ஆடைத் தேர்வில் மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை!

ஆடைத் தேர்வில் மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை!



'ஆள் பாதி ஆடை பாதி' என்பதில் பெரியவர்கள் மட்டுமல்ல, இப்போதெல்லாம் குழந்தைகளும் கவனமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள். 'பட்டுப் பாவாடை போட்டு என் பொண்ணுக்கு அழகு பார்க்கணும்' என்று அப்பா சொல்ல, 'இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரிதான் நான் என் பொண்ணை வளர்ப்பேன். அவள் ஷார்ட்ஸ் போட்டுக்கட்டும்' என்று அம்மா சொல்ல, ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப உடை உடுத்துவார்கள், குட்டீஸ். அதன்பிறகு, ஆடைத் தேர்வில் அதகளப்படுத்துவார்கள். 'இந்த பேன்டுக்கு இந்த டாப் வேண்டவே வேண்டாம்', 'இந்த கலர் எனக்குப் பிடிக்கல' என்று அடம்பிடிப்பார்கள். ஆடைத் தேர்வில் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே...

* இப்போதெல்லாம் ஐந்து, ஆறு வயதைத் தாண்டியவுடன், குழந்தைகள் தங்களுக்கான ஆடையை அவர்களே தேர்வு செய்துகொள்கிறார்கள். இதனை வித்தியாசமாக  பார்க்காதீர்கள். அதேசமயம், 'பாரேன்! என் பொண்ணு, அவளுக்கு என்ன வேணும்னு எவ்ளோ தெளிவா இருக்கா’ என்று அவள் முன் பெருமையாகவும் மற்றவர்களிடம்  கூறாதீர்கள். அப்படிச் செய்தால், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்று அவள் நினைக்கத் துவங்கிவிடுவாள். இந்த மனோபாவம், அவள்  வளர்ந்த பிறகும் தொடர்ந்தால் அவளுக்குதான் சிக்கல்.  உங்கள் மகள் துணிக் கடைக்குச் செல்லும்போது, ‘நான்தான் எனக்கு டிரெஸ்  செலக்ட் பண்ணுவேன்’, ‘எனக்கு ரெட் கலர் டிரெஸ்தான் வேணும்’ என்று கூறினால், அனுமதியுங்கள். அதனை இயல்பாகக் கையாளுங்கள்.

* என்னதான் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சினிமா வாசத்திலிருந்து தள்ளி வைத்தாலும், அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் பெரும் பங்காற்றுகிறது  வெள்ளித்திரை. 'அந்தப்  பாட்டுல சமந்தா அக்கா போட்ட மினி ஸ்கர்ட் மாதிரி டிரெஸ் வேணும்மா’, ‘இந்த  கெட்ட-அப்ல நயன்தாரா செம்மயா இருக்காங்கம்மா; அதே  மாதிரிதான் எனக்கும் டிரெஸ் வேணும்' என்று குட்டீஸ் குதிப்பார்கள். அதுபோன்ற சுழல்களில், 'மினி ஸ்கர்ட் வேண்டாம்... ஆனா இதே டாட்டட் பேட்டர்ன்ல மிட் லெங்த் ஸ்கர்ட் வாங்குவோம்' என்று அதை ஒத்த நாகரிகமான ஆடைகளை வாங்கித் தரலாம்.

*பதின் பருவம் என்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு அல்ல... மிகவும் அடர்த்தியான கோடு! மனதில்  தோன்றும் அனைத்தையும் செய்து பார்க்க வேண்டும் எனத் துடிக்கும் வயது. குறிப்பாக, இந்த வயதிலுள்ள இளம்பெண்கள், தங்களை அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். 'மற்றவர்கள் வியக்கும்படி ஆடை அணிய வேண்டும்' என்ற ஆர்வம் அவர்களுக்கு இருக்கும். அதனால்தான், எத்தனை ஆடைகள் இருந்தாலும், ‘எனக்குப் போடறதுக்கு டிரெஸ்ஸே இல்லம்மா’ என்று புலம்புவார்கள். இந்தச் சமயத்தில்தான், உங்களின் உதவி அவர்களுக்குத் தேவை. ஆடைகளின் டிரெண்ட் பற்றி நீங்கள் அப்டேட்டாகி, அவர்களுக்கு உதவுங்கள்.

* எந்த இடத்துக்கு எந்த மாதிரியான ஆடைகளை அணிந்து செல்வது என உங்கள் மகளுக்கு கற்றுக்கொடுங்கள். தோழியின் வீடு, பேர்த்டே பார்ட்டி என்று செல்லும் இடங்களுக்கு ஏற்ப நவீனமாக ஆடை அணிய வேண்டிய விருப்பமும் அவசியமும் அவர்களுக்கு இருக்கும். அதே சமயம், நம்முடைய கலாசாரத்துக்குத் தகுந்தபடி அவர்களை உடுத்தவும் பழக்குங்கள். உதாரணமாக, ஜீன்ஸ், டி-ஷர்ட் ட்யூஷனுக்கு ஓ.கே. அதே சமயம், கோயில், திருமணம் என்று செல்லும்போது சுடிதார், பட்டுப் பாவாடை என்று அணியப் பழக்கலாம். ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி. மறுத்தால் கால அவகாசம் கொடுத்து அமைதியான வழியில் புரிய வையுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் மகள் எந்த வயதில் இருந்தாலும், அவளுக்குப் பிடித்தமானதாக, வசதியாக உணரும் ஆடைகளை அணியும் சுதந்திரத்தை அவளுக்குக் கொடுங்கள்.  ஒருவேளை, செல்லும் இடங்களில் தன் ஆடைகளால் அவள் சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தால், அதற்குத் தீர்வு காண அவளுக்கு உதவுங்கள்.

நமக்குதான் ஆடை ஓர்  அடையாளம். ஆடைக்கு நாம் அடையாளம் அல்ல!