வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்

வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்.

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

முருகப்பெருமானின் கரத்தில் விளங்கும் வேலாயுதம் வடிவாலும், வனப்பாலும், அது செய்யப்பட்ட மூலப்பொருளாலும் புராணச் சிறப்பாலும் அது நிகழ்த்திய வீரச்செயலாலும் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது.

இவ்வகையில் அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கின்றன.

சில வேல்களின் இலைப்பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது.உயர்ந்த இரத்தினங்கள் இழைக்கப்பட்டுச் செய்யப்பட்ட வேல் நவரத்தின வேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல், மாணிக்கவேல் என்றும், வைரக்கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும் முத்துகள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும், அன்பர்கள்பால் அருள்புரியும் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பதால் குணரத்தின வேல் என்றும், மணிரத்தினவேல் என்றும், தங்கமாக எண்ணத்தில் திளைப்பதால் தங்கவேல் என்றும் எதிரிகளைச் சங்கரித்து அழிப்பதால் சத்ரு சங்காரவேல் என்றும் அழைக்கப்படுகிறது.

அவரவர் தகுதிக்கும் வளமைக்கும் செல்வச் செழுமைக்கும் ஏற்ப, வேல்களைப் பொன்னாலும் நவமணிகள் இழைத்தும் செய்து வழிபடுகின்றனர். என்றாலும், வீரர்கள் ஏந்தும் வேல்கள் யாவும் உறுதியான எஃகினால் செய்யப்படுவதாகும். அது கூர்மை மிக்கதாகவும் உறுதி மிக்கதாகவும் வீசி எறிவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

இப்படி அனேக வேல்கள் வழிபாட்டில் இருக்கின்றன.சக்திவேல்வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம் ஆகும். சக்தி என்னும் ஆயுதத்தின் வடிவம் என்பது மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்றதாகும்.

முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில், சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துகிறார். சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும்.

வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச்சிறப்புடன் போற்றப்படுகிறது. அன்பர்கள் சக்திவேல் என்றபெயரைச் சூட்டிக் கொள்கின்றனர். சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும். அதையொட்டியே அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.
தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை

ஏந்தியிருப்பதால், ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார்.
சிக்கல் சிங்காரவேலர், சுவாமிமலை சுவாமிநாதன், வைத்தீஸ்
வரன் கோயில் முத்துக்குமார சுவாமி போன்ற
முருகன் வடிவங்களுக்கு உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது. முருகன் மேற்கரங்களில் வஜ்ரம், சக்தி ஆகிய
இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும்

அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார்.முருகனைப் போலவே அவரது அணுக்கத் தொண்டரும், குகசண்டி என்று அழைக்கப்படுபவருமான சுமந்தரேசுவரர் சக்தியைத் தாங்கியுள்ளார்.

முருகன் ஆலயங்களில் அவனது படைக்கல வழிபாட்டிற்குச் சக்தி ஆயுதத்தையே வைத்துள்ளனர். வேலாயுதத்தை முருகப் பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர் என்பது பலரது கருத்தாகும்.

முருகன் ஆலயங்களில் சக்தி ஆயுதமே அஸ்திரதேவர் என்னும் படைக்கல தெய்வமாகப் போற்றப்படுகிறது. பெருந்திருவிழாவின் போது முருகனின் வீதியுலாவிற்கு முன்பாக சக்தி ஆயுதமே எடுத்துச் செல்லப்படுகிறது.

தீர்த்தவாரி விழாக்களிலும் சக்தி ஆயுதத்தையே நீராட்டி வழிபடுகின்றனர்.சக்ரவேல்இந்திய வழிபாட்டில் மந்திர பீஜங்களை வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவை இணைந்த கட்டங்களில் எழுதி வழிபடும் சக்கரவழிபாடு ஓர் அங்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு தேவதைக்கும் அதன் அருளாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சக்கரங்கள் பல உள்ளன.

