வியாக்ரபாதீஸ்வரர் கோவில்

வியாக்ரபாதீஸ்வரர் கோவில்

பாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்



     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

வட பகுதியைப் போலவே தென் பகுதியிலும் வியாக்ரபாதீஸ்வரர், பதஞ்சலியுடன் இருந்து அருள்புரிந்த தலம் இதுவாகும். இந்த ஸ்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கோவில் தோற்றம்
உத்திரதேசத்தை சிங்கவர்மன் தவறான முறையில் ஆட்சி செய்தான். அதனால் அவனது அரியணை பறிபோனது. இதையடுத்து காட்டுப்பகுதியில் அலைந்து திரிந்தான். வெயிலில் துவண்டு, தாகத்தினால் ஓரிடத்தில் மயங்கிச் சரிந்தான். அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் “அருகே தில்லை வனத்தின் நடுவில் குளம் இருக்கிறது. அங்கு சென்றால் தாகம் தணிக்கலாம்” என்றான்.

சிங்கவர்மன் மகிழ்ந்தான். வழிப்போக்கன் காட்டிய திசையில் சென்று, தில்லை வனத்திலே குளம் இருக்க கண்டான். அதன் நீரை அள்ளிப்பருகி தாகம் தணித்தான். தாகம் தீர்ந்தவுடன் புத்துணர்வு பெற்றான். அந்த நேரத்தில் குளத்திற்குள் புலி வடிவமும், பாம்பு வடிவமும் கொண்ட இரண்டு முனிவர்கள் தவம் இயற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான்.


அந்த முனிவர்களை நோக்கி வணங்கி நின்றான். சிங்கவர்மனைக் கண்டதும், “சிங்கவர்மனே! நான் பதஞ்சலி. இவர் வியாக்ரபாதர். மனுநீதி தவறாது ஆளும் மன்னனாக உன்னைக் காண நாங்களும் ஆசைக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்குள் உன் நிலைமை இப்படி ஆகி விட்டது” என்றார் பதஞ்சலி முனிவர்.

தன் தவறை உணர்ந்துவிட்டிருந்த சிங்கவர்மன், “என் பாவம் தீர நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

“நீ இந்த குளத்திலே மூழ்கி எழுந்து வா. உன்னுடைய பாவம் தீரும்” என்றனர், முனிவர்கள்.

சிங்கவர் மனும் அவ்வாறே செய்தான். அவன் பாவம் நீங்கியது. புதுப்பொலிவு பெற்ற அவன், முனிவர்களிடம், “ரிஷிகளே! இந்த இடத்தில் நீங்கள் தவம் செய்த நோக்கம் என்ன?” என்று கேட்டான்.

“இந்த தில்லை வனம் பரம ரகசியமான முக்கியமான ஸ்தலமாகும். இந்த தீர்த்தம் சிவனுடைய வடிவமானது. அதனால் இதற்கு ‘சிவகங்கை’ என்று பெயர். இந்த அகண்ட வனத்துக்குள் தான் நடேச பெருமான் திருநடனம் புரிந்தார். அதனை நாங்கள் தவத்தினால் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்” என்றனர் ரிஷிகள்.

“நானும் அரச வாழ்வை துறந்து, இங்கேயே தங்கி விடுகிறேன்” என்றான், சிங்கவர்மன்.

ஆனால் அதை முனிவர்கள் தடுத்தார்கள். “அரசன் சகல உயிர்களையும் காக்கும் பொறுப்புடையவன். நீ அரசனாக இருப்பதே உயிர்களுக்கு நல்லது. நீ வனத்தில் இருக்கக்கூடாது”

உடனே சிங்கவர்மன், “அப்படியானால் நீங்கள் கண்டுகளிக்கும் நடேசபெருமானின் திருநடனத்தை எனக்கும் காட்டியருள வேண்டும்” என்று வேண்டினான்.

முனிவர்கள் அருளினால் சிங்கவர்மனுக்கும், நடராஜரின் நடனக்காட்சி தரிசனம் கிடைத்தது. அதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தான்.

“ரிஷிகளே! சிவபெருமானுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

அதற்கு முனிவர்கள், “இத்தலம் ஏனைய தலங்களுக்கெல்லாம் மணிமகுடம் போன்றது. ஆகவே, இங்கு அற்புதமான ஆலயம் ஒன்றை உருவாக்கி அதில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்வாயாக” என்று கூறினார்கள்.

அதை கேட்டு ஆனந்தமடைந்த சிங்கவர்மன், முனிவர்களிடம் ஆசிபெற்று, அரண்மனை திரும்பினான். அவனுக்கு மீண்டும் அரியணை கிடைத்தது. பின்னர் ஆலயப் பணிகளை தொடங்கினான்.

இதனால் ‘தில்லை’ என்றும், ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் ‘சிதம்பரம்’ மாநகர் உருவானது.

தட்சிணாமூர்த்தி, சிவகாமி அம்மன், வியாக்ரபாதீஸ்வரர்

இதே கதையைக் கொண்டதுதான் தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்க நல்லூர். வட பகுதியைப் போலவே தென் பகுதியிலும் வியாக்ரபாதீஸ்வரர், பதஞ்சலியுடன் இருந்து அருள்புரிந்த தலம் இதுவாகும்.

