தலை குளிக்கும் போது இத முயற்சி செய்யலாம் – பலன் கிடைக்கும்!

தலை குளிக்கும் போது இத முயற்சி செய்யலாம் – பலன் கிடைக்கும்!


உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

குளிக்கும்போது…

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.

தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளபாகவும் இருக்கும்.
மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.

குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வைங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிபாகத்தைவிட வேர்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைம் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

சீப்பு

உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொட சீப்பு முலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சப்பை பயன்படுத்துவது நல்லது.
சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும்.

மசாஜ்

உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இயற்கை தரும் அழகு

நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும்.