இவ்வகையில் வேலாயுதத்தைப் போற்றும் வகையில் அமைந்த பல சக்கரங்கள் வழிபாட்டில் இருக்கின்றன. இவற்றில் சில சக்கரங்களை வேலின் இலை போன்ற பகுதியில் கீறி அமைத்துள்ளனர். சிலவற்றைச் சதுரமான தகட்டில் எழுதி உருட்டி வேலின் தண்டுப்பகுதியில் உள்ள இடைவெளியில் செலுத்தி மூடி விடுவதும் உண்டு.

பொதுவான நிலையில் வேலின் மையத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் அறுகோணத்தை இட்டு அதன் மையத்தில் ஓம் எனும் பிரணவத்தையும் சுற்றியுள்ள ஆறு முக்கோணங்களில் ச, ர, வ, ண, ப, வ எனும் ஆறு எழுத்துகளையும் எழுதி வழிபடுகின்றனர். மேலும், சடாட்சர சக்கரம், சத்ரு சம்ஹார சக்கரம், சக்தி நிலைய சக்கரம் போன்ற சிறப்பு நிலையில் அமைந்த சக்கரங்களையும் வேல் வழிபாட்டில் காண்கிறோம்.

இவற்றில் குறிப்பிடத்தக்கது அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் ஆலயத்திலுள்ள ஆறுமுகவேலவரின் கையிலுள்ள வேலாயுதமாகும். இங்குள்ள ஆறுமுகநாத சுவாமி திருக்கரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் உள்ளது. இதில் பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பவர் இந்தச் சக்கர வேலாயுதத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் செங்குந்த குலத்தில் தோன்றி வாழ்ந்த அழகப்ப முதலியார் குமாரரான பழனிச்சாமி முதலியார் சிறந்த சித்த புருஷராவார். அவர் இந்த ஆலயத்தில் திருமதில், வாகனக் கிடங்கு, பிராகார மண்டபம் முதலியவற்றை முன்னிருந்தபடியே கட்டி குடமுழுக்கு செய்வித்தார் என்பதை இங்குள்ள ஒரு கல்வெட்டால் அறிகிறோம்.

அவர் அமைத்துள்ள இந்தச் சக்கரம் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. இதனை ‘‘சத்ருசங்கார வேல் சக்கரம்’’ என்றும் கூறுகின்றனர்.
மேலும், அருணகிரிநாதசுவாமிகள் அருளிய வேல் வகுப்பை வேல்மாறல் எனும் யந்திரமாக அமைத்தும் வழிபடுகின்றனர். வேல் வகுப்பான பதினாறு அடிகளைத் திரும்பத் திரும்ப மாற்றி மண்டலித்து வரும்படி அறுபத்துநான்கு அடிகளாக விரித்துப் பாராயணம் செய்யும் முறையை, திருப்புகழ் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உண்டாக்கினார்கள். இந்த அமைப்பு வேல்மாறல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வழிபாட்டில் சதுரத்தின் நடுவே அமைந்த வட்டத்தின் நடுவில் ஆறுவேல்களின் வடிவில் எழுதப்பட்ட இதழ்களின் வேல் வகுப்பை எழுதிச் சக்கரமாக அமைத்து வழிபடுகின்றனர். இதில் மூன்று வேல்கள் இலைவேல்களாகவும், மூன்று வேல்களைச் சக்தி வேல்களாகவும் மாறி மாறி வரும்படி அமைத்துள்ளனர். இது வள்ளிமலை சுவாமிகளின் பக்தர்களால் மிகவும் சிறப்புடன் இப்போதும் போற்றப்படுகிறது. இது வேல்மாறல் யந்திரம் ஆகும்.

மந்திரவேல்
*************

முருகன் ஏந்தும் வேலுக்கு உரிய பெயர்களில் மந்திரவேல் என்பதும் ஒன்றாகும். கல்லாடம் எனும் நூல் வேலாயுதத்தை ‘‘உள்ளத்திருளும் இடைபுகுந்து இருள் துடைத்த மந்திரத் திருவேல்’’ என்று போற்றுகிறது.மந்திரம் என்பதற்கு நீங்காது உடனிருந்து
காப்பது என்பது பொருளாகும். தன்னை வணங்கும் அன்பர்களை விட்டு நீங்காது காத்து அருள்புரிவதால் வேலுக்கு மந்திரவேல் என்பது பெயராயிற்று. ‘‘வேலும் மயிலும் துணை’’ என்பது மகாமந்திரம்.

