மாணவர்களே - ஒவ்வொரு நிமிடமும் தேவை விழிப்புணர்வு

மாணவர்களே - ஒவ்வொரு நிமிடமும் தேவை விழிப்புணர்வு



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மாணவப் பருவம் என்பது தேர்வை எதிர்கொள்வதிலேயே கழியக்கூடாது. வாழ்வை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்படுத்தலாகவும், அதில் வெற்றி பெறுவதற்கான தகுதியை வளர்க்கும் களமாகவும் அமைய வேண்டும்.

மாணவப் பருவம் என்பது தேர்வை எதிர்கொள்வதிலேயே கழியக்கூடாது. வாழ்வை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்படுத்தலாகவும், அதில் வெற்றி பெறுவதற்கான தகுதியை வளர்க்கும் களமாகவும் அமைய வேண்டும். அந்த வெற்றிக்குத் தேவை விழிப்புணர்வு. விழிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் தோற்றுப்போவதில்லை. சின்னச்சின்ன சறுக்கல்களும் அவர்களுக்கு வெற்றியை அடையாளம் காட்டி கடந்து செல்லும். நீங்கள் மாணவப் பருவத்தில் விழிப்புடன் செயல்பட கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

விழிப்புணர்வுதான் வெற்றியின் வித்து. விழிப்புடன் இருப்பது என்பது தூக்கமின்றி இருப்பதல்ல. எதிர்காலம் பற்றிய தெளிவுடன் இருப்பது. ஒவ்வொரு கணத்தையும், நிகழ்வையும் அந்த வெற்றிக்காக தயார்படுத்துவது, பயன்படுத்துவதே விழிப்புணர்வு.


ஆசிரியர் பாடம் நடத்தும்போதும், வீட்டில் படிக்கும் போதும் அதிகமான கவனத்துடன், விழிப்புடன் இருப்பவர்களே சிறந்த மாணவர்கள். அந்த விழிப்புணர்வே அவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கவும் காரணம். அதே நேரத்தில் அவர்கள் மதிப்பெண் வாங்குவதில் மட்டும் விழிப்புடன் இருப்பது போதாது. ஏனெனில் பள்ளிப்பாடங்கள் மட்டும் வாழ்க்கையாகிவிடாது.

பள்ளிப்பருவத்தில் சிறப்பாக செயல் படாத எத்தனையோ பேர் பின்னர் வாழ்க்கைப்பாடங்களை கற்றுக் கொண்டு வெற்றி மனிதர்களாக உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஒருவர் எப்போது விழிப்புடன் இருக் கிறாரோ, அப்போது அவர் வெற்றி கொள்கிறார் என்பதே. அதாவது பள்ளிப்பருவத்தில் விழிப்புடன், கவனம் சிதறாமல் செயல்பட்டவர்கள் நிறைய மதிப்பெண்கள் பெற்று வெற்றி மாணவராக வலம் வருகிறார்கள். சிலர் அதற்குப் பின்னால் வாழ்க்கையில் விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைகிறார்கள்.

நீங்கள் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருந்தால், நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருளாகும். உதாரணமாக நீங்கள் எப்போதுமே பள்ளி அடையாள அட்டையை தவறவிடாதவராக, பேனா பென்சில் போன்றவற்றை மறந்துவிட்டு மற்றவர்களிடம் இரவல் வாங்காதவர்களாக வலம் வந்தால் நீங்கள் சின்னச்சின்ன விஷயங்களிலும் விழிப்பாக இருப்பதாக கொள்ளலாம்.

ஆசிரியர் சொன்ன விஷயங்களை மறந்துவிட்டு தலையைச் சொரிபவர்கள், தண்டனை பெறுபவர்கள், அம்மா மளிகைக் கடைக்குச் சென்றுவரச் செல்லும்போது ஒன்றிரண்டு பொருட்களை மறந்துவிட்டு ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளிப்பவர்கள், பயணம் கிளம்பும்போது சாவியையும், பணப்பையையும் மறந்துவிட்டுச் செல்பவர்கள், நேரம் தவறிச் சென்றுவிட்டு வாகனத்தை தவற விடுபவர்கள், விழா அரங்கில் அனுமதி மறுக்கப்படுபவர்கள், டிக்கெட் தீர்ந்து தியேட்டர் வரை சென்று திரும்பி வருபவர்கள், கையில் கொண்டு சென்ற பொருட்களை எங்கோ வைத்துவிட்டு வீட்டில் வந்து தேடுபவர்கள் இப்படி இருப்பவர்களெல்லாம் மற்றொரு ரகம். இவர்களை மறதிப் பேர்வழிகள், சோம்பேறிகள், அலட்சியமானவர்கள் என்று எத்தனையோ பேர்களில் அழைத்தாலும் அவர்களுக்கெல்லாம் ஒரே பெயர் விழிப்புணர்வு அற்றவர்கள் என்பதே.

