பேடிஎம்-இல் (PAYTM) சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி?

பேடிஎம்-இல் (PAYTM) சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி?


பேடிஎம் நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக பேடிஎம் வங்கியை துவங்கியுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 500 மில்லியன் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் கணக்கில் உள்ள இருப்புத்தொகைக்கு 4% வட்டி வழங்கப்படுவதாகவும், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்றும், அதே நேரத்தில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேடிஎம் தெரிவித்துள்ளது.

பேடிஎம் சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்படி?

முதலில் பேடிஎம் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது அழைப்பினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படவுள்ளது. அதாவது வங்கி ஊழியர்களுக்கும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு பேடிஎம் வங்கியின் பீட்டா செயலி தரப்படும்.
இந்த வங்கியில் கணக்கு தொடங்க விருப்பம் உள்ளவர்கள் பேடிஎம் பேமெண்ட் வங்கியின் இணையதளத்தில் இருந்தோ அல்லது பேடிஎம் ஆப்பிள் ஐஒஎஸ் செயலியில் இருந்தோ விருப்பம் தெரிவிக்க வேண்டும். அவர்களுடைய விருப்பத்தை ஏற்று பின்னர் கணக்கை தொடங்கிக்கொள்ள அனுமதிக்கபப்டுவர்.

ரூ.250 கேஷ்பேக் பெறுவது எப்படி?

இந்த பேடிஎம் வங்கியில் கணக்கு தொடங்குபவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25000 டெபாசிட் வரும்போது அவர்கள் ரூ.250 கேஷ்பேக் பெறுவதற்கான தகுதியை பெறுவர். மேலும் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு IMPS மற்றும் NEFT பணப்பரிவர்த்தனைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

ஜீரோ பேலன்ஸ்

மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் அனுமதி தரப்படுகிறது. மேலும் சேமிப்புக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் இருப்புத்தொகைக்கு 4% வட்டி வழங்கப்படும். அதுமட்டுமின்றி வணிகர்களுக்கு உதவும் வகையில் மிக விரைவில் கரண்ட் கணக்குகளும் தொடங்க ஏற்பாடு செய்யப்படும்
புதிய கிளைகள் மற்றும் சேவைகள்

முதலாவது ஆண்டில் நாடு முழுவதும் 31 வங்கி கிளைகளும் 3000 வாடிக்கையாளர் சேவை மையமும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியக ரூபேய் டெபிட் கார்ட் வழங்கப்படும்.

இந்த கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள எந்த ஏடிஎம் மையங்களிலும் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்ளலாம்.

சீனா, ஜப்பான்

சீனாவின் அலிபாபா, ஜப்பானின் சாப்ட் பேங்க், ஆகிய நிறுவனங்களின் முதலீட்டில் இயங்கும் பேடிஎம் நிறுவனம், இந்த வங்கிகாக சுமார் ரூ.400 கோடியை ஆரம்பகட்ட முதலீடாக செய்துள்ளது.

விரிவாக்கம் மற்றும் போட்டி

இன்னும் இரண்டு வருடங்களில் நாடு முழுவதிலும் இந்த வங்கியின் நெட்வொர்க் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே இதன் கொள்கை. ஏர்டெல் மற்றும் இந்தியா போஸ்ட் ஆகியவற்றை அடுத்து தொடங்கப்படும் வங்கி பேடிஎம் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேகர் சர்மா

பேடிஎம் பேமெண்ட் வங்கி குறித்து இதன் சேர்மன் விஜய்சேகர் சர்மா அவர்கள் கூறியபோது, 'இந்த உலகில் வங்கி தளத்தில் இயங்க எங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
எங்களது வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகை பாதுகாப்பக அரசு பாண்ட்களில் முதலீடு செய்வதில் பெருமை அடைகிறோம். வாடிக்கையாளரின் பணத்தில் ஒரு பைசா கூட ரிஸ்க்கானவற்றில் முதலீடு செய்யப்படாது என்பதை உறுதியளிக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

220 வாடிக்கையாளர்கள்

இப்போதைக்கு இந்த பேடிஎம் வாலட்டில் 220 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வாலட்டில் உள்ளவர்கள் பேமெண்ட் வங்கிக்கு மாற்றப்படுவதோடு அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குவதற்கன KYC என்ற விண்ணப்பம் வழங்கப்படும்.
மேலும் இந்த வங்கி நாடு முழுவதும் KYC நிலையங்களை நாடு முழுவதும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யவுள்ளது. இந்த நிலையங்கள் புதியதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

டெக்னாலஜி மற்றும் திறமை

பேடிஎம் வங்கியின் சி.இ.ஓ ரேனு சாட்டி அவர்கள் கூறியபோது, 'எங்களது வங்கி இந்தியாவின் மிகச்சிறந்த வாடிக்கையாளர்களுக்கு நண்பனாக இருக்கும் வங்கியாக தொடர வேண்டும் என்பதே எங்களது முதல் கொள்கை.
எங்களது டெக்னாலஜி மற்றும் திறமையை பயன்படுத்தி வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 500 மில்லியன் இந்தியர்களை இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக மாற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் எங்களது வங்கியின் வளர்ச்சிக்காக தற்போது நாங்கள் ரூ.400 கோடியை முதலீடு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.