விருப்பமோ இல்லையோ, விண்டோஸ் 10 கட்டாயம்

விருப்பமோ இல்லையோ, விண்டோஸ் 10 கட்டாயம்

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? திடீரென ஒரு நாள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, உங்கள் கம்ப்யூட்டரை மேம்படுத்தக் கூடிய பைல்கள் அனைத்தும், உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்களுடைய ஒரு கிளிக் செயல்பாட்டிற்காகக் காத்திருக்கும். “அய்யோ, நான் கேட்கவில்லையே? எனக்கு வேண்டாமே” என்று நீங்கள் சொன்னாலும், விண் 10க்கான பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்திருக்கும்.
தானாக அனுப்பப்படும் இந்த செயல்பாடு,
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, எத்தனை சாதனங்களில் கொண்டு செல்ல வேண்டுமோ, அத்தனை சாதனங்களிலும் அமைத்துவிட மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது. சென்ற ஜூலை வரை, மைக்ரோசாப்ட் இலவச மேம்படுத்துதலை, நம் விருப்பத்தின் அடிப்படையிலேயே வைத்திருந்தது.
ஆனால், சென்ற வாரத்திலிருந்து, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, தேவை எனக் கருதுகிறீர்களோ இல்லையோ, மைக்ரோசாப்ட் பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பி, உங்களை விண் 10 ஐ ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. தானாக, மைக்ரோசாப்ட் இந்த சிஸ்டத்தினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கவில்லை. ஆனால், நீங்கள் தரும் ஒன்றிரண்டு கிளிக்குகளில், சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட மைக்ரோசாப்ட் தயார் நிலைக்கு உங்களைத் தள்ளுகிறது.
இது நல்லதா? சரிதானா? எனப் பார்க்கலாம்
விண்டோஸ் 10 சிஸ்டம், இதற்கு முன் வெளியான விண்டோஸ் சிஸ்டங்களைக் காட்டிலும் பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 8 பயன்படுத்துவதைக் காட்டிலும் இதனைச் செயல்படுத்துவது மிக எளிதானது. (விண்டோஸ் 9 இல்லை என்பது நாம் அறிந்ததே). விண்டோஸ் 10 சிஸ்டம் முதன் முதலாக, அனைத்து வகை டிஜிட்டல் சாதனங்களின் இயக்கத்தினையும் ஒருங்கிணைத்து இயக்கும் சிஸ்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில், இதில் இயங்கும் அப்ளிகேஷன் ஒன்றை நீங்கள் வாங்கினால், உங்கள் போன், எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுக்கான சாதனம் ஆகியவற்றிலும் இது இயங்கும். அப்ளிகேஷன், அது இயங்கும் திரை அகலத்திற்கேற்ப தன்னைத் தயார் செய்து கொள்ளும்.
மேலும், விண்டோஸ் 10 ல் இயங்கக் கூடிய பல புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தற்போது தயாராகி வெளி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, நீங்கள் விண்டோஸ் 10க்கு மாறாவிட்டால், இவை தரும் வசதிகளை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வர்த்தக அனுகூலத்தைப் பொறுத்த வரை, விண்டோஸ் 10, எட்ஜ் பிரவுசர், ஒன் ட்ரைவ் தேக்ககம் மற்றும் தகவல் தொடர்புக்கான ஸ்கைப் பயன்பாடு ஆகியவற்றை விண்டோஸ் 10 சிஸ்டம் இயக்கத்திலேயே கொண்டு வந்துள்ளது.
இதனால், இந்த அப்ளிகேஷன்களில் அனுமதிக்கப்படும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுகிறது. கூடுதலாக ஒன் ட்ரைவ் இடம் வேண்டுவோருக்கு, அதற்கான கட்டணம் பெற்று நிதி பெறுகிறது.
மேலும், அதிகமான எண்ணிக்கையில், வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பயன்படுத்துகையில், சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பலர் வடிவமைக்கத் தொடங்குவார்கள்.
பழைய கம்ப்யூட்டர்களையே பயன்படுத்த முடிவு செய்பவர்கள், பல கோணங்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். குறைந்த வேகத்தில் செயல்படும் ப்ராசசர்கள், பழைய ஹார்ட்வேர் வடிவமைப்புகள், இடம் குறைவான ராம் மெமரி, குறைவான ஸ்டோரேஜ் இடம் ஆகியவை சிக்கல்களைத் தரும். பழைய கம்ப்யூட்டர்களில், நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்படுத்த முடிவு செய்தாலும், விண்டோஸ் 10, முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து முடிவு செய்திடும்.
