காந்தமலை ஜோதியான ஐயப்பன்- Ayyappan-Worship

காந்தமலை ஜோதியான ஐயப்பன்- Ayyappan-Worship
Ayyappan-Worship

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவார் ஐயப்பன்.

அன்று மகர ஜோதி

திருமால் மோகினியாக அவதாரம் எடுத்தபோது, அவர் மேல் சிவபெருமான் மோகம் கொண்டதால் அவதரித்தவர் ஐயப்பன். ஹரனுக்கும், ஹரிக்கும் பிறந்தவர் என்பதால் ‘ஹரிஹரசுதன்’ என்று அழைக்கப்பட்டார். இவரது அவதார நோக்கம் மகிஷி என்ற அரக்கியின் வதத்திற்காக உருவானதாகும். எனவே பம்பை நதிக்கரையோரத்தில் அந்த குழந்தையை திருமாலும், ஈசனும் விட்டுச் சென்றனர். அப்போது அந்தக் குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றை கட்டி விட்டனர்.

அந்த நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட வந்தார், பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன். மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாத வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பம்பா நதிக்கரை பகுதியில் குழந்தை அழுகுரல் கேட்டு அங்கு விரைந்து சென்றான் பந்தள மகாராஜா. அங்கு அழகிய குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது கண்டு, அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார்.

குழந்தையைப் பார்த்ததும் ராணிக்கு அளவில்லாத சந்தோஷம். கழுத்தில் மணியுடன் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். குழந்தைக்கே உரிய குறும்புகளுடனும், அபரிமிதமான அழகுடனும், அறிவார்ந்த கேள்வி ஞானத்துடனும், ஒப்பற்ற அரசகுமாரனாகவும் வளர்ந்து வந்தார் ஐயப்பன்.

இதற்கிடையில் பந்தளத்து ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்படியிருந்தும் மணிகண்டனின் மீது ராஜசேகர பாண்டியனுக்கு இருந்த பாசம் இம்மியும் குறையவில்லை. தனக்குப் பின் ஐயப்பனுக்கே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இது மகாராணிக்கு பிடிக்கவில்லை. தனக்கென்று ஒரு பிள்ளை வந்ததும், இதுவரை இருந்த பிள்ளையை பிடிக்காமல் போய்விட்டது ராணிக்கு. இதனால் அவரது மனது வேறு கணக்கு போட்டது.

அரசவையின் அமைச்சர்களில் ஒருவருக்கும் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுவதில் விருப்பமில்லை. அந்த அமைச்சர், ராணியிடம் சென்று, ‘மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டால், நீங்கள் பெற்ற பிள்ளைக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும்’ என்று தூபம் போட்டார். இதுவரை தனது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று எண்ணிக்கொண்டிருந்த ராணிக்கு, அமைச்சரின் வார்த்தைகள் தேனை வார்ப்பது போல் இருந்தது. இருவரும் சேர்ந்து மணிகண்டனை மண்ணுலகை விட்டு அனுப்ப முடிவு செய்தனர். அதற்காக ஒரு நாடகத்தையும் அரங்கேற்றினர்.

ராணி கடுமையான தலைவலியால் அவதிப்படுவது போல் நடித்தார். தலைவலி தீர அதற்கான மருந்தை புலிப்பாலில் கலந்து கொடுத்தால் தான் குணமாகும் என்று அரண்மனை வைத்தியர்கள் மூலமாக கூறவைத்தார் அமைச்சர். காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருவது என்பது யாரால் முடியும்?. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றனர்.

அப்போது, தாயின் தலைவலி தீர தானே காட்டிற்குச் சென்று புலிப்பால் கொண்டுவருவதாக கூறி புறப்பட்டார் மணிகண்டன். மன்னன் ராஜசேகரபாண்டியன் பதறிப்போனார். “வேண்டாம்! புலியின் பாலை கொண்டு வருவது எளிதானதல்ல. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றார்.

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்லாது, அவதாரத்தின் நோக்கம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதையும் உணர்ந்த மணிகண்டபிரபு, தானே சென்று வருவதாக கூறி காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தேவர்களை துன்புறுத்தி வந்த மகிஷியை அழுதா நதிக்கரை பகுதியில் சந்தித்தார். இருவருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஐயப்பனின் வில்லுக்கு வீழ்ந்தாள் மகிஷி.

இறந்த மகிஷி அழகிய பெண்ணாக வடிவெடுத்து ஐயப்பனிடம் வந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினாள். ஆனால், ‘நான் சபரிமலையில் வசிக்க போகிறேன். என்னைத் தேடி ஆண்டுதோறும் பல கோடி பக்தர்கள் வருவார்கள். நாட்டில் சண்டை சச்சரவுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கமே என்னைத்தேடி வரும் பக்தர்களிடம் விதைக்கப்படும். இந்த அவதாரத்தில் நான் பிரம்மசாரியாகவே வாழ்வேன். எனவே நீ என்னருகில் மாளிகைப்புறத்து அம்மனாக வீற்றிருப்பாய்’ என்று கூறி அருளினார்.

பின்னர் மகிஷியின் துன்பத்தில் இருந்து விடுபட்ட தேவர்கள் தேவேந்திரன் புடைசூழ காட்டிற்கு வந்தனர். அவர்களில் தேவேந்திரன் ஆண் புலியாக மாற, அதில் ஏறி ஐயப்பன் அமர்ந்து கொண்டார். தேவர்கள் அனைவரும் பெண் புலியாக மாறி ஐயப்பனை சூழ்ந்து கொண்டு பந்தளம் நோக்கி படையெடுத்தனர். ஐயப்பன் புலி மீது அமர்ந்து வருவதை பார்த்ததும் அனைவரும் அச்சத்தில் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

இதுபற்றி கேள்விபட்டதும் ராஜசேகரபாண்டியன், அமைச்சர், ராணி அனைவரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். புலி மீது அமர்ந்திருந்த ஐயனை பார்த்ததும் ராணியும், அமைச்சரும் தங்கள் பிழையை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயப்பன் தனது அவதார நோக்கத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறி புறப்பட்டார்.

ஐயப்பனை வணங்கிய ராஜசேகரபாண்டியன், ‘எனது ராஜ்ஜியத்திலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதனை தட்டமுடியாத ஐயப்பன், ‘பரிசுத்தமான சபரிமலையில் நிரந்தரமாக வாசம் செய்வேன். என்னை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அங்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள். கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நான் ஆண்டுதோறும் ஜோதி வடிவில் காட்சி தருவேன்’ என்று கூறி மறைந்தார்.

இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான, மகர சங்கராந்தி அன்று நடைபெறுகிறது.