அவர்கள் அந்த விழிப்புணர்வற்ற நிலையால் எத்தனையோ விஷயங்களை கோட்டை விட்டுவிடுகிறார்கள். ரசிக்க நினைத்த படத்தை ரசிக்க முடிவதில்லை, செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடிவதில்லை. இதெல்லாம் தோல்விகள் இல்லை, சாதாரணமான விஷயங்கள்தானே என்று நினைப்பவர்கள்தான் மிகப்பெரிய விஷயங்களிலும் உச்சிவரை சென்றுவிட்டு, இலக்கை அடையும் முன் இடறிவிழுந்துவிடுகிறார்கள். அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொள்வார்கள். விழிப்புடன் செயல்பட்டால் இந்த இன்னல்கள் ஏற்படாது. இதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உண்டு. அவற்றில் ஒரு வரலாற்று நாயகன் விழிப்புணர்வற்ற நிலையில் கண்ட தோல்வியையும், மற்றொரு வரலாற்று நாயகன் பெற்ற வெற்றியையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

மாவீரன் நெப்போலியன் பல நாடுகளை வென்றவன். உலகமே வியந்த மாவீரன். வெற்றிகளையே குவித்த நெப்போலியனின், கடைசிக் காலம் சோகமாக கழிந்தது. விழிப்புணர்வு இல்லாததால் அவரது வாழ்க்கை வீணாக தோல்வியில் முடிந்தது. பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறைப்பிடித்து இருந்தது. ஆப்பிரிக்காவில் தனிமை சிறையில் நெப்போலியனை அடைத்து வைத்தனர். எத்தனையோ போர்களில், எத்தனையோ சறுக்கல்களை சமாளித்து வெற்றி வீரராக வலம் வந்த அவரை ‘தனிமைச் சிறை’ தடுமாற வைத்தது. அவர் தப்பிக்க சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டும், அவர் விழித்துக் கொள்ளாமல் வேதனையில் கிடந்ததால், மாண்டுபோகும் நிலைமை ஏற்பட்டது.

ஆம், அவர் சிறையில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த ஒரு நண்பர், ஒரு சதுரங்க அட்டையை அவரிடம் கொடுத்தார். “இந்த சதுரங்க அட்டை உங்கள் சிந்தனையைக் கூராக்க உதவும். சிறப்பாக செயல்பட வைக்கும். உங்களது தனிமையைப் போக்கவும் உதவும். இதனை நன்கு பயன்படுத்துங்கள்” என்று சொல்லி சென்றார்.

தனிமைச்சிறையின் வேதனையால், அவரால் சதுரங்கம் விளையாட முடியவில்லை. அதை வாங்கி மூலையில் போட்டுவிட்டார். கவலையில் சரியாக உண்ணாமல் மனம் வாடி இறுதியில் இறந்தே போனார். ஆனால் அந்த சதுரங்க அட்டையில் அவர் தப்பிக்கும் வழி குறிப்பிடப்பட்டிருந்ததை அவரது மரணத்திற்குப் பின்புதான் அறிந்தார்கள். கவலையில், வேதனையில் அதை உற்றுக் கவனிக்காத காரணத்தால், உலகின் மாவீரன் மரணம் அடைந்தான்.

ஆனால் விழிப்புடன் செயல்பட்ட சத்ரபதி சிவாஜி, இதுபோன்ற சூழலில் சாதுரியமாக செயல்பட்டு தப்பித்த நிகழ்வையும் நீங்கள் அறியலாம். ஒருமுறை எதிரியிடம் சிக்கிய சிவாஜி, ஆயுதமற்ற நிலையில் புலிநகத்தால் எதிரியை வீழ்த்தியும், சிறையில் அடைபட்டபோது பழக்கூடைக்குள் பதுங்கி தப்பித்தும் சோதனையில் இருந்து வெளியே வந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

விழிப்புணர்வு என்பது இதுதான், வீரம் உலகையே வெற்றிகாணும் அளவு இருந்தாலும், எந்த நