கருவளையமா கவலை வேண்டாம்!

கருவளையமா, கவலை வேண்டாம்!
இளம் பெண்கள் பலருக்கு கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. இது அவர்களுடைய முகப் பொலிவை குறைக்கிறது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது. கருவளையம் ஏற்படக் காரணம் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் தான். தவிர தூக்கமின்மை, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, உடல் நலக் குறைவு, புகைப் பிடிக்கும் பழக்கம், இன்சோம்னியா (Insomnia) போன்ற உறக்கமின்மைப் பிரச்னைகளாலும் கருவளையம் தோன்றும். கடைகளில் இதற்கான நிறைய க்ரீம்கள் கிடைத்தாலும் இயற்கை முறையில் சரி செய்வதே நல்லது. முதலில் உணவுப் பழக்கத்தையும் உறக்கப் பழக்கத்தையும் சீர் செய்ய வேண்டும். அதன் பின் சில எளிமையான யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் கடைபிடிக்க வேண்டும்.
உணவு
இயற்கை உணவு வகைகள் (ஆர்கானிக் ஃபுட்ஸ்), பழங்கள் மற்றும் காய்கறிகள் தினமும் சாப்பிடுவது நல்லது. நீர்ச்சத்துள்ள காய்கறிகள், மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சாப்பிடுவதாலும் நல்ல பலன் கிடைக்கும். கூடுமானவரையில் மாவுச் சத்து மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். காரணம் தேவையான அளவு நீர்ச்சத்து உடம்பில் இருக்க வேண்டும். தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீராக மட்டுமில்லாமல் மோர் அல்லது இளநீர் குடிக்கலாம். ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட அது தோலின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கும். சுருக்கங்கள் வராமல் காக்கும். அடிக்கடி ஃபாஸ்ட் புட்ஸ், ஜன்க் புட்ஸ் சாப்பிட்டால் சீக்கிரமே வயோதிக தோற்றம் ஏற்பட்டுவிடும். கண்களைச் சுற்றி அடர்த்தியான கருவளையம் தோன்றக் கூடும். சீஸ், சாக்லேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் நலத்தைக் கெடுக்கும் மது பானங்கள், குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
உறக்கம்
சரியான அளவு தூக்கம் மிகவும் அவசியம். தினமும் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் தூக்கம் கட்டாயம் தேவை. ஒரு நாள் எட்டு மணி நேரம் தூங்கி அடுத்த நாள் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி பின் அதை அட்ஜெஸ்ட் செய்கிறேன் என்று பத்து மணி நேரம் தூங்குவது உடலுக்கு நல்லது அல்ல. ஒரு நேர ஒழுங்கு இருக்க வேண்டும். தூக்கம் சரியான நேரம் வரை இருக்கும்போது உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். முக்கியமாக தோல் வளமாக இருக்கத் தேவையான கொலாஜன் எனப்படும் க்ரோத் ஹார்மோனின் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தோல் சுருக்கம் அடையாது. இரவுப் பணியில் வேலை செய்பவர்கள் அதற்கேற்றபடி பகலில் தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கப் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடலாம். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இது மனதை மட்டுமல்ல உடலையும் சோர்வடையச் செய்துவிடும். அதிகப்படியான கோபம், டென்ஷன், இயலாமை, தாழ்வு மனப்பான்மை போன்றவை ஸ்ட்ரெஸ் ஏற்படுத்திவிடும். இவை தொடர்ந்து இருந்தால், ஹார்மோன்கள் சமச்சீராக சுரக்கும். இதனால் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடும். தலைமுடியும் நரைத்துவிடும்.
யோகாசனம்
உடலையும் மனதையும் புத்துணர்வாக்க, தினமும் வாக்கிங் போக வேண்டும், யோகா அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் செய்ய இயலாவிட்டால் வாரத்தில் நான்கு நாட்களாவது கட்டாயம் செய்ய வேண்டும். ஆசனங்கள் செய்வதன் மூலம் முகத்தில், கண்களில் மற்றும் மூளையில் ரத்த ஓட்டம் சீராகிறது. யோகா மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் போது கண்ணில் ஏற்படும் கருவளையம் மிகவும் சாதாரணமானது. தினந்தோறும் யோகப் பயிற்சி செய்து உடல் நலம் பேணுவோம். கருவளையம் பிரச்னையைப் பொருத்தவரையில் தினமும் நான்கு ஆசனங்களைத் தொடர்ந்து செய்யலாம். அவை விபரீதகரணி, ஹஸ்தபாதாசனம், சாம்பவி முத்ரா மற்றும் சூர்ய நமஸ்காரம்.. இவை தவிர நாடி சுத்தி, பிராணாயாமம், கபாலபாத்தி ஆகியவற்றையும் சேர்த்து செய்தால் நலம். ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள், ஸ்பாண்டிலைடிஸ் இருப்பவர்கள் இந்த ஆசனங்களை செய்யக் கூடாது. மற்றவர்களும் தகுந்த ஆசிரியரின் நேரடி உதவியுடன் கற்றப் பின்னரே தினமும் செய்ய வேண்டும். தவிர உடல் இந்த ஆசனங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் எளிதல் செய்ய முடிந்தால் தான் செய்ய வேண்டும். ஏதேனும் அசெளரியமோ வலியோ இருந்தால் மருத்துவரின் பரிந்துரைக்குப் பின்னரே தொடரவேண்டும்.
கடவுள் மனிதர்களுக்கு இயற்கையாகத் தந்த ஆரோக்கியமான உடலை தவறான பழக்கங்களால் கெடுத்துக் கொண்டு நோயை வரவழைத்துக் கொள்ளக்கூடாது. சமச்சீரான எல்லா சத்துக்களும் கிடைக்கும்படியான உணவுப் பழக்கமும், அமைதியான மனத்தும், நிம்மதியான உறக்கமும் தான் உண்மையில் வரம். நமக்கான வரம் கை அருகே தான் உள்ளது? கண்களில் தொடங்கி உடல் முழுவதும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்போம்.