கந்தர்சஷ்டி கவசத்தில் ‘‘மந்திர வடிவேல் வருக வருக’’ என்று பாலதேவராயர் வேலை அழைப்பதைக் காண்கிறோம்.சைவ சமயம் கூறும் மகாமந்திரம் ஐந்தெழுத்தாகிய நமசிவாய என்பதாகும். இதனை‘‘சிவமஞ்செழுத்து’’ எனவும் குறிப்பர். அருணகிரிநாதர் வேலாயுதத்தையே சிவமஞ்செழுத்து என்னும் சொல்லால் குறிக்கின்றார். சிதம்பரத்தில் அருளிச் செய்துள்ள திருப்புகழில் ‘‘வெங்களத்தில் அவுணன் தெரித்து மயங்க சிவமஞ்செழுத்தை முந்த விடுவோனே’’ என்று அவர் பாடுவதைக் காண்கிறோம்.

இங்கே வேல் என்பதற்கு இணையான சொல்லாகச் சிவமஞ்செழுத்து (பஞ்சாட்சரம்) என்று குறித்திருப்பதைக் காண்கிறோம். மணிமந்திர நூலான கந்தர் அனுபூதியின் ஐம்பத்தோரு பாடல்களில் இருபத்தைந்து பாடல்களில் அருணகிரிநாதர் வேலைப் புகழ்கின்றார்.மந்திரவேல் நமக்கு அறிவையும், ஆற்றலையும் நல்கும் அற்புத வேலாக இருக்கிறது.

ரத்தினவேல்
*************

ரத்தினவேல் என்பதற்கு ரத்தினம் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட வேல் என்றும், நவரத்தினங்கள் பதித்த வேல் என்றும் பொருள் கூறுகின்றனர். புகழ் பெற்ற ஆலயங்களில் நவரத்தினக் கற்கள் இழைத்த விலை மதிப்புமிக்க வேலாயுதம் முருகனுக்கு சாத்தப்படுகிறது.நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவ வீரர்கள் ஏந்துகின்றனர்.

இவர்கள் அன்னை பராசக்தி தேவியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய1.மாணிக்கவல்லி, 2.முத்துவல்லி, 3. புஷ்பராகவல்லி,4. கோமேதகவல்லி, 5. வைடூர்யவல்லி, 6. வைரவல்லி, 7. மரகதவல்லி, 8.பவளவல்லி, 9.நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர். அவர்கள், 1. வீரபாகுதேவர், 2. வீரகேசரி, 3. வீரமகேந்திரன், 4. வீரமகேஸ்வரன், 5. புரந்தரன், 6. வீரராட்சசன், 7. வீரமார்த்தாண்டன், 8. வீராந்தகன், 9. வீரதீரன் ஆவர்.

முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர். அவையே நவரத்தின வேல்களாகும். இவை முறையே 1. மாணிக்க வேல் 2. முத்து வேல் 3. புஷ்பராக வேல் 4. கோமேதக வேல் 5. வைடூர்ய வேல் 6. வைர வேல் 7. மரகத வேல் 8. பவள வேல் 9. நீல வேல் என்றழைக்கப்பட்டன.இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்வதை பழைய கால ஓவியங்களில் கண்டு களிக்கலாம். இவர்கள் பகைவர்கள் மீது வேலைச் செலுத்தி வெற்றியை விளைவிக்கும் வீரர்களாகத் திகழ்கின்றனர். மக்கள் முத்து வேல், மரகத வேல், மாணிக்கவேல், ரத்தினவேல் என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

வஜ்ரவேல்
***********

வஜ்ஜிரம் என்பது இந்திரனின் ஆயுதம். இது இரண்டு சூலங்கள் தம்முன் இணைந்தது போல் இருப்பது. இதனைக் குலிசம் என்றும் அழைப்பர். நடைமுறையில் அனேகருக்கு சக்தி, வஜ்ரம் ஆகியவற்றின் வடிவம் தெரியவில்லை. அனேக இந்திரன் வடிவங்களில் அவன் வஜ்ஜிரத்திற்குப் பதில் சக்தி ஆயுதம் தாங்கியவனாகவே காட்டப்படுகிறான். மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்ற வடிவம் கொண்டதே சக்தி ஆயுதம். இது பெண் சக்தியாகும்.

