் தீர்த்தம்.. எல்லாம் சாரம்தான். முற்காலத்தில் இந்தத் தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. அதுமட்டுமா… இங்குள்ள சிவபெருமானையும் சார பரமேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்கள் அழைக்கின்றனர். இவரது கோயிலை உடையார் கோவில் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் ஞானவல்லி என்பது.
சாரநாதப் பெருமாள் ஆலயத்தின் சிறப்பம்சம், இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி என லட்சுமியின் அம்சமாய் ஐந்து தேவியருடன் அருள் வழங்குகிறார் என்பது.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சாரநாதப் பெருமாள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். சுமார் 90 அடி உயரத்தில் திகழ்கிறது. கோயிலுக்கு எதிரே உள்ள சாரபுஷ்கரிணி மேற்குக் கரையில், அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வான், அனுமத் சமேத ஸ்ரீராமர், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மிணி, நரசிம்மர், பாலசாரநாதர் என சந்நிதிகள் உள்ளன. கருவறையில் காவிரி மட்டுமல்லாது, மார்க்கண்டே மகரிஷியும் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர் இந்தத் தலத்தில் முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.
இந்தப் பெருமாள் வரலாற்று காலத்திலும் முக்கியத்துவம் பெற்றவர். நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், வைணவத் தலங்கள் பலவற்றையும் புனரமைத்து வழிபட்டு வந்தனர். மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்று வந்தது. மன்னரின் ஆணைப்படி மன்னார்குடி கோயில் திருப்பணிக்காக இந்த ஊரின் வழியே கற்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மன்னனின் அமைச்சருக்கு இந்தப் பெருமாளின் மீது அளவற்ற பக்தி.
சாரநாதப் பெருமாளின் திருப்பணிக்கு தேவைப்படும் என்று வண்டிக்கு ஒரு கல் வீதம் அமைச்சர் நரசபூபாலன் இங்கே இறக்கிவைத்தான். ஆனால் இந்தச் செய்தி மன்னனின் காதுகளை எட்டியது. அவனுக்குக் கோபம் தலைக்கேற, இங்கே வந்தான். இதனால் மிகவும் பயந்து போன அமைச்சரோ, சாரநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டார். மன்னன் வந்த அதே நேரம் சாரநாதப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த மன்னன், இந்தக் கோவிலுக்கும் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினான் என்பர். இந்தப் பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். “தண்சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்புதானே” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
திருவிழா: இந்தத் தலத்தில் சிறப்புத் திருவிழா தைப்பூச விழாதான். இது, பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்த் திருவிழா. இங்கே காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்தது, ஓர் தை மாத, பூச நட்சத்திரத்தில்தானாம். இது, வியாழன் சஞ்சரித்த காலம் என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாத பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இங்குள்ள சார புஷ்கரணியில் நீராடினால், மகாமாகத்தில் நீராடியதற்கு ஒப்பாகும் என்பர். எனவே, இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
திருமணத் தலம்: இங்கே பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார். எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்ஸவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாத்துகின்றனர்.
பாபம் போக்கும் பெருமாள்: இங்கே பெருமாள் பாபத்தைப் போக்கி, புண்ணியத்தைக் கூட்டுகிறார். காவிரித் தாய்க்கு புண்ணிய மகிமையை அளித்தவர் என்பதால், இங்கே பெருமாளை வழிபட்டாலே, காவிரியில் நூறு முறை முங்கி எழுந்த புண்ணியம் கைகூடுகிறது. கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை.
சந்நிதி திறக்கும் நேரம்: காலை 6-11 மாலை 5-8 வரை.
தொடர்புக்கு: 0435-2468001

நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன்

நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன் !!!

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்தபோது அவரிடம் பாஞ்சாலி “தர்ம நியாயத்துக்கு கட்டுப்படும் தாங்கள், நான் துகிலுரியப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு பீஷ்மர், துரியோதனனின் உணவை உண்டதால் உண்டான ரத்தம்தான் அதற்கு காரணம்” என்றார்.

“அப்படியானால் இப்போது மட்டும் ஏன் மாறினீர்கள்?” என்று கேட்க, “அந்த ரத்தத்தை எல்லாம் அர்ஜுனனின் அம்பு வெளியேற்றி விட்டது. அதனால் நான் மீண்டும் நானாக மாறிவிட்டேன்” என்றார் பீஷ்மர். ஆகையால் நல்லவர் இல்லத்திலும் நல்ல மனதுடன் உணவு படைப்பவர் கையிலும்தான் உணவு உண்ண வேண்டும்.

சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!

சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தேனுபுரீஸ்வரர்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். மூலவருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
இந்த ஆலயத்தினுள் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இரண்டாவது ராஜகோபுரத்திற்கு வெளியே, அனுக்ஞை விநாயகர் சந்நிதிக்கு எதிரில் உள்ளது “ஞானவாவி தீர்த்தம்”. “வாவி’ என்ற சொல்லுக்கு குளம் என்று பொருள்.
ஒருமுறை திருஞானசம்பந்தர் வெம்மையால் வாடி, மிகவும் களைப்பாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். தன் களைப்பினை போக்கிக்கொள்ள வேண்டி தேனுபுரீஸ்வரரை வழிபட ஆலயத்திற்குள் நுழைந்தார். திருஞான சம்பந்தருக்கு இந்த ஞானவாவியின் தீர்த்தத்தினை இறைவனே முகந்து வழங்கினார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறைவன் குளத்தில் இருந்து எடுத்துக்கொடுத்த தீர்த்தம் பாலாக மாறியது. அந்த ஞானப்பாலை திருஞானசம்பந்தர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றார்.
திருஞான சம்பந்தருக்கு முதலில் சீர்காழியில் வானமார்க்கமாக வந்த தேவியால் ஞானப்பால் வழங்கப்பட்டது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இரண்டாவது முறையாக ஞானவாவி தீர்த்தத்திலிருந்து ஞானப்பால் வழங்கப்பட்டது. இந்த ஞானவாவி தீர்த்தத்தில் நீராடுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த ஞானம் கிடைக்கப் பெறுகிறார்கள். சரியாக படிப்பு வரவில்லை என்று கவலைப்படும் மாணவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி பலன் அடைகிறார்கள்.
இக்கோயிலின் இன்னொரு புனித தீர்த்தம் “கோடி தீர்த்தம்’. நவகிரக சந்நிதியின் மேற்கு திசையில் இருக்கிறது தெய்வத்தன்மை வாய்ந்த கிணறு. இதுதான் “கோடி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான் ஒருமுறை இக்கோயிலின் தேனுபுரீஸ்வரரை வழிபட வந்தபோது பேராற்றல் மிகுந்த வில்லின் ஒரு முனையில் இக்கிணறைத் தோற்றுவித்தார் என்கிறது தலபுராணம். தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்தவர்கள், இந்த கோடி தீர்த்தத்தில் நீராடினால் தீவினைகள் நீங்கி நலம் பெறலாம்.
ஆந்திரப் பிரதேச மலையில் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் தென்கரையில் உள்ளது ஸ்ரீசைலம் சிவஸ்தலம். நந்திகொட்கூர் பகுதியில் உள்ள ஒரு மலையின் மீது சுமார் பதினைந்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இக்கோயில். நம் பாவங்களை எல்லாம் போக்கும், கங்கையின் பாவத்தையே போக்கிய பாதாள கங்கை தீர்த்தம் இக்கோயிலில்தான் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் மலையின் வட கிழக்கு திசையில் 1500 அடி இறக்கத்தில் ஆரம்பமாகிற கிருஷ்ணா நதியைத்தான் இங்கே பாதாள கங்கை தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.
அனந்தபுரத்தில் கல்யாணவதி என்கிற இளம்பெண் தினமும் கங்கை நதிக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது வழியில் ஒரு அழகான வாலிபனைக் கண்டு மயங்கியவள் தவறு செய்தாள். அதற்குப் பிறகு அவள் கங்கை நதியில் குளிக்க முயன்றபோது கங்கா மாதா அவளைத் தடுத்தாள். “கணவனுக்கு துரோகம் செய்த உன்னுடைய ஸ்பரிசத்தால் என்னுடைய பரிசுத்தத்தை பாழாக்கி விடாதே. மீறினால் சபித்துவிடுவேன்” என்று கோபத்துடன் கூறினாள்.
கங்கையின் கோபம் கண்டு கதறி அழுதாள் கல்யாணவதி. “தாயே என் பாவத்தை நீக்க வேண்டிய நீயே என்னைத் துரத்தினால் நான் எங்கு செல்வேன். என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சினாள். மனம் இரங்கி அவள் குளிப்பதற்கு அனுமதியளித்தாள் கங்கை.
கல்யாணவதி கங்கையில் குளித்து புனிதமானாள். ஆனால் கல்யாணவதியால் தான் மாசடைந்துவிட்டதாக கருதினாள் கங்காதேவி. தனக்கு ஏற்பட்ட மாசினைப் போக்க, ஸ்ரீசைலத்தில் உள்ள பாதாள கங்கையில் நீராடி புனிதம் அடைந்தாள். இந்த நதியில் உள்ள கற்கள் லிங்க ரூபத்தில் இருப்பது சிறப்பு. பாதாள கங்கை தீர்த்தத்தில் மூழ்கிக் குளிப்பவர்கள் பாப விமோசனமும், முக்தியும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்து துர்க்கை மிகவும் பிரசித்தி பெற்றது. இராகுக்கு அதிதேவதை ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி ஆவாள். இவ்வம்பிகைத் திருக்கரங்களில் சங்கோடு சக்கரம் தரித்து இருப்பதால் துர்க்கா லட்சுமி என்றும் விஷ்னுதுர்க்கை என்றும் போற்றப்படுகிறாள். கேட்டவருக்கு கேட்டவரம் நல்கும் இவ்வன்னை பூவுலகின் கற்பக விருட்சம். வெற்றித் திருமகுடம். இராகுவினால் ஏற்படும் கெடுபலன்களிலிருந்து விடுபட ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு 9 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிட்டும். கல்வியில் தேர்ச்சி பெறுவர். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும் நினைத்த காரியம் கைகூடும்

நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர்

ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர் !!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர். இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிறது கருவறை விமானம். இதனை “கைலாய விமானம்’ என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. மாடக் கோயிலாக விளங்குகிறது. கோட்செங்கட் சோழன் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
சௌந்திர நாயகர், சுந்தர நாதர், பஞ்ச வர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூர் உடைய நாயனார் என்று பல பெயர்களிலும் இவ்விறைவன் அழைக்கப்படுகிறார்.
இம்மூல லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத நிலையில் தாமிர நிறத்தில் விளங்குகிறது. இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
பகலில் ஆறு நாழிகைகளுக்கு ஒரு முறை நிறம் மாறும் இந்த சுயம்புலிங்கம், காலை 6 முதல் 8.25 வரை தாமிர நிறத்திலும், காலை 8.26 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு நிறத்திலும், காலை 10.49 முதல் 1.12 வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும், மதியம் 1.13 முதல் 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 3.37 முதல் 6 மணி வரை இன்ன நிறம் என அறிய முடியாத வண்ணத்திலும் காட்சி அளிப்பது காணக் கிடைக்காத அருங்காட்சியாகும்.
இந்த மூல லிங்க அமைப்பில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இதன் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக உள்ள சிறிய பாணத்தை பிரதிஷ்டை செய்தவர் அகத்திய ரிஷி என்பார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர், கிரி சுந்தரி. மிகப் பெரிய வடிவில், பேரழகுடன், சுவாமிக்கு வடகிழக்கில் தனிக் கோயிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பாள்.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடி மரத்துப் பிள்ளையார், கொடிமரம், பலிபீடம், ரிஷப தேவரின் சந்நிதி ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் இடது புறம் அமர் நீதியார் தராசு மண்டபமும், வலதுபுறம் உற்சவ மண்டபமும் உள்ளன. அடுத்து மூன்று நிலை உட்கோபுரம். உள்ளே காசி பிள்ளையாரை கடந்து சென்றால், அழகிய மண்டபம். அதன் வலது புறத்தில்தான் அருள்மிகு கிரி சுந்தரி அம்பிகையின் சந்நிதி உள்ளது. எதிரே மூலவர் கல்யாண சுந்தரர், கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்கையும் காட்சியளிக்கின்றனர். இரண்டு திருச்சுற்றுகளை உடைய இத்திருக்கோயில் 316அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.
இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் பல. சப்த சாகரம், அக்கினி தீர்த்தம், நாக கன்னி தீர்த்தம், தர்ம தீர்த்தம், தேவ தீர்த்தம், பிரம்ம குண்டம், ஐராவத தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியவையே அவை. இங்கு தல விருட்சம், வில்வ மரமாகும். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இவ்விறைவனை வழிபட, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் தென் பிரகாரத்தில், எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ மகா காளிகாம்பாள். சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆலயம் திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மதியம் 1 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
அமைவிடம்:
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ளது பாபநாசம். இதன் கிழக்கில் உள்ள வாழைப்பழக்கடை என்ற இடத்திலிருந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருநல்லூர் என்ற இந்தத் தலம். சுந்தரப் பெருமாள் கோயில் என்ற ரயில் நிலையத்திலிருந்து தெற்கில் இரண்டரை கிலோமீட்டர் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு இத்தலத்தில்தான் பரமேஸ்வரன், “திருவடி தீட்சை’ அளித்தார். அதை நினைவூட்டும் வகையில் இங்கு வைணவக் கோயில்கள் போல் “சடாரி’ சாதிக்கும் மரபு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம், அப்பராகிய நாவுக்கரசருக்கு திருவடி தீட்சை தந்த தலம் ஆகிய பெரும் பெருமைகளைக் கொண்ட திருத்தலம் இது.

காலொடிந்த அதிசய பிள்ளையார் !!!

காலொடிந்த அதிசய பிள்ளையார் !!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகில் உள்ள சிற்றூர் கேரளபுரம். இங்குள்ள ஆலயம் “வீரகேரளபுரத்து மகாதேவர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு சிறப்பூட்டுவதும், மக்களை வியப்படையச் செய்வதும் இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்திருக்கும் அதிசய விநாயகர். இப்பிள்ளையார் ஆறு மாதங்கள் வரை கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வரை வெளுப்பாகவும் காட்சி தருகிறார்.

அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை கறுப்பாகவும், மாசி முதல் ஆடி மாதம் வரை வெளுப்பாகவும் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த அதிசய விநாயகர் ஒரு கால் ஒடிந்து காணப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் இக்கோயிலின் குருக்கள் தவறு செய்வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு முதியவர் தாழிட்ட கதவை பலமாகத் தட்டியுள்ளார். கோபத்துடன் கதவைத் திறந்த கோயில் குருக்கள் முதியவர் என்றும் பாராமல் ஆத்திரத்தோடு அவரை வேகமாகத் தள்ளிவிட்டார். தடுமாறிக் கீழே விழுந்த முதியவரின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அதைக் கண்டும் காணாமல் அலட்சியத்துடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து மறுபடியும் கதவைத் தாழிட்டுக்கொண்டார்.

மறுநாள் குருக்கள், கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றபோது, விநாயகப் பெருமானின் ஒரு கால் ஒடிந்திருப்பதைக் கண்டு வியப்பும், அச்சமும் அடைந்தார். தனக்கு அறிவுரை கூற வந்த முதியவர் விநாயகரே என்பதை அறிந்து வருந்தினார். தன் செயலுக்காக பிள்ளையாரிடம் மன்னிப்புக் கேட்டவர் மனம் திருந்தினார். இதுவே காலொடிந்த பிள்ளையாரின் கதை.

சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!

சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி!!!
மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜிப்பதா…? என்று ஆச்சரியப் படுகிறீர்களா? அத்தகைய அதிசயமான மண் வழிபாடு நடைபெறுவது, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் தான்!
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்ட இத்தலம், மண் அரக்கனால் வழிபடப்பட்டது என்பதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது. அதன் காரணமாகவே மண் அரக்கநல்லூர் என்பது பின்நாளில் மருவி, மண்ணச்ச நல்லூர் ஆனது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூமிநாத சுவாமி சுயம்பு மூர்த்தி. உளிபடாத, சற்றுச் சாய்ந்த லிங்கத் திருமேனியை உடையவர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 9, 10, 11 தேதிகளில் சூரிய பகவான் தனது ஒளிக்கீற்றுகளைக் கொண்டு இறைவனின் திருமேனியில் படரவிட்டு வழிபடுவது தனிச்சிறப்பான ஒன்றாகும். இவ்வாலயத்தில் வன்னி மற்றும் வில்வ மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.
கட்டடத்தொழில், ரியல்எஸ்டேட், விவசாயம் செழிக்க, போர்வெல் அமைக்க என்று பூமி சம்பந்தமான அனைத்து தொழில் செய்பவர்கள், தங்களுக்கென்று நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் என அனைவருமே இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த வழிபாடு வித்தியாசமானது; எங்கும் கேட்டறியாதது என்றே சொல்ல வேண்டும். அதாவது, நாம் வாங்கிய அல்லது விற்க நினைக்கும் நிலத்தின் மண்ணை சுப தினத்தில், புதன் ஹோரையில், வடகிழக்கு மூலையில் எடுக்க வேண்டும். கொஞ்சமாக மண்ணை எடுத்து, மஞ்சள் நிறத் துணியில் கட்டி கோயிலுக்கு எடுத்து வரவேண்டும்.
முதலில், கொடி மரத்து விநாயகருக்கு ஒரு விளக்கேற்றி வழிபட்ட பின்னர், அம்பாள் தர்மசம்வர்த்தினிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். அடுத்ததாக, மூலவர் அருள்மிகு பூமிநாத சுவாமிக்கு இரண்டு தீபங்கள் ஏற்றி, பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் மண்ணை பூமிநாத சுவாமி மீது வைத்து அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கோயிலை ஒருமுறை வலம் வந்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் போடவேண்டும்.
கோயிலை இரண்டாவது முறை வலம் வரும்போது, வன்னி மரத்தடியில் இருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்து அதை மஞ்சள் துணியில் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், வன்னி மரம் நீரோட்டமுள்ள ஈசான்ய மூலையில் அமைந்துள்ளது என்பதுடன், இங்கு வருடந்தோறும் மார்கழி மாதம், ஞாயிற்றுக் கிழமைகளில் ருத்ர அபிஷேகம், ருத்ர ஹோமம் செய்யப்பட்ட மணல் வன்னி மரத்தின் அடியில் போடப்பட்டு வருகிறது. அந்த மண்ணை பரிகார மண்ணாக பக்தர்கள் எடுத்துச் செல்வதால், அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. மூன்றாவது முறை கோயிலையும், நவகிரகங்களையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
அடுத்தநாள் காலையில், புதன் ஹோரை நேரத்தில், நம் நிலத்தில் நாம் எற்கெனவே மண் எடுத்த ஈசான்யத்தில் கோயிலில் இருந்து கொண்டு வந்த மண்ணைக் கொட்டி, கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். மண் எடுத்து வந்த மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை முடிந்து, வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். நமது பிரார்த்தனை நிறைவேறியதும், அருள்மிகு பூமிநாத சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். நாம் எற்கெனவே முடிந்து வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தை பூமிநாத சுவாமிக்கு சமர்பிக்க வேண்டும்.
வீடு வாங்குதல், வாஸ்து தோஷம், சொத்து பாகப் பிரச்னைகள், தென்-வட மூலை உயரம், ஜென்ம சாபம், பாப தோஷம், பூமி குற்றம், பில்லி சூன்யம், ஏவல், எந்திரம், மந்திர தோஷங்கள் உட்பட 16 வகையான பூமி பிரச்னைகளுக்கு, இத்தலத்து இறைவனை வழிபடுவதால் நற்பயன் விளைகிறது. அருள்மிகு பூமிநாத சுவாமி கோயிலுக்கு வந்து வணங்கினாலே அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும் என்று அகத்தியர் நாடியில் கூறப்பட்டுள்ளது.

ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய !!!

ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய !!!

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு 12ம் இடம். அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச்சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச்சனி என்பார்கள். அந்தக் காலக்கட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைவாக இருக்கும்.

ராசிக்கு 12ம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரையாண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப் படைக்கும் சனி பகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழிவகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. ஊரு விட்டு ஊரு போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பார்ப்போம்.

சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி புனுகு பூசி, கறிவேப்பயிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமீட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

ராசி 12ல் சனியிருக்கும் போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சை பழத்தின் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும், ராசிக்கு 2ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும், தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதைப் போக்க, திங்கட் கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகுப்பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் விலகும்.

நவகிரக தலங்களில் முதன்மையான சூரியனார் தலம்!!!

