ஊட்டச்சத்து மூலம், குழந்தைகளை உயரமாகவோ, புத்திசாலியாக உருவாக்க முடியாது !!!

ஊட்டச்சத்து மூலம், குழந்தைகளை உயரமாகவோ, புத்திசாலியாக உருவாக்க முடியாது !!!


'குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உயரமாக வளர வேண்டும்' என்று அவர்களின் உடல் நலம் குறித்த எதிர்பார்ப்புகள் பெற்றோருக்கு. அவற்றை எப்படி நனவாக்குவது?
'எங்கள் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பானங்களை வாங்கிக்கொடுங்கள்... உங்கள் குழந்தை உயரமாக, ஊட்டமாக வளர்வான்; புத்திசாலியாக இருப்பான்' என்றெல்லாம் பல்வேறு விளம்பரங்கள் பெற்றோர்களை மயக்குகின்றன. விளம்பரத்தில் கூறுவதெல்லாம் உண்மையா? குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு, பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
திருச்சியைச் சேர்ந்த குழந்தைகள் நல மூத்த மருத்துவர் டி.செங்குட்டுவனிடம் கேட்டோம்.

''குழந்தை பிறந்தது முதல், ஓர் ஆண்டு வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளே அவர்களுக்குப் போதுமானது. டி.வி.யில் விளம்பரப்படுத்தப்படும் ஊட்டச்சத்து பானங்கள் எல்லாம் தேவையற்றவை. தமிழக அரசு, குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து மாவு அளிக்கிறது. இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, பொட்டுக்கடலை, வெல்லம் சேர்த்து உருண்டையாக்கிக் கொடுக்கிறார்கள். இதில் இல்லாத சத்து வேறு எதிலும் இல்லை.

'டோகோசாஹெக்சேனாயிக் ஆசிட்' (Docosahexaenoic acid (DHA) எனப்படும் ஒருவகையான ஒமேகா 3 கொழுப்பு அமிலம்தான் குழந்தையின் மூளை மற்றும் கண்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. குழந்தை பிறந்தது முதல், இரண்டு வயதுக்குள் இந்தக் கொழுப்பு அமிலம் போதுமான அளவு கிடைப்பது மிகவும் அவசியம். தவிர, லினோலிக், லினோலேனிக் போன்ற அமிலங்களும் மூளை வளர்ச்சிக்கு அவசியம். ஒருசில ஊட்டச்சத்து பானங்களில் மட்டுமே டி.எச்.ஏ. உள்ளது. லினோலிக், லினோலேனிக் போன்ற அமிலங்கள் இதில் இல்லை. ஆனால், தாய்ப்பாலில் லினோலிக், லினோலேனிக் உள்ளிட்ட அமிலங்கள் உண்டு. ஆனால், டி.எச்.ஏ. இல்லை.
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சத்து பானத்தில் மட்டும் 100-க்கு, 20 கிராம் என்ற அளவில் டி.எச்.ஏ. உள்ளது. அதாவது ஐந்து நாட்களில் ஒரு பாட்டில் வரை செலவழிக்க வேண்டும். அப்படிச் செலவழித்தாலும் குழந்தைக்குத் தேவையான லினோலிக் அமிலம், லினோலேனிக் அமிலம் கிடைக்காமல் போய்விடும். மீன் வகைகளில் டி.எச்.ஏ. உள்ளது. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு மீனைச் சாப்பிடக் கொடுப்பதன் மூலம், டி.எச்.ஏ. கிடைத்துவிடும். அதனால் ஒரு வயது வரை, குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். ஆறு மாதம் முதல் குழந்தைக்கு, தாய்ப்பாலுடன் திட உணவை அறிமுகப்படுத்தலாம். கம்பு, சோளம், கேழ்வரகு, வெல்லம் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சத்து மாவு உருண்டையும் கொடுக்கலாம்.

இரண்டு வயது வரை குழந்தைக்கு, திட உணவுடன் தாய்ப்பால் கொடுக்கலாம். மேலும் சத்து உருண்டையைக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி காய்ச்சல் போன்ற பிரச்னைகள் அண்டாது. சத்து உருண்டையை வீட்டிலேயே செய்வதால் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்' என்றவரிடம்,
''இதுபோன்ற ஊட்டச்சத்து பானங்கள் தேவையே இல்லையா?'' என்று கேட்டோம்.
'குழந்தை, கடுமையான காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, திட உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாமல், திரவ உணவு மட்டுமே கொடுக்க வேண்டிய நிலை வரும்போது, இத்தகைய ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கலாம். மற்றபடி, இத்தகைய பானங்களை எப்போதும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அதற்குப் பதிலாக, தினமும் இரண்டு வேளை பால் குடித்தாலே போதுமானது.
குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை முதலில் உருவாக்க வேண்டும்.
குழந்தைக்கு ஒரு வயது நிரம்பியதும் தானாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும்.
அடம்பிடிக்கிறது என்று நொறுக்குத் தீனிகளை வாங்கிக்கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டாம். உணவின் மீதே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.
குழந்தைகளுக்கு அதிக அளவு நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளைத் தரவேண்டும்.
கொத்தவரங்காய், அவரைக்காய், பாகற்காய், கத்திரிக்காய், வாழைத்தண்டு, வாழைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளையும் அடிக்கடி சமைத்துக்கொடுக்க வேண்டும்.
உணவுப் பழக்கத்தின் மூலமே குழந்தையை நல்ல ஆரோக்கியமாக வளர்க்க முடியும். ஊட்டச்சத்து பானங்களை அளிப்பதன் மூலம், குழந்தைகளை உயரமானவர்களாகவோ, புத்திக் கூர்மையானவர்களாகவோ உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை' என்கிறார்.