புராணங்களின்படி இந்திரன் சக்தி ஆயுதம் கொண்டவனில்லை. அவன் வஜ்ஜிரம் எனப்படும் குலிசாயுதன் என்றும் வைரப்படையான் என்றும் இலக்கியங்கள் போற்றுகின்றன.

வஜ்ஜிரம் என்பதற்கு அறுக்க முடியாதது, துளைக்க முடியாதது, உடைக்க முடியாதது, சுருக்கமாக எதனாலும் சேதப்படுத்த முடியாததற்கு உரிய பெயராகும். இதை ஒட்டியே வஜ்ர பஞ்ரசம் (வைரக்கூடு) வஜ்ரக்கோட்டை, வஜ்ரதேவன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. எளிதில் வெல்ல முடியாததும், அழிக்க முடியாததுமான உறுதிமிக்க ஆயுதமாக வேல் இருப்பதால் அது வஜ்ரவேல் எனப்பட்டது. மக்கள் வஜ்ரவேல் என்ற பெயரைச் சூடியுள்ளனர்.வஜ்ரவேல் என்பது உறுதி, திண்மை, திறமையின் காரணமாக வேலுக்கு அமைந்த பெயராகும். அது வடிவத்தால் வந்த பெயர் இல்லை.

புராணங்கள் முருகன் ஏந்தும் வேலாயுதத்தை அதன் மேன்மை காரணமாக வஜ்ரவேல் என்று அழைக்கின்றன. மக்கள் உயர்ந்த ஜாதிக்கற்களான வைரத்துடன் பதித்த தங்க வேலையே வஜ்ரவேல் என்றழைக்கின்றனர். அனேக ஆலயங்களில் வைரக் கற்கள் பதித்த வேல்கள் இருக்கின்றன. நடைமுறையில் சக்தி ஆயுதத்தைத் தலைப்பில் கொண்ட சக்திவேலைப் போல வஜ்ராயுதத்தை முகப்பில் கொண்ட வஜ்ராயுத வேல்கள் இல்லை.

தங்கவேல்
***********

தங்கவேல் என்பதற்கு அன்பர்கள் இருவிதமான பொருளைக் கூறுகின்றனர். முதற்பொருள் எளிமையானது. அது உயர்ந்த உலோகமாகிய தங்கத்தால் செய்தது என்னும் பொருளைத் தருவதாகும். இரண்டாவது பொருள், அன்பர்களின் வாழ்வில் செல்வநலன்கள், வளம், மேன்மை போன்றவற்றை எந்நாளும் தங்கி இருக்கும்படி அருள்புரிவதால் வேலுக்குத் தங்கவேல் என்ற பெயர் வழங்குவதாகக் கூறுகின்றனர்.

ஆலயங்களில் தங்கத்தால் வேலாயுதத்தை செய்து முருகனுக்கு சாத்தியுள்ளனர். அதில் மேலும் அழகூட்ட உயர்ந்த ஜாதி வண்ணக் கற்களைப் பொருத்தியுள்ளனர். வேல் வழிபாடு மனதில் மகிழ்ச்சியைத் தங்க வைக்கும் வழிபாடாக
இருக்கிறது.

வெள்ளிவேல்
***************

வெள்ளி தூய்மையான உலோகம். அதனால் அதைக் கொண்டு பூஜைப் பொருட்களைச் செய்து வைக்கின்றனர். வெள்ளியில் செய்த வேலாயுதத்தை முருகனுக்கு சாத்துகின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் வெள்ளியால் செய்த வேலாயுதமும் சேவற்கொடியும் முருகனுக்கு சாத்தப்படுகின்றன. அன்பர்கள் வெள்ளியால் வேலைச் செய்து வைத்து வழிபடுகின்றனர். அனேக அன்பர்கள் இல்லங்களில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் வழிபாட்டில் இருந்து வருகிறது.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை

வேல் முருகா வேல்