வெற்றி மந்திரம் “இதுவும் கடந்து போகும்”

வெற்றி மந்திரம்: “இதுவும் கடந்து போகும்”!!!


எத்தனையோ செடிகளின், மரங்களின் விதைகளை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் விதைத்துச் சென்று கொண்டிருக்கும் காற்றைப் போல, நல்லுரைகளை ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களிடம் வழங்கிக் கொண்டிருந்த போதி மரத்தடியில் ஞானம் பெற்ற கவுதம புத்தர் தங்கள் ஊருக்கு வெளியே இன்று மாலை போதனை செய்வதற்கு வருவதாகவும், அனைவரும் வந்து புத்தரின் உபதேசத்தைப் பெற்றுச் செல்லவும் என்று அவரது சீடர்கள் சொல்லிச் சென்றதால் அவ்வூரில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புத்தரை சோதிக்க நினைத்தார்கள். எப்படி? அந்த ஊரில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன், கடினமாக உழைத்தும் பணம் சேராதவன், பரம்பரை பணக்காரன், திடீர் பணக்காரன், தாயைக் கவனிக்காதவன், தன்னுடைய அழகை மட்டும் பெரிதென நினைத்த பெண், குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைத்து ஓடாய் தேயும் பெண் என்று பலதரப்பட்ட மனிதர்களுக்கும் தீர்வு தேவைப்பட்டது. அதனால் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள். புத்தரிடம் தாங்கள் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றனர்.

ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்துவிட்டதைக் கண்டதும் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது. தொடர்ந்து புத்தரை நோக்கி, “புத்தரேÐ நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.

மௌனமாக சிரித்த புத்தர், “இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை. “இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.
“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்.

எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத மந்திரம் உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும். “இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும். தோல்வியைச் சந்திப்பவர்கள், நோயில் இருப்பவர்கள், சிக்கலில் மாட்டியவர்கள், திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள். வெற்றி நிச்சயம்… ஏனென்றால் இது தேவ தத்துவம்.