பதிக்கலாம் என்று முடிவு செய்தாலும், அது வேகமாக இயங்கும் என்பதை உறுதி செய்திட முடியாது.
பழைய கம்ப்யூட்டர்களில் இயங்கிய சில அப்ளிகேஷன் புரோகிராம்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்காமல் போகலாம். எனவே, அவற்றிற்குப் பதிலாக, அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களை மேம்படுத்த வேண்டும். அல்லது புதியதாக வாங்கிப் பதிந்து இயக்க வேண்டும். பழைய கம்ப்யூட்டர்களுடன் இயங்கிய பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பிற சாதனங்கள் விண்டோஸ் 10ல் இயங்குவதற்கு ட்ரைவர்கள் இல்லை என்றால், அவற்றை, இயங்காத, பழைய சாதனமாகத் தான் கருத வேண்டும்.
விண்டோஸ் 10 மேம்படுத்துதலை, பாதுகாப்பினைப் பலப்படுத்தும் ஒரு வழியாகவும் மைக்ரோசாப்ட் மேற்கொள்கிறது.
இதனை சேவை என அழைக்கிறது. தொடர்ந்து அப்டேட் பைல்களை வழங்குகிறது. விண்டோஸ் 10 பதிந்த பின்னர், அந்த கம்ப்யூட்டர்களுக்கு, இந்த மேம்படுத்துதலைக் கட்டாயமாக வழங்குகிறது. புதிய அப்டேட் பைல்களை 'விருப்பப்பட்டால்' என்ற அடிப்படையில் வழங்காமல், 'பரிந்துரைக்கப்படும் தொகுப்புகள்' என்று கூறி அளிக்கிறது. இவற்றை ஏற்றுக் கொள்வதே நலம். இல்லை எனில், கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக் குரியதாக மாறிவிடும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பாதுகப்பு பைல்கள் வழங்கப்படுவது 2020 ஆம் ஆண்டு வரை மட்டுமே. விண்டோஸ் 8.1க்கான பாதுகாப்பு 2023 வரை மட்டுமே. அதன் பின்னர், விண்டோஸ் 10 சிஸ்டம் மட்டுமே பாதுகாப்பினைப் பெறும்.
ஆனால், அப்போதைய நிலையில், நாம் புதிய கம்ப்யூட்டரை வாங்கும் நிலைக்கு வந்துவிடுவோம். அந்த நிலையில், நமக்குக் கிடைக்கும் ஒரே சிஸ்டம், விண்டோஸ் 10 ஆக மட்டுமே இருக்கும்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினை நீங்கள் ஏற்றுக் கொண்டு, கம்ப்யூட்டரில் பதியத் தயாரானால், அதற்கான பாப் அப் செய்தி வருகையில், அதனை ஏற்றுக் கொள்வதாகக் கிளிக் செய்தால் போதும். மேம்படுத்தப்படுதல் தானாகவே மேற்கொள்ளப்படும். ஆனால், அதற்கு முன்னர், நம் டேட்டா பைல்கள் அனைத்திற்கும் ஒரு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இதற்கு இணையத்தில் கிடைக்கும் க்ளவ்ட் சேவைகளான OneDrive மற்றும் DropBox ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்டோஸ் 10க்கு மாறிக் கொண்ட பின்னர், அது இயங்கும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழைய சிஸ்டத்திற்கு மாற்றிக் கொண்டு, இணைய இணைப்பினை அதன் வழி மேற்கொள்ளாமல், செயல்பட முடிவெடுத்தால், அதற்கும் வழி தருகிறது விண்டோஸ் 1-0. மைக்ரோசாப்ட் ஒரு மாத காலத்திற்கு, உங்கள் பழைய சிஸ்டம் மற்றும் செட்டிங்ஸ் அமைப்பினை நினைவில் வைத்திருக்கும். Settings, சென்று "Update & security" மற்றும் "Recovery" எனச் செல்லவும். அங்கு உங்கள் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1க்குத் திரும்பிச் செல்ல, ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். பழைய சிஸ்டம் எதுவோ அதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், மீண்டும் உங்கள் கம்ப்யூட்டர், பழைய நிலைக்கு, பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் திரும்பிவிடும்.
ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டம் பதிந்த பின்னர் ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பதிந்திருந்தால், அது உங்களுக்குக் கிடைக்காது. இதற்கு, மைக்ரோசாப்ட் 31 நாட்கள் கால இடைவெளி மட்டுமே தருகிறது. அதற்குப் பின்னர் இது இயலாது.