சிருங்கேரி கோவில் பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்

சிருங்கேரி கோவில் பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்
sringeri-Sharadamba-Temple-50-worship-tips.


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் பற்றிய 50 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

1. இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றிருப்பது சாரதா பீடமாகும்.

2. துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.


3. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா பீடம் இருக்கிறது.

4. சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

5. ஸ்ரீ சாரதாதேவி மடத்திலேயே குறைந்த வாடகையில், அங்கு செல்லும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்கின்றன.

6. கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

7. சிருங்கேரி செல்பவர்கள், இங்கிருந்து 22 கி.மீ. தொலைவிலும், கிக்கா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஸ்ரீமனே நீர் வீர்ச்சியை கண்டு களித்து வரலாம். இந்த நீர் வீழ்ச்சி, கர்நாடக மாநிலத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள மிக அழகிய நீர் வீழ்ச்சியாகும்.

8. யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து “காமகோடி” பீடத்தை ஸ்தாபித்ததாக சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோட்சலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும் போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.

9. சாரதை கோவில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர்.

10. சதா நேரமும், அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை, நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பணம் கட்டினால் பிரசாதம் என்று பெரிய அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்.

11. குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.

12. சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது.

13. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.

14. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

15. அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

16. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது.

17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

18. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.

19. அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

20. நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

21. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர்.

22. ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

23. நடை திறக்கும் நேரம் :- தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

24. அருகிலுள்ள விமான நிலையம்- மங்களூர் 7 கி.மீ., அருகில் உள்ள ரெயில் நிலையம்- சிருங்கேரி 55 கி.மீ.

25. ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.



26. சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது.

27. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

28. மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.

29. ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.

30. இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

31. குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

32. சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.

33. வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்

34. வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.

35. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

36. துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

37. படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம்.

38. சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான்.

39. சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.

40. சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.

41. சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.

42. பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.

43. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள்.

44. ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.

45. சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.

46. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.

47. சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.

48. சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.

49. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன.

50. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.