குழந்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க

குழந்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க
Take-care-of-your-children.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டையும் அழகு சேர்ப்பவர்கள் குழந்தைகள் தான். கள்ளங்கபடம் இல்லாத குழந்தைப்பருவம் திரும்பவும் வராதா? என ஏங்குபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். எந்த ஒரு பிரச்சினையையும் உடனே மறப்பதனால் தான் குழந்தையை தெய்வத்திற்கு ஒப்பிடுகிறோம். இன்றைக்கு சமுதாயத்தில் எல்லோராலும் கேட்கப்படும் கேள்வி என்னவென்றால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? அவர்கள் என்ன படிக்கிறார்கள்? என்பதுதான்.

குழந்தைகள் பள்ளியில்தான், பிறருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை, விட்டுகொடுப்பது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்கு பின் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். ஆனால் தங்கள் குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள்? அவர்களின் ஆசிரியர் யார்? என்ற விவரங்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவில்லை.


வேலைக்குச் செல்லும் பெற்றோர்களில் சிலர் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து விட்ட பிறகு பள்ளியை எட்டி பார்ப்பதே இல்லை. குழந்தைகளை பள்ளியில் உரிய வயதுக்கு முன்னரே அவசர, அவசரமாக சேர்த்து விடுகின்றனர். முன்பெல்லாம் குழந்தைகள் ஆறு வயதில் தான் பள்ளிக்குச் சென்றார்கள். இன்றோ இரண்டு மூன்று வயதிற்குள் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். போட்டி நிறைந்த உலகில் நம்முடைய குழந்தை முதலாவுதாக படித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம்.

குழந்தைகளை அவர்களின் இயல்பில் வளர விடாமல், சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை போல வளர்க்கிறார்கள். இதற்காக சில பெற்றோர்கள் தனக்கு தெரிந்தவற்றையெல்லாம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு குழந்தைக்கு மூன்று வயது. அவனுடைய தந்தைக்கு ஐந்து மொழிகள் பேசத் தெரியும். அதனால் அந்த குழந்தையிடம் பேசும் போது ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மொழியில் பேசினார். விளைவு குழந்தையால் எந்த மொழியையும் சரி வர பேச இயலவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்குப் பதிலாக நாம் என்ன கேட்கிறோமோ? அதையே திரும்ப பேச ஆரம்பித்தான் .

அவன் தாய் மொழி தமிழையே பேசுவதற்கு நீண்ட நாட்களானது. பொதுவாக 3 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழி மட்டுமே போதுமானது. குழந்தைகள் பேசத் தொடங்கும் போது பல மொழிகள் பேசுவதால் அவர்களுக்கு நாம் எந்த மொழியை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப புரிந்து கொண்டு வளர்க்க வேண்டும்.

சில குழந்தைகள் ஒரு வயதில் கூறக்கூடிய அம்மா, அப்பா, தாத்தா போன்ற சாதாரண வார்த்தைகளை கூட 3 வயதில் மழலையர் பள்ளியில் வந்து தான் பேசுவது மிகவும் வேதனையான ஒன்று.

ஒரு குழந்தை பிறக்கும்போதே இவன் என்ஜினீயர் தான், டாக்டர்தான் என முடிவு செய்யும் பெற்றோர்கள், அந்த குழந்தையிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்று கேட்பதில்லை. குழந்தையிடம் கொஞ்சு பேசுவது எப்படி? என்பதையே சிலர் மறந்து விட்டனர்.

சில வீடுகளில் தாயும், தந்தையுமே பேசாமல் இருப்பார்கள். இதனால் அந்த குழந்தை மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். இதனால் பள்ளி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்களது பிரச்சினையை வெளிக்காட்டக் கூடாது.

முன்னொரு காலத்தில் குழந்தையை கவனித்து கொள்வதற்கு தாத்தா, பாட்டி இருந்தார்கள். அவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான நல்லது கெட்டது கற்று கொடுத்தார்கள். இன்று வீடுகளில் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லி கொடுப்பது இல்லை.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது.

அதிலும் பதின்ம வயது குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தங்களுடைய நண்பர்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைக்கும் பருவம். பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்கள். பருவ வயது தடுமாறுவதற்கு காரணம் இணையம் எனும் இணையில்லாக் கருவி என்று சொன்னால் மிகையாகாது.

அந்த நாளில் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் இன்று அறிவியலால் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் இதில் குழந்தைகளிடையே சில ஏற்றத் தாழ்வுகள் இயல்பாகவே உள்ளது.

இணையத்தில் பல நல்ல கருத்துகள் இருந்தாலும் கூட வேண்டாத கருத்துகளும் பின்னி பிணைந்து உள்ளன. பருவ வயது குழந்தைகள் ஒன்றும் அன்னப்பறவைகள் அல்ல. நீரை விட்டு பாலை அருந்துவதற்கு. வயது வந்த பின் அறிய வேண்டியவற்றை குழந்தைகளாக இருக்கும் போதே தெரிந்து கொள்ள முயற்சிப்பதால் அவர்கள் மனதளவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகு கிறார்கள். நல்ல வேளையாக சில மாதங்களுக்கு முன்னால் அம்மாதிரியான வலைத்தளங்களை அரசு முடக்கியது சற்று ஆறுதலை தந்துள்ளது.

இருபது வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகள் மட்டுமே இருந்தது. திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கு அப்போது பணம் இல்லை. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் குறைவாகவே இருந்தன. தொலைக்காட்சி பெட்டிகளை வைத்திருந்தோரும் மிகச் சிலரே. இதனால் குழந்தைகள் அதிகப்படியான நேரத்தை வெளியே விளையாடச் செல்லுவதிலேயே கழித்தார்கள். அதனால் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள். திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் மாறி, விலை உயர்ந்த அலைபேசியை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு அலைபேசியோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது.

குழந்தைகள் தினம் அன்று அவர்களின் அடிப்படை உரிமைகள், கல்வியின் உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது இவையெல்லாம் பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவதை பெற்றோரும், ஆசிரியரும் கடமையாகக் கொள்ள வேண்டும். எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் அன்பை முதலீடாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.