கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும் அ.மணிபாரதி.

‘‘ஆர்வமாகச் செய்தேன், தொழிலில் ஜெயித்தேன்!’’

கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும்  அ.மணிபாரதி.




படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்பார்கள். ஆனால், எந்தவொரு தொழிலையும் ஆர்வத்துடன் செய்தால், அந்தத் தொழிலை சொந்தமாகத் தொடங்கி, அதில் நிச்சயம் ஜெயிக்கவும் செய்யலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம், கோவில்பட்டியில் ஜெ.பி.ஸ்டிக்கர் என்கிற பெயரில் ஸ்டிக்கர் கடை நடத்திவரும்  அ.மணிபாரதி.

இந்தத் தொழில் அவர் ஜெயித்தது எப்படி என்பதை அவரே சொன்னார்.

எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி. என் அப்பா அமல்ராஜ் ஓவியர். நான் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் படித்தேன். நான் படித்த படிப்பு சம்பந்தமான தொழிலில் செய்ய வேண்டும் என்று நினைத்து, இசி-டெக் (EC-TECH) எனும் எடை கருவி தயாரிக்கும் கடையில் மாதம் ரூ.5,000-த்துக்கு வேலைக்குச் சேர்ந்தன். அந்த வேலை எனக்கு ஒத்துவரவில்லை என இரண்டு மாதங்களில் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

பின்பு வங்கித் தேர்வுகளுக்குப் படிக்க ஆரம்பித்தேன். நன்றாகப் படித்தால், தேர்விலும் வெற்றி பெற்றேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கவில்லை.

பின்பு, என் தந்தை சொந்தத் தொழில் தொடங்கலாம் என அறிவுரை கூறினார். எனக்கு பைக் என்றால் ரொம்பப் பிரியம். எனவே, வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் தொடங்கலாம் என கலந்து ஆலோசித்தோம். எனினும் எனக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி எதுவும் தெரியாது. எனவே, ஸ்டிக்கர் தயாரிப்பது எப்படி என்று என் தந்தை இரண்டு நாள் சொல்லித் தந்தார். அதனுடன் அவரது நண்பர் சங்கர் என்பவரிடம் ரூ.2,00,000 கடன் வாங்கிக் கடையை ஆரம்பித்தேன்.

பின்பு, நானாக ஒவ்வொரு விஷயத்தையும் சொந்தமாகக் கற்றுக்கொண்டேன். அழகாக ஸ்டிக்கர் ஒட்டி கஷ்டமர்களைக் (Customer) கவர்ந்தேன். என் வித்தியாசமான ஸ்டிக்கர்களைப் பார்த்து, என்னைத் தேடி நிறைய பேர் வர ஆரம்பித்தனர். அதே நேரத்தில் புதிய மாறுதல்களை என்னிடம் கேட்டனர். அதன்படி பைக் உருமாற்றம் (bike modification) செய்து தர ஆரம்பித்தேன்.

பின், 2015-ல் கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பித்ததேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாள் முழுக்கவே இந்த வேலை பிசியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஸ்டிக்கர் பொருட்களுக்கான செலவுகள் போக ரூ.2,000 வரை எனக்கு வருமானம் கிடைக்கும்.

இதனால், 2015-ல் இன்னொரு கடையையும் ஆரம்பித்தேன். குறைந்தது 1000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நான் ஸ்டிக்கர் செய்து தந்திருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் பல கிளைகளை தொடங்க வேண்டும் என்கிற லட்சத்துடன் உழைத்து வருகிறேன்’’ என்றார்.

வித்தியாசமாக செய்தால், வாடிக்கையாளர்கள் கவனம் நிச்சயம் கிடைக்கும். அதன் மூலம் தொழிலில் ஜெய்க்க முடியும் என்பதை தனது பிசினஸ் சீக்ரெட்டாகக் கொண்டு செயல்படும் மணிபாரதி இன்னும் புதிய உயரங்களை எட்டட்டும்.