இனியெல்லாம் ருசியே! - சந்தேகங்களும்... தீர்வுகளும்

இனியெல்லாம் ருசியே! - சந்தேகங்களும்... தீர்வுகளும்!!!

சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதற்கும், உங்கள் சமையல் மேலும் பிரமாதமாக அமைவதற்கும் உதவும் வகையில் சமையல் கலையில் சிறந்து விளங்குபவர்கள் ஆலோசனை கூறும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு வழிகாட்ட வருபவர் ராஜேஸ்வரி கிட்டு.

முட்டை சேர்க்காமல் பான் கேக் மிருதுவாக வருமா?
கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சிறிது குலோப்ஜாமூன் மிக்ஸ் கலந்து, ஒரு வாழைப்பழம் சேர்த்து அடித்து, சர்க்கரை, தேங்காய்ப் பால் கலந்து செய்தால்... பான் கேக் மிகவும் சாஃப்ட்டாக வரும்.

குழம்பு, கூட்டு, பொரியல் செய்யும்போது தேங்காய்க்குப் பதில் என்ன சேர்க்கலாம்?

குழம்பு, கூட்டுக்கு கசகசாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துப் போட்டு இறக்கலாம். பொரியலுக்குப் பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கலக்கலாம்.
வாழைப்பழம் மிகுந்துவிட்டால் எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு சென்ட்டி மீட்டர் கனமுள்ள வில்லைகளாக நறுக்கி, கொஞ்சமாக எலுமிச்சைச்சாறு தெளித்துக் கலந்து, வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் காய வைத்துக் கொள்ளவும். இதை, மிட்டாய் போல் வாயில் போட்டுச் சுவைக்கலாம். கேசரி பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றுக்கு இந்த வில்லைகளை உடைத்து நெய்யில் வறுத்தும் போடலாம்.

ஆப்பம் சாஃப்ட்டாக வர என்ன செய்யலாம்?

ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீரை இரண்டு நாட்கள் மூடி வைத்துப் புளித்ததும், ஆப்பமாவு அரைக்கும்போது சேர்த்துவிடலாம். ஆப்பம் ஊற்றும்போது கொஞ்சமாக ஆப்பசோடா, ஒரு கப் தேங்காய்ப்பால் கலந்து செய்தால்... ஆப்பத்தின் மிருதுத்தன்மைக்கு, பஞ்சு வந்து கெஞ்சும்!

உடல் சூடு தணிய எளிமையான ஜூஸ் ப்ளீஸ்...
சுத்தப்படுத்திய மல்லித்தழை, சிறிது பனங்கல்கண்டு, தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டிப் பருகலாம். விரும்பினால் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் அருந்தலாம்.
வற்றல் குழம்பை ருசிபார்க்கும்போது... சுவை, மணம், எதுவுமே இல்லாதது போல் தோன்றினால், சரிசெய்வது எப்படி?

ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவு புளிக்காய்ச்சல் எடுத்துக் குழம்பில் கலந்துவிட்டால், சுவையும் மணமும் ப்ளஸ் ப்ளஸ்தான்!
அவசரத்துக்குச் செய்ய ஒரு சாண்ட்விச் ரெசிபி தாருங்களேன்...
பிரெட் ஸ்லைஸில் குல்கந்து நிறைய தடவி, சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளுக்குப் பிடிக்கும். இது குளிர்ச்சியும் தரும். பெரியவர்களுக்குக் காரசாரமாக சாண்ட்விச் செய்ய... ஒரு பிரெட் ஸ்லைஸ் மேல் சிறிது புளிக்காய்ச்சல் பூசி, அதன் மேல் தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கேரட் வில்லைகள் வைத்து... மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து சுலபமாக வேலையை முடிக்கலாம்.
கொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால் சில சமயம் ஒருவிதமான வாடை வருகிறதே..?

கொண்டைக்கடலையைக் கழுவி ஊற வைத்தபின், சுமார் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடி கழுவி தண்ணீரை மாற்ற வேண்டும். மறந்துபோய் மாற்றாமல் விட்டு, வாடை வந்தால்... சிறிது கரம் மசாலா சேர்த்துச் செய்தால் சரியாகிவிடும்.

வெயில் காலத்தில் சூடு தணிக்கும் ரசம் எப்படி செய்வது..?

கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு... ரசப்பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் கொஞ்சம் திக்கான தேங்காய்ப்பால், மல்லித்தழை சேர்த்து இறக்கிவிடவும். லேசாக ஆறியதும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... உஷ்ணத்தை தணிக்கும் சுவையான ரசம் தயார்.