சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம் ...


ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.
நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.