வள்ளலார் வாழ்க்கைச் சரிதம் !!!

வள்ளலார் வாழ்க்கைச் சரிதம்  !!!

திருவருட்பிரகாச வள்ளலார் என்று அறியப்படும் ராமலிங்க அடிகள் தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் 05-10-1823 அன்று அவதரித்தார். அவரது பெற்றோர் ராமய்யா பிள்ளை மற்றும் சின்னம்மை ஆவர். அவரது தந்தை வள்ளலாரின் இளமை பருவத்திலேயே இறந்துவிட்டமையால் அவர்களது குடும்பம் சின்னம்மையின் சொந்த ஊரான பொன்னேரிக்குக் குடியேறியது. இரு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சென்னைக்கு இடம் பெயர்ந்தனர்.

ராமலிங்க அடிகளின் மூத்த சகோதரர் குடும்பத்தை தன் வருமானத்தில் காப்பாற்றி வந்தார். அவர் வள்ளலாருக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தபோதிலும் வள்ளற்பெருமானுக்கு கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. அவர் மற்ற சிறுவர்களைப் போல் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடவும் இல்லை.  அவரது எண்ணமெல்லாம் இறை வழிபாட்டிலும், இறையருளை நாடுவதிலும் மட்டுமே இருந்தன.  தவிர, வள்ளலாருக்கு இளமையிலேயே தமிழில் அற்புதமான புலமை இருந்தது. சிறுவயதிலேயே பல இறைப்பாடல்கள் புனைந்தார். ஒரு கட்டத்தில் வள்ளலாரின் தமையனாருக்கு வள்ளற்பெருமானின் மகிமை விளங்கியதால் அவரது போக்கிலேயே விட்டுவிட்டார்.

வள்ளலாருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லையெனினும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி மணம் புரிந்து கொண்டார். எனினும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை.  வள்ளற்பெருமானே தனது பாடல்களில் தாம் ஒன்பது வயதில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதையும் பன்னிரு அகவையால் தம் ஞான வாழ்க்கை தொடங்கியது பற்றியும் தெரிவித்துள்ளார். ஆரம்ப கால கட்டங்களில் அவர் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தபோதிலும் பின்னாளில் சமய மத தெய்வங்களை விடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கினார்.

1858-ல் வள்ளலார் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று அவரது சொந்த ஊரான மருதூரின் அருகே உள்ள கருங்குழி என்னும் சிற்றூரில் உறையத் தொடங்கினார். பலரின் நோயைத் தீர்த்தது, நீரால் விளக்கெரித்தது, வெறுங்கையால் மண்ணை தோண்டி நீரூற்றை வரவழைத்தது முதலிய பல்வேறு அதிசயங்கள் அவரால் அங்கு நிகழ்த்தப்பட்டன.

வள்ளற்பெருமான் தமது கொள்கைகளான ஜீவகாருண்ணியம், கொலை புலை தவிர்த்தல், ஒரிறை வழிபாடு முதலியவற்றை பரப்புவதற்காக 1865-ல் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தார். அதேபோல், ஏழை எளியோர்களின் பசியாற்றும் பொருட்டு 1867-ல் வடலூரில் தருமச்சாலை தொடங்கினார்.

காலப்போக்கில் வள்ளலார் தனது நெருங்கிய சீடர்களே தமது கொள்கையை அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பின்பற்றாததாலும், மக்கள் கூட்டம் வடலூரில் குவியத் தொடங்கியதாலும், தனிமையை நாடி அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு உறையத் தொடங்கினார். அங்கு தாம் தங்கியிருந்த இல்லத்திற்கு சித்தி வளாகம் என்று பெயரும் இட்டார். பெயருக்கு ஏற்றாற்போல் அவ்விடம் அவருக்கு சித்தியடைவதற்கான இடமாகவே இருந்தது. வள்ளலார் சாகா வல்லமையும், முத்தேக சித்தியும் பெற்றவர். அவ்வுடலையே ஆண்டவர் உறைவிடமாக மாற்றி இறையோடு ஒன்றறக் கலந்தவர்.  தம் வாழ்க்கை நிலை, தாம் கண்டறிந்த உண்மைகள், அனுபவங்கள் ஆகியவற்றை அவர் பல்வேறு பாடல்களாக வடித்துள்ளார்.  அவை திருவருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன.  அவர் தம் அக அனுபவத்தின் புற வெளிப்பாடாக சத்திய ஞான சபை கட்டியருளினார்.

வள்ளலார் ஸ்ரீமுக வருடம் தைப்பூசத்தன்று (ஜனவரி 30, 1874)  சித்தி வளாகத்தில் உள்ள தமது அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரானார்.

வள்ளற்பெருமானார் இன்றளவும் சன்மார்க்கத்தை நடத்துவிப்பவராகவும், சன்மார்க்கிகளுக்கு தோன்றாத்துணையாகவும் இருந்து வழிநடத்தி வருகிறார்.

====================================================

ஜீவகாருண்ணியம் !!!

அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதல் படியாக இருக்கின்றது. ஆதலால் இதை பாதுகாக்க வேண்டும்.

எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்த வேண்டும்.

சீவர்களுக்கு சீவர்கள் விஷயமாக உண்டாகும் ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்

நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதற்கு பல பெயர்கள் உள்ளன, அவை

பிந்துஸ்தானம்

அறிவிடம்

பாலம்

லலாடம்

முச்சுடரிடம்

முச்சந்திமூலம்

முப்பாழ்

நெற்றிக்கண்

கபாடஸ்தானம்

சபாத்துவாரம்

மகாமேரு

புருவமத்திய மூலம்

சிற்சபை

ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும், அன்பும் உடனாக விளங்கும். அதனால் உபகார சக்தி விளங்கும், இந்த உபகார சக்தியால், எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசுவென்பது

மரணமே நித்தியப் பிரளயம்

புலால் எந்த வகையிலும் புசிக்கக் கூடாது

ஜீவகாருண்ணியம் என்னும் திறவுகோல் கொண்டே மோட்சவீட்டில் நுழைய முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளல் பெருமான்.

அருந்தல் பொருந்தல் சமமானால் மரணம் வராது.

ஜீவகாருண்ணியத்தின் முக்கிய லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ணியம் உண்டாவதற்கு துவாரம் யாதெனில் கடவுளின் பெருமையையும் நமது சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தல்.

தாகம், இச்சை, எளிமை, பிணி மற்றும் பயம் இவற்றால் வரும் துன்பத்தை நீக்குதல் அபரசீவகாருண்ணியம்

பசி, கொலை, இவற்றால் வரும் துன்பத்தை நீக்குதல் பரசீவகாருண்ணியம்.

தம் குடும்பத்தை பசியால் தவிக்கவிட்டு அயலார்க்கு பசியாற்றுதல் கடவுளுக்கு சம்மதமல்ல

நரக வேதனை, சனன வேதனை, மரண வேதனை மூன்று வேதனைகளும் கூடி முடிந்த வேதனையே பசி வேதனை

பகலில் எந்த வகையிலும் நித்திரை ஆகாது.

எப்பொழுதும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும்

அகத்தில் ஆன்மா தனித்திருக்கும். ஜீவன் மனமுதலிய அந்தகரண கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.

கடவுளை ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும்.

சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துக்களாகிய சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிரம் முதலிய பஸ்பம் ஆகியவற்றையே உட்கொள்ளவேண்டும்.