MRF - ரூ.500-லிருந்து ரூ.68,000-த்துக்கு... வயிற்றெச்சலைக் கிளப்பும் பங்கு!

MRF - ரூ.500-லிருந்து ரூ.68,000-த்துக்கு... வயிற்றெச்சலைக் கிளப்பும் பங்கு!



சில பங்குகளின் விலையைப் பார்த்தால், ‘அடடா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்தப் பங்கை வாங்கித் தொலைச்சிருக்கலாமே!’ என்று நினைத்து, புலம்பித் தீர்ப்போம். அப்படி பலரையும் புலம்ப வைத்த ஒரு பங்கு என்றால், அது எம்.ஆர்.எஃப். டயர் பங்கைச் சொல்லலாம். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை ரூ.68,000.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவில் டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி லிமிடெட் (எம்ஆர்எஃப்) செயல்பட்டு வருகிறது. டயர், டியூப் மற்றும் கன்வேயர் பெல்டுகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்திய டயர் நிறுவனங்களில் முக்கியமானது எம்ஆர்எஃப். இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வகையான வாகனங்களிலும் நல்ல வளர்ச்சி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக டயர்களின் தேவை அதிகரித்து வருவதும், டயர் தயாரிப்புக்கான மூலப்பொருளின் விலை குறைவாக இருப்பதும் இந்த நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துத் தந்தது. இதனால் இந்தப் பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து, அனைவரையும் நோகடித்தது.

இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தையில் அதிக விலை உயர்ந்த பங்கு என்றால் அது எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்குதான். 2000-ம் ஆண்டில் எம்ஆர்எஃப் பங்கின் விலை கிட்டத்தட்ட 2,300 ரூபாய்.  2001 ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பங்கின் விலை குறைந்து வெறும் ரூ.455-க்கு வர்த்தகமானது. ஆகக் குறைந்த அந்த விலையைத் தொட்டபின், இந்தப் பங்கின் விலை ஜிவ்வென்று உயர ஆரம்பித்தது.


2004-ல் ரூ.2,500-யைத் தொட்டது. 2008-ல் ரூ.8,000-ஆக உயர்ந்தது. 2010-ல் ரூ.6,000-ஆகக் குறைந்தது. 2013-ல் ரூ.13,000-ஆக உயர்ந்தது. 2015-ல் ரூ.38,000 ஆனது. தற்போது, 68,000 என்கிற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 2020-ல் எம்ஆர்எஃப் பங்கு ஒன்றின் விலை ரூ.1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனாலும் ஆகலாம்.

ஆரம்பத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் பங்கின் விலை 500 ரூபாய் என்று இருக்கும் போது, குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்து இருந்தால் இன்றைய நிலவரப்படி அதன் மதிப்பு 6,84,000 ரூபாய் எனப் பல லட்சம் ரூபாயாகப் பெருகியிருக்கும்.

எம்ஆர்எஃப் நிறுவனம் மட்டுமில்லை, இதனைத் தவிர ஐஷர் மோட்டார்ஸ் (ரூ.25,840), போஷ் (ரூ.23,203) உள்ளிட்ட சில நிறுவனத்தின் பங்குகளும் அதிக விலையில் வர்த்தகமாகி வருகின்றன. பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதே முக்கியம். பங்கின் விலை 10 ரூபாய், 100 ரூபாய் 1,000 ரூபாய் என எப்படி இருந்தாலும் எத்தனைச் சதவிகிதம் லாபம் என்பதுதான் முக்கியம்.

நல்ல பங்கில் முதலீடு செய்து, அதை நீண்ட காலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப். பங்கு ஒரு நல்ல உதாரணம்!