சிவன் கோவிலின் தலைமை அதிகாரி !!!

சிவன் கோவிலின் தலைமை அதிகாரி !!!

நாயன்மார் அறுபத்து மூவரில் பன்னிரண்டு வயதிலேயே சிவனருள் பெற்றவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோவிலை நிர்வகிக்கும் தலைமை அதிகாரியாக இவர் திகழ்கிறார். இவருக்கு கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தீர்த்தம் விழும் கோமுகியை ஒட்டி சன்னிதி இருக்கும். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் இவரை வணங்கினால் சிவன் கோவில் தரிசனம் முழுமை பெற்றதாக ஐதீகம்.
கோவில் வரவு, செலவு கணக்கை இவர் பெயரில் எழுதும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. அர்த்த ஜாம பூஜையின் போது, சிவனுக்கு படைத்த நைவேத்யத்தில் நான்கில் ஒரு பங்கு இவருக்கு படைக்கப்படும். அதை கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு இரையாக இடுவர். பெரியபுராணத்தில் சேக்கிழார் இவரை, "சிறிய பெருந்தகையார்' (வயதில் சிறியவர்.. ஆனால் செயலில் பெரியவர்) என்று குறிப்பிடுகிறார்.
=================================================
கோவிலுக்குள் நுழையும் முன் கவனிக்க வேண்டியது என்ன?
சிவன் கோவில் கருவறைக்குள் நுழையும் இடத்தில் துவாரபாலகர் இருவர் நிற்பதைக் காணலாம். ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்று இவர்களைக் குறிப்பிடுவர்.
ஆட்கொண்டார் ஆள் காட்டி விரலை மட்டும் நீட்டியபடி நின்றிருப்பார். சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என்பதை இவரது நீட்டிய விரல் உணர்த்துகிறது.
மற்றொருவரான உய்யக் கொண்டார் கையை விரித்துக் காட்டியபடி இருப்பார். இதன் மூலம் சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடையத் தேவையில்லை என்பதை உணர்த்துகிறார்.
வழிபாட்டிற்குச் செல்வோருக்கு இந்த உண்மையைச் சொல்வதே இவர்களது பணியாகும்