இத்தல இறைவன் வியாக்ரபாதீஸ்வரர் என்றும், அம்பாள் சிவகாமி அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். தாமிரபரணியாறு தற்போது ஓடுவதை விட சற்று மேற்காக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடியுள்ளது. அவ்விடத்தில் கூழையாற்று தீர்த்தம் ஒன்றுள்ளது. அந்த காலகட்டத்தில் ஜெயதுங்க பாண்டியன் என்னும் அரசன், முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

இந்த மன்னன் பெயரால் இதனருகே உள்ள அனவரதநல்லூர் என்னும் ஊர், ‘செய்துங்க நாட்டு சதுர்வேதி மங்கலம்’ என்றழைக்கப்படுகிறது. இதை ‘வரதுங்கநல்லூர்’ என்றும் அழைத்துள்ளனர். ‘செய்துங்கன்’ என்றால் ‘வெற்றி திருமகன்’ என்று பொருள். இவர் எங்கு சென்றாலும் வெற்றிதான். செய்துங்கன் ஒரு முறை வேட்டையாட தாமிரபரணி கரையில் உள்ள கூழையாற்றுக்கு வந்தார். அங்கே வியாக்ரபாதீஸ்வரர் மற்றும் பதஞ்சலி முனிவர் தவமிருந்த தென் சிவகங்கை குளக்கரை காணப்பட்டது. அதில் அவர்கள் சிவனை வைத்து வணங்கி வந்தனர். மோன நிலையில் அவர்கள் இருந்த இடத்துக்கு ராஜா வந்த போது, ஒரு அதிர்வு ஏற்பட்டது.

மன்னனுக்கு காட்சி அளித்த சிவன் “வடதில்லையாக சிதம்பரத்தில் காட்சி தந்தது போல, இங்கேயும் நாங்கள் காட்சி தர விரும்புகிறோம். எனவே எங்களுக்கு கோவில் கட்டி வணங்கு” என்று சிவன் கூறினார்.

அதன்படி செய்துங்க மகாராஜன் கோவிலை கட்டினார். அதன்பின் தான் பதஞ்சலி முனிவர், ராமேஸ்வரம் சென்று சமாதி நிலை அடைந்தார். எனவே இது மிக பழமையான ஆலயம் என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.

இத்தல சிவபெருமானுக்கு, ‘வியாக்ரபாதீஸ்வரர், கூழையாற்று நாதர், திருவரங்கேஸ்வரர், திருப்புலிஸ்வரமூடையார்’ போன்ற பெயர்கள் உண்டு, தாயார் பெரிய நாச்சியார் மற்றும் சிவகாமி அம்மை என்று அழைக்கப்படுகிறார். இதே சிறப்பை உணர்த்தும் வண்ணம் இந்த ஊரில் திருவரங்க செல்விஅம்மன் என்ற ஆலயம் சற்று மேற்கே வாய்கால் கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள கால்வாய் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்வதால், இவ்வூரை ‘தட்சண கங்கை’ என்றும் அழைக்கிறார்கள். சிதம்பரத்தினை போலவே தில்லை அம்பல நாடராஜராக இவர் விளங்குவதால், செய்துங்கநல்லூரை ‘தென்சிதம்பரம்’ என்கிறார்கள். இவ்வூரில் திருவரங்க செல்வி, திருவரங்க பெருமாள் ஆலயங்கள் உள்ள காரணத்தினால் இவ்வூர் தென் ‘ஸ்ரீரெங்கம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

இங்கு கழனியில் வேலைசெய்யும் பெண்கள், தங்களது குழந்தைகளை மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு வேலை செய்வார்களாம். பொதிகை மலையில் இருந்து வரும் தென்றல் காற்றின் சுகத்தில் அந்த குழந்தைகள் அயர்ந்து தூங்கி விடுமாம். இதனால் இந்த ஊர் ‘சேய் தூங்க நல்லூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி ‘செய்துங்கநல்லூர்’ என்று வழங்கப்பட்டது.

இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி வியாக்ரபாதீஸ்வரருக்கும், பதஞ்சலிக்கும் மோன நிலையில் அருள் உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே கல்வி பெருகவும், நினைவாற்றல் பெருகவும், உயர்ந்த நிலையை அடையவும் இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கி செல்கிறார்கள்.

இந்தக் கோவிலில் தொடர்ந்து வணங்கினால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை சுற்றி வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கும். ஆணவம், மாயை, கண்மம் ஆகிய மும் மலங்கள் அகலும். யோகநிலையில் இங்கு தட்சிணா மூர்த்தி இருப்பதால் கல்வி பெருகி நோயற்ற தன்மை ஏற்படும். இங்குள்ள சிவனை வணங்கினால் மரண பயம் நீங்கி 16 செல்வங்களும் கிடைக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலி -திருச்செந்தூர் ரெயில் மார்க்கம் மற்றும் பஸ் மார்க்கத்தில் செய்துங்கநல்லூரில் இறங்கி, அங்கிருந்து அரை கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.