நவகிரக தலங்களில் முதன்மையான சூரியனார் தலம்!!!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும், நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக “சூரிய தேவன்” இடப்புறம் உஷா தேவியுடனும், வலப்புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்.
இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 12 ஞாயிற்று கிழமைகள் இத் தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு.
பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன். சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம் இருப்பதாலும், பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும், சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ நிவர்த்தி பெறலாம்.
சிவ சூரிய நாராயணனாக சூரிய பெருமான் குடி கொண்டுள்ள இத்தலத்தில் உட் பிரகாரத்தில் மற்ற எட்டு நவக்கிரக நாயகர்களும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். மற்ற ஆலயங்களை போலல்லாது இத்திருத்தல வழிபாடு சற்றே வேறுபட்டது. மனதில் எப்படிப்பட்ட சஞ்சலங்கள் இருந்தாலும், எத்தகைய ஆபத்துகளில் அகப்பட்டு கொண்டாலும், தாங்க முடியாத துயரங்கள் ஆட்கொண்டாலும் “ஆதித்ய ஹிருதயத்தை ” மனத் தூய்மையுடன் பாராயணம் செய்தால் துன்பங்கள் விலகும்.
இந்த ஆலயத்தின் வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள “திருமங்கலக்குடி” சென்று “பிராணவரதரையும்”, அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும். பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.
அதன் பிறகு, வெளிப்பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும்.
கடைசியாக சுக்கிர பகவானையும், ராகுவையும் வழிபட வேண்டும். மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக (மற்ற ஆலயங்களை போல வலமாக அல்ல) வலம் வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.
தோஷ நிவர்த்தி : ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம்: காலை 6 முதல் 11 வரை, மாலை 4 முதல் இரவு 8 வரை திறந்திருக்கும்.

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

திருமணம்….! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது.
திருமணம்…! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும்.

தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர வேண்டும்.

இன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.

திருமணம் செய்ய என்ன வேணும்? அதில் என்ன சந்தேகம். ஒரு ஆணும் பெண்ணும் வேண்டும். குட். ஒரு திருமணம் நடக்க, ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. மறுக்கவில்லை. இந்த இருவர் மட்டும் இருந்து விட்டால் கல்யாண கதவு திறந்து விடுமா?
முடியாது ராஜா முடியாது. அதற்கு மகத்தான கிரக பலம் வேண்டும். கிரக பலம் என்பது கால நேரம். அந்தக் கால நேரம் ஒத்துழைத்தால் மாலை சூடலாம், மணமேடை ஏறலாம்.

என்ன ஒய்… உம்ம பாஷையில் கால நேரம் என்பது திருமண திசையாக்கும். எஸ்… அதே…அதே..
ஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் திருமண யோகம் வராது.
சரிங்க… திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை ரெடி. திருமணம் செய்து விடலாமா?
அதெப்படி… …. குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டாமா?

அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். .
சாரி. நாம் அதை பற்றி வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம். இப்போ சனி பகவானின் ஓரப் பார்வையாவது உங்கள் மீது விழுகிறதா என்று பார்ப்போம்.

சனி பார்வையா… ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.
டோன்ட் ஒர்ரி. சூரிய புத்திரன், கர்ம வினை கிரகம், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர் என்று சொல்லப்பட்டாலும், அவர் தர்மத்தின் தவ புதல்வன். தர்ம தேவனின் மறுவடிவம். அவர் சாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்தால் காலம் உங்கள் காலடியில் இருக்கும்.

சாதகமான இடம் என்றால் மூன்று, ஆறு, பதினொன்றா?
கரெகட்.

ஆனாலும் ஏழரை சனி நடக்கும் போதும் மாலையும் கழுத்துமா மணமேடை ஏறலாம் தெரியுமோ.
சரி.. விளக்கமா சொல்லுங்க ஜோசியரே.

பொதுவா…. சாமானிய மக்கள் என்றில்லை. ஜோதிடத்தில் கரை கண்ட பெரியவா கூட, ஏழரை சனி என்றால் எட்டிக்காயை கடித்த மாதிரி தான் ஃபீல் பண்ணுவா.

உக்கார்ற இடத்திலே முள்ளு வச்ச மாதிரி உறுத்துகிற நேரத்திலே… நல்லது நடக்குமா? சனி அதற்கு வழி விடுவாரா? என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரும். அது அனுபவம் தந்த பாடம். ஆனாலும் சுருக்கமா சொல்லப் போனா, சுயம்வரம் செய்ய எந்தத் தடையும் தர மாட்டார். சிலர் சொல்லலாம்.. வேணாம் தம்பி இந்த விஷப் பரிட்சைன்னு… கொஞ்சம் .பொறுங்கோ.
சரி …. ஏழரை சனின்னா என்ன? பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம். கையில மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு. கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு. சேர்த்து வச்சதை செலவு செஞ்சு வீடு கட்டு. அப்படி செய்துட்டா…. சனி பகவான் ஒன்னும் செய்யமாட்டார். பொழைச்சு போன்னு விட்டுடுவார். அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல பணத்தை போட்டா, விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க வைப்பார். கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.

சரிங்க….. இந்த வாதம் சரியா?
சரிதான். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது. எப்படி?
ஏழரை சனி, வாழும் காலத்தில் மூன்று முறை வரும். நம் தாத்தா காலத்தில நாலு முறை வந்துச்சு. அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க. இப்போ நாம சாபிடுற சாப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு முடிவுக்கு வருகிறது ஆயுள். முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, முன்றாவது சுற்று மரண சனி.
இருக்கட்டும்…. ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்யலாமா? எப்போதுமே….. அல்லல் படுத்தி ஆனந்தப் படுகிற சனி. கேள்வி கேட்டவரை பதில் சொல்ல வைக்கிற சனி. அடுத்தவங்க கல்யாணத்தைப் பார்த்து ஆனந்த பட வைக்கிற சனி, மாப்பிள்ளையாக மணப்பந்தலில் அமர வேண்டியவரை, மாப்பிள்ளைத் தோழனாக நிற்க வைக்கும் சனி, கல்யாண யோகத்தைத் தருவாரா?

தருவார் என்பது உண்மைதான். அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.
ஏழரை சனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும். முதல் சுற்றில் திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனாலும் பொறுத்தால் நல்லது. இன்னும் கொஞ்சம் சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்.
ஏழரை சனி என்பது ராசிக்கு பனிரெண்டு இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி ராசிக்கு வந்தால் ஜென்ம சனி, அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு போனால் குடும்ப சனி என்பார்கள் சரியா?
இப்போ 12இல் இருந்தால் ஓகே.

ஏழரை சனிதானே. செலவு செய்யும் நேரம் தானே.. என்று ஜென்ம ராசியில் சனி இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. அது முதல் சுற்று என்றில்லை. அது எந்த சுற்று சனியாக இருந்தாலும், சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் மட்டும் செய்யக்கூடாது.

செய்தால்?
திருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்துக் கொள்ளும். குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம். மாங்கல்ய பலம் குறையலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில் சந்தோசம் நீங்கி, சந்தேகம் அதிகரிக்கும். அதனால்… கட்டத்தை பாருங்க. கால நேரத்தை கணிங்க. அப்பறம் திருமணத்தை பற்றி யோசிக்கலாம். சரியா.

சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் !!!

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர் !!!

1.மூலவர் : சனீஸ்வரன்
2.சிறப்பு : சுயம்பு
3.தல மரம் : விடத்தை
4.தலபுஷ்பம் : கருங்குவளை
5.தலஇலை : வன்னி இலை
6.வாகனம் : காகம்
7.தானியம் : எள்
8.ஊர் : குச்சனூர்
9.புராணப்பெயர் : செண்பகநல்லூர்
10.மாவட்டம் : தேனி
பிரார்த்தனை
சனி தோசம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்தி கடன்
பகவானுக்கு எள்விளக்கு போடுதல், காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோயிலின் சிறப்பம்சம்
*கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனுõரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் தான்
தல பெருமைகள் :
* சனிபகவானுக்கு பிரம்மகதி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம்.
* சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.
* அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகி றது.இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.
* சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.
*தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் சனி பகவான் கோயி லுக்கு வந்து செல்கின்றனர்.
தல வரலாறு :
தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான்.அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது.அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரோடு வளர்ந்தான்.அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான்.புத்திசாலியான வளரப்பு மகன் சந்திரவதனுக்ககே முடி சூட்டப்பட்டது.இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது.இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான்.
வளரப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான்.சனீஸ்வர பகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாளிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாக கூறி பல கஷ்டங்களை கொடுத்தார்.பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களை பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை காரணம் என்று கூறி மறைந்தார்.பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறுகிறது.இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.
முக்கிய திருவிழாக்கள்
*5 வார ஆடிப் பெருந்திருவிழா.
*2 1/2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவின் போது கோயிலில் கூடுவர்
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம்:
தேனி 30 கி.மீ.
மதுரை 100 கி.மீ.
தங்கும் வசதி :
குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேனி நகரில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.தேனி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
கட்டணம்: ரூ.200 லிருந்து ரூ.500 வரை.
போக்குவரத்து வசதி:
* தேனியிலிருந்துகுச்சனூருக்கு பேருந்து வசதி உண்டு.
* அருகில் உள்ள ரயில் நிலையம்: தேனி,திண்டுக்கல்,மதுரை
* அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை ஏர்ப்போர்ட்.

சங்கடங்கள் போக்கும் சனீச்வரர் திருத்தலங்கள் !!!

சங்கடங்கள் போக்கும் சனீச்வரர் திருத்தலங்கள் !!!
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.
இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசிப்பதற்கு முன், நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார். சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள இவரது முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம். இந்த விநாயகரின் முதுகில் "நாளை வா' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு "முதுகைப் பார்' என்கிறார். அவர் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறும்.
இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். இவரைத் தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் ஏறுவதற்கு முன் ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யலாம். இதனால் நம் தோஷங்கள் நீங்கும் என்பர்.
இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார்.
"பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்' எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கி றார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.
இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளி வளாகத்தில், நவகிரகங்கள் தாங்கள் இருக்க வேண்டிய திசையில், பதினாறு அடி உயரத்தில் (கல் விக்ரகம்) தங்களுக்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது.
இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. மேலும், வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித் தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.
மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார்.
இத்திருத்தலம் திண்டிவனத் திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி கிரா மத்திற்குச் செல்ல வேண்டும்.
சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப் பது சிறப்பாகும்.
சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு மிகவும் புகழ்பெற்றது. சனி பகவான் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வார் என்று சொன்னாலும், நள மகராஜா விஷயத்தில் சுயநலத்தைக் காட்டிவிட் டார் என்று புராணம் கூறும். அந்த தோஷம் நீங்க, திருநள்ளாறு திருத்தலத்தில் அருள்புரியும் தர்ப்பராண்யேஸ்வரரை வழிபட்டு தன் தவறுக்கான பரிகாரம் கேட்டார் சனி பகவான். தன் தவறை உணர்ந்ததால் சனி பகவானை தியானத்தில் நின்று அருளும்படி கூறினார் சிவபெருமான். அதனால் திருநள்ளாற்றில் சனி பகவான் கண்கள் மூடிய நிலையில் மௌனமாகக் காட்சி தருகிறார். இவரை சாஸ்திர சம்பிரதாயப் படி வழிபட சனியின் தாக்கம் நீங்கும். இவருக்கு அர்ச்சனை செய்தால் அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.
தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி யுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருக்கொள்ளிக்காடு தலம் திருத்துறைப் பூண்டியை அடுத்துள்ளது. இங்கு இறைவன் அக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இறைவி: மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கியதாகப் புராண வரலாறு கூறும். இங்கு சனி பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் அருள்புரியும் இறைவன் வான்மீகநாதர். இறைவி- கமலாம்பிகை. இத்தலத் தில் சனி பகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர். இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்செந்தூர் கோவிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டாலும்; திருச்சி உறையூரில் கூரை இல்லாத சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோவிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டா லும் சனியின் தோஷங் கள் நீங்கும்.
குடந்தை நாகேஸ் வரர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள் புரிகிறார். இத்தலத்தில் உள்ள சனி பகவான், "ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்' என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக்கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனிச் சந்நிதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினி களுடன் தனிச்சந்நிதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்று வதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.
இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை சனிக்கிழமை களில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். ஒரே சமயத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்மரையும் வழிபடுவ தால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
நாமக்கல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேயரும், சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ஆஞ்சனேயரும் மிகவும் உயரமானவர்கள். சக்திவாய்ந்த இவர்களை வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஸ்ரீஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஸ்ரீஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும். திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரும், ஸ்ரீநரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான ஸ்ரீபாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப் பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் "புக்கா பொடி' என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண் டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஸ்ரீஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி.
இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.
புகழ்பெற்ற வைணவத் தலங் களில் தசாவதாரச் சந்நிதி இருக்கும். அங்கு எழுந்தருளியுள்ள கூர்ம
அவதாரத்திற்கு அர்ச்சனை செய்து கற்கண்டு சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தொந்தரவு இருக்காது. சனி பகவானை வழிபடும்போது சொல்ல வேண்டிய சுலோகம்:
"விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.'
மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.

பாரசிட்டமால்

பாரசிட்டமால்


குழந்தைக்கு லேசாக உடம்பு கதகதப்பானால் போதும்... இதுக்கெதுக்கு டாக்டர்?’ என தாமாகவே பாரசிட்டமால் மருந்து கொடுக்கும் பெற்றோர் பலர். ‘பாரசிட்டமால் மருந்து அதிகம் கொடுக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்படுவார்கள்’ என எச்சரிக்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் தலைமை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் அலாஸ்டர்சட்கிலாஃபி. இது பற்றிய நம் சந்தேகங்களைத் தீர்க்கிறார் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம்.

உடலில் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியாகவே காய்ச்சல் வருகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. அந்தந்த தொற்றுநோய்க்கான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கும்போதுதான் முழுமையாக நோய் குணமடையும். மாறாக, காய்ச்சலை குறைப்பதற்காக பாரசிட்டமால் கொடுக்கும்போது தொற்றுநோய்கள் வெளியே தெரியாமல் போய்விடுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். பாரசிட்டமால் மருந்துகளை சிரப்புகள் வடிவில் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவை இனிப்பாக இருப்பதால் அதிகம் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

அடிக்கடி பாரசிட்டமால் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நாளடைவில் கல்லீரல் நஞ்சு, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் பாரசிட்டமால் மருந்துக்கு குழந்தைகளின் உடல் பழக (Tolerance) ஆரம்பித்து, வேறு ஏதேனும் காய்ச்சலுக்காக கொடுக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ளாது. காய்ச்சலும் குறையாது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தகுந்தவாறு மாத்திரையின் வலிமை, அளவு, கொடுக்கும் நேரங்கள் போன்றவற்றை குழந்தைகள் நல மருத்துவரால்தான் கணக்கிட்டு கூற முடியும். மருத்துவரின் பரிந்துரையின்றி, பெற்றோர் தாமாகவே பாரசிட்டமால் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.”

கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை”

கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை” !!!

நன்னிலத்திற்கு அருகில் உள்ளது திருவாஞ்சியம் என்ற திருத்தலம். திருமகள் திருமாலை வாஞ்சித்து(விரும்பி) மணந்ததால் இத்தலத்தைத் திருவாஞ்சியம் என்று அழைத்தனர்.
மயிலாடுதுறை – பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாழவந்தநாயகி உடனுறை வாஞ்சியநாதர் திருக்கோயில். காவிரித் தென்கரைத் தலங்களுள் 70-ஆவது தலம்.
இங்குள்ள இறைவன் வாஞ்சியநாதர். இறைவி வாழவந்த நாயகி, மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலத்திலுள்ள “குப்த கங்கை’ என்னும் தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். கங்கையில் மூழ்கி தங்கள் பாவத்தைப் போக்குவதால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று சிவபெருமானிடம் கங்கை வேண்டினாள். அவரும், தான் மிகவும் விரும்பி இருக்கும் இடமும், பிரளய காலத்திலும் அழிவில்லாத தலமுமான ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து உன் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றார். கங்கையும் இத்தலத்தில் குப்த கங்கை என்னும் தீர்த்தமாக எழுந்தருளியுள்ளாள். எனவே, இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி, இறைவனுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் செய்து நெய் தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.
உலக உயிர்களைக் கொள்வதால் தனக்கு ஏற்படும் பாவம் நீங்க வழி தேடி தலங்கள் தோறும் சென்றார் இயமதர்மராஜன். இறுதியில் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் வேண்டினார். அருட்காட்சியளித்த ஈசன் ஸ்ரீவாஞ்சியம் வா என்று கூற, இயமதர்மனும் அங்கு சென்று ஸ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து பாவச்சுமையில் இருந்து விடுபட வேண்டினார். உலகத்தை இயக்குபவன் நானே! இதில் உன் செயல் ஒன்றும் இல்லை. எனவே, உன்னை பாவம் வந்து சேராது என்று கூறினார்.
மகிழ்ந்த இயமதர்மன் இத்தலத்தில் தான் எப்போதும் சேத்திர பாலகராக இருக்க வேண்டும் என்றும், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தன்னையே வாகனமாகக் கொண்டு இறைவன் உலா வந்தால், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் நீங்கும் என்றும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபடுவோர் மோட்சம் அடைய வேண்டும் என்றும் வேண்டினார். தன்னை வழிபட வருபவர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி எமதர்மனை வழிபடலாம் என்று அருளினார் இறைவன்.
தலவிருட்சம் சந்தனமரம். இயமன் பூசித்துப் பேறு பெற்றதால், இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இங்கு மூவராலும் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.

காதலிப்பவர்களை ஒன்று சேர்க்கும் வீரட்டேஸ்வரர் ஆலயம்

காதலிப்பவர்களை ஒன்று சேர்க்கும் வீரட்டேஸ்வரர் ஆலயம் !!!

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று ஒரு சில கோயில்கள் உள்ளன. இப்படி தனித்துவம் வாய்ந்த கோவில்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் இருக்கும் போது, காதலிப்பவர்களை ஒன்று சேர்ப்பதற்கென்று கோவில் ஏதும் உண்டா என்பது பலரது கேள்வி…..

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பாமல் இருப்பது, தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினத்தில் உள்ள கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்.

அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. இத்திருத்தல மூலவரான சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 26வது தேவாரத்தலம்.

எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். ஆனால் முருகனோ தன்னால் தன் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்றார். கடைசியில் தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் சென்று எப்படியாவது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

எதையும் யோசிக்காமல் ஈசனின் தவத்தை கலைக்க ஒப்புக்கொண்டார் மன்மதன். அதன்படி, சிவபெருமான் மீது அம்பெய்து அவரது தியானத்தை கலைத்தார். எம்பெருமான் மீது கணை தொடுக்க, கோபமடைந்த ஈசன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து விடுகிறார். பஸ்பமாகிய மன்மதனை கண்டு பதறிப்போனாள் ரதி தேவி. அதன்பின் ஈசனிடம் சென்று தன் கணவரை மீட்டுத்தர வேண்டினாள். சிவபெருமானின் அருட்கடாட்சத்தால் மன்மதன் உயிர் பெற்றான். ஈசன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆலயம் திறக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஆலய முகவரி: அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை – 609 203, நாகப்பட்டினம் மாவட்டம்.

மருத்துவ குணம் கொண்ட மேலக்கொழுந்துமா மலை முருகன்

மருத்துவ குணம் கொண்ட மேலக்கொழுந்துமா மலை முருகன் !!!

திருநெல்வேலி மாவட்டம், புதுக்குடி, காருகுறிச்சி கிராமங்களுக்கு அருகில் உள்ள மேலக்கொழுந்துமா மலையில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம்.

பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு அருள்செய்யும் விதமாக மேற்கு நோக்கி பாலசுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் இங்கு முருகன் அருள்பாலிக்கிறார். இம்மலையிலேயே பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு கொழுந்தே கொழுந்துமா மலை எனப் பெயர் பெறக்காரணமாக அமைந்ததாக தெரிய வருகிறது. இம்மலையில் சிறப்பான மருத்துவ குணம் கொண்ட செடிகொடிகள் நிறைந்துள்ளன.

சிறப்புமிக்க இத் திருக்கோயிலில் தினசரி பூஜைகளுடன் கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், பௌர்ணமி, மார்கழி மாத பூஜைகள் கொண்டாப்பட்டு வருகின்றன. திருக்கார்த்திகை தினத்தில் மலையின் உச்சியில் பெரிய அகழி ஒன்றில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான ஒன்றாகும். விழாக்காலங்களில் பக்தர்கள், பால்குடம், காவடி, தலைமுடி காணிக்கை தருதல் போன்ற பிரார்த்தனைகளை செய்கின்றனர். மலையைச் சுற்றி வரும் வழியில் காணப்படும் நீர் ஊற்றுகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன.

மேலும் இம் மலையினின்று பார்த்தால் மேற்கே எழில்மிகு பொதிகை மலையும், தெற்கே வெள்ளி மலைத்தொடரும், வடக்கே பல ஊர்களும் அருமையான வயல்வெளி, தோப்புத் துரவுகளும் காணக்காண ரம்மியமாக இருக்கும். இக்கோயிலை இங்குள்ள மக்கள் மலைக்கோயில் என்கிறார்கள்.

திருநெல்வேலியிலிருந்து சேரன்மாதேவி வழியாக வடக்கு காருகுறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துகளில் புதுக்குடி என்னுமிடத்தில் இறங்கி ஆலயத்திற்குச் செல்லலாம்.

கல்விச் செல்வத்தை அளிக்கும் அட்சரபுரீஸ்வரர்

கல்விச் செல்வத்தை அளிக்கும் அட்சரபுரீஸ்வரர்!!!

கும்பகோணம் – சுவாமிமலை சாலையில் புளியஞ்சேரிக்கு அருகே 2.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அட்சரபுரீஸ்வரர் ஆலயம்

ஒரு முறை தன் கணக்கர் சுதன்மன் காட்டிய கணக்கில் சோழமன்னனுக்கு ஐயம் எழுந்தது. கணக்கை சரியாகக் காட்டும்படி உத்தரவிட்டான் மன்னன். சரியாகக் காட்டியும் தன் மீது பழி வந்ததே என வருந்திய சுதன்மன், சிவபிரானை வேண்டினார். பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பரமன், சுதன்மன் வடிவத்தில் மன்னனிடம் சென்று அவன் ஐயத்தைப் போக்கினார். இது தெரியாத சுதன்மன் சற்று நேரம் கடந்து, மீண்டும் மன்னனிடம் செல்லவே, “அதுதான் கணக்கை சரியாகக் காட்டி விட்டீரே மீண்டும் எதற்கு வருகிறீர்?‘ என்றான். சுதன்மனுக்கு இறைவனின் லீலை புரிந்தது. அதனை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தனக்குக் காட்சி தந்த பரமனுக்கு ஓர் ஆலயத்தையும் எழுப்பினான். ஐயம் தீர்த்த பெருமானுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்று பெயரிட்டு வணங்கினான்.

இங்கே பெருமான் சுயம்புவாக எழுந்தருளியதால், தான்தோன்றியீசர் எனப்பட்டார். இந்தப் பெருமானே அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்தாராம். இங்கே அம்பிகை கொந்தார்குழலம்மை, சுகந்தகுந்தளாம்பாள் எனப்படுகிறார். அம்பிகைக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும், நித்திய கல்யாணி அம்மனுக்கும் தனி சந்நிதி உள்ளது. எனவே இங்கே இரு அம்பிகை சந்நிதிகள்.

சூரியன் இங்கே சிவபெருமானை வழிபட்டு ஒளி பெற்றான். இனன் என்ற பெயருடைய சூரியன் வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்பது இன்னம்பூர் ஆனதாம். ஐந்து நிலை ராஜகோபுரம். கஜப்பிருஷ்ட விமானம். கிழக்கு நோக்கிய சந்நிதி. கோயிலில் கொடிமரம் இல்லை. இங்கே லிங்கப் பெருமான் மீது ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரிய ஒளி விழும். இதனை சூரியன், பெருமானை பூஜிக்கும் வழிபாடாகக் கருதுகின்றனர்.

“சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடை யான்றனைக் கனியவூன்றிய காரணம் என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே” – என திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 45வது தலம் இது. சோழர்களால் கட்டப்பட்டது.

பிரார்த்தனை: பள்ளியில் சேரும் முன்னர் இங்கே வந்து அர்ச்சனை செய்து குழந்தைகளின் கல்வி சிறக்க வேண்டுகின்றனர். குழந்தைகள் நெல்லில் எழுதவும், ஐந்து வயதுக்கு மேல் உள்ள சிறார்களுக்கு செம்பருத்திப் பூவை தட்டில் பரப்பி எழுதவும் பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறன் இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவு, கூர்மை பெறுமாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

கங்கை வழிபட்ட விஸ்வநாதர்

கங்கை வழிபட்ட விஸ்வநாதர் !!!


மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கே அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது இக்கோயில். சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் ஏழு மகரிஷிகளில் முதன்மையானவர் கன்வமகரிஷி.

“மக்கள் அனைவரும் காசியில், கங்கை நதியான என்னில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். அந்தப் பாவங்கள் என் மீது அமர்ந்து விடுகின்றன. அவை தீர என்ன வழி?” என்று கன்வமகரிஷியிடம் வருந்தினாள் கங்கை. அவளிடம் துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் மாயூரம் சென்று காவிரியில் நீராடினால் உன் பாவம் தீரும் என்றார் கன்வமகரிஷி. அதன்படி மயிலாடுதுறை வந்து காவிரியில் நீராடினாள் கங்கை. காசியில் இருந்து கன்வரிஷி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த விஸ்வநாதரையும் வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள்.

இக்கோயிலில் வேறு எங்கும் காணமுடியாத ஸ்ரீநடராஜர் ரகசிய யந்திரம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் விசாலாட்சியை வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை

கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை !!!

• கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.
• கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
• வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
• கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணியக் கூடாது.
• சோம்பல் முறித்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
• பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்லவதை தவிர்க்கலாம்.
• போகின்ற போக்கில் ஒரு கையால் வணங்கி விட்டு செல்லக் கூடாது.
• மேலே துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
• நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
• கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
• கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.
• பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
• அஷ்டமி, நவமி, அமாவசை, பௌர்ணமி, மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.
• ஆலயத்தில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
• தெய்வ வழிபாடு ஈர துணி உடுத்தக் கூடாது.
• கோவிலுக்குள் குளிக்காமல் செல்லக் கூடாது.
• சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.
• கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கால்களை கழுவ வேண்டும்
• கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.
• கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.
• ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.
• கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.
• நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்யும் படி இருக்கக் கூடாது

உணவுக்கு நமஸ்காரம் !!!

உணவுக்கு நமஸ்காரம் !!!


உண்ணும் உணவை நிந்திக்க கூடாது. குறை சொல்லி இகழக் கூடாது! நிந்தித்தால் சரியான நேரத்துக்கு வாழ்நாள் முழுவதும் உணவுக் கஷ்டம் ஏற்படும்.

குறை சொன்னால் அடுத்த பிறவியில் தரித்திரனாய் பிறக்க நேரும். உணவு பரிமாறுபவர் உணவைத் தொட்டு வணங்கி இந்த உணவை வழங்கிய இறைவா இந்த உணவினால் தீய உணர்ச்சிகள் ஏற்படாதவாறு அருள்புரிய வேண்டும்.

உணவு மயமான குண்டலினி சக்தியோ; அன்ன பூரணி மாதா உங்களுக்கு நமஸ்காரம்; இந்த உணவு தினசரி கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று சொல்லித் தொட்டு வணங்கிய பின்தான் பரிமாற வேண்டும்.

உணவு உண்பவரும் இவ்வாறு செய்த பின் தான் உணவு உண்ண வேண்டும். இதனால் குண்டலினி எழும் ஆற்றல் உண்டாகும். நல்லவர்கள் பாராட்டும் நல்லவராக விளங்குவோம்.

5 வகை நமஸ்காரங்கள் !

ஐந்து வகை நமஸ்காரங்கள் !


1. தலை மட்டும் குனிந்து வணங்கும் முறை ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.

2. இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குவது த்ரியங்க நமஸ்காரம் ஆகும்.

3. இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பதிய வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். (பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.)

4. அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இரு கைகள், இரு செவிகள், இரண்டு முழந்தாள், மார்பு என எட்டு அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது ஆகும்.

5. தலை, இரு கரங்கள், இரு முழந்தாள், மார்பு என ஆறு அங்கங்கள் நிலத்தில் படுமாறு வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

இயல்பாய் இரு!

இயல்பாய் இரு!


ஒரு அரசன் ஜென் குருவைக் காண்பதற்காக வந்தான்.

குருவே! ஜென் என்பது இயல்பாய் இருத்தல் என்பதுதான் இல்லையா? என்று அரசன் கேட்டான்.
அதற்கு குரு மவுனமாக ஆம் என்று தலையசைத்தார்.

இயல்பு என்பது மனதை பொறுத்த விஷயம் அல்லவா?’ மன்னனிடம் இருந்து அடுத்த கேள்வி வந்தது.
அதற்கும் குருவிடம் இருந்து தலையசைப்பே பதிலாக கிடைத்தது.

அரசனுக்கு அடுத்த சந்தேகம், அப்படியானால் ஜென் மார்க்க உபதேசத்தின்படி மனமே புத்தர். அப்படித்தானே? என்றான்.
நான் இதற்கு இல்லை என்று பதில் சொன்னால் உலகமறிந்த ஓர் உண்மையை மறுப்பது ஆகிவிடும். ஆமாம் என்று சொன்னால் உங்களுக்கு தெரியாத விஷயத்தைத் தெரிந்து கொண்டதாக நினைப்பீர்கள் என்றார் குரு.

மன்னனின் கேள்வி முடிந்தபாடில்லை, அவன், ‘உங்களைப் போன்ற ஞானிகளும் மரணத்தைத் தவிர்க்க முடியாது. இல்லையா? என்றான்.

ஆம் என்றார் ஞானி.

அப்படியானால் செத்த பிறகு நீங்கள் எங்கே போவீர்கள்? என்றான் தெளிவு பெறாத மன்னன். தெரியாது என்றார் குரு.
என்னது தெரியதா? என்றான் மன்னன்.

ஆமாம். தெரியாது. ஏனென்றால் நான் செத்ததில்லை! என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இறந்த பின் என்ன நடக்கும் என்று அஞ்சுவதைக் காட்டிலும், வாழும்போது எப்படி பயனுள்ள முறையில் வாழ்வை செலவிடுவது என்பதே சிறந்த சிந்தனை. அதை விடுத்து நாம் செய்யும் விவாதம் எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது.
வாழ்க்கையிலும் இயல்பாகவே இருத்தல் வேண்டும்.

கடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு!!!

கடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு!!!

தமிழகம் என்றாலே கோயில்கள் மயம்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. புகழ்பெற்ற சிவன் கோயில்களில் நவகிரக சந்நிதிகளும் உள்ளன. ஆனால், தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், கடலில் அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியது.
தேவிப்பட்டினத்து நவபாஷான சந்நிதிக்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள்…
அலை பொங்கித் ததும்பும் கடலில் “இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!’ எனப் பெருமாளிடம் வேண்டினாராம் ராமபிரான். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைத்தாராம் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்தத் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இது ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில், ஆதி ஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ள சந்நிதி, கடலடைத்த பெருமாள் சந்நிதி என்ற பெயருடன் அழகாகத் திகழ்கிறது.
இங்கு ஏன் கடல் அலையை நிறுத்த வேண்டும்? ராமபிரான், உப்பூரில் வெயிலுகந்த விநாயகரை வேண்டிவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குக் கேட்கிறது. “சீதையை ராவணன் தூக்கிச் சென்றதற்கு நவக் கிரக தோஷம்தான் காரணம் என்றும், அது போவதற்கு, கடல் நடுவே மணலால் நவக் கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!’ என்றும் அந்த அசரீரி சொன்னதாம்.
அதனால், ராமபிரானும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம் அப்போது, ஸ்ரீமந் நாராயணனை வேண்டிக் கொள்ள, மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறின. ராமனின் வேண்டுகோளால் கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்துவிடுகின்றன. இதனாலேயே, தேவிப்பட்டினம் நவபாஷனம் என்றும், கடலுக்குள் நவக்கிரக சந்நிதி அமையப் பெற்றது என்பதும் சிறப்புக்குரியதாக ஆனது.
என்னதான் புனிதத்துவம் வாய்ந்த இடம் என்றாலும், கடற்கரை பகுதியில் இருந்தே துர்நாற்றமும், அசுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. நீண்ட பாலம் வழியாக நடந்து சென்று, கடல் நீருக்குள்ளான நவக்கிரக சந்நிதியை அடைய வேண்டும். அப்பகுதி முழுவதுமாக கன்னங்கரேலென அடர் கறுப்பு நிறத்தில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அதற்குள் இறங்கித்தான் பக்தர்கள் நவக்கிரக வழிபாடு மற்றும் தோஷங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தத் தலத்துக்கான புனிதத்துவம் சிறக்கும்.
திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக தோஷ நிவர்த்தி என தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நவக்கிரக சந்நிதி நோக்கி வந்து கொண்டேயுள்ளனர்.
நவகிரக தோஷம் மட்டுமல்லாது, ராமபிரான் சனியின் பாதிப்பில் இருந்தும் விடுபட்டார் என்று ஒரு புராணக் கதையும் இங்கே உண்டு. இங்கே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். சிவபெருமான் திலகேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி செளந்தரநாயகியாகவும் காட்சி தருகின்றனர்.
இந்த நவகிரக சந்நிதிக்கு, நவபாஷனக் கோவில் என்று ஒரு பெயரும் உள்ளது. பாஷனம் என்றால் கல். நவ தானியங்களைக் கொண்டு இந்தக் கற்களுக்கு பூஜைகள் செய்யப் படுகின்றன. அமாவாசை நாட்களில் ஏராளமானோர் இங்கே குவிகின்றனர். மூதாதையரை வழிபட்டு, சாப விமோசனம் அடைகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

நந்திகேஸ்வரரின் ஆணவம்….!!!

நந்திகேஸ்வரரின் ஆணவம்….!!!


நந்திமேல் அமர்ந்தபடி சிவபெருமான் ஒரு முறை பூமியை வலம் வந்தார். அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனை நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த கர்வத்தை நந்தியிடமிருந்து அகற்ற நினைத்த இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஆணவம் உண்டான போது – அதாவது இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியைக் கூட பாரம் தாங்க முடியவில்லை.

இறைவன் அருளால் தான் அனைத்தும் நிகழ்கின்றன. இறைவன் இல்லாமல் எந்த உயிராலும் எதையும் செய்ய முடியாது.

பிரார்த்தனை செய்வோம்……..!!!

பிரார்த்தனை செய்வோம்……..!!!

பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? அதற்கான 10 அம்சங்கள்…

* நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது மனதில் எந்த சலனமும் இல்லாது கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.

* இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.

* பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும் கடவுள் உங்கள் எதிரே இருப்பதாக நினைத்து ‘குட்டி’ பிரார்த்தனை அடிக்கடி செய்யுங்கள்.

* எப்போதும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கடவுள் ஏற்கெனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.

* உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு கடவுளின் அன்மையும், பாதுகாப்பையும் தரும் என்று நம்புங்கள்.

* பிரார்த்தனையின் போது கசப்புணர்வும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.

* கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள். ஆனால் அவர் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் கேட்டவைகளை விட அவர் கொடுப்பது சிறந்ததாகவே இருக்கும்.

* ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம்.

* உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரியாக நடத்தாதவர்களும், நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள்.

* யார் யாருடைய நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், அதைவிட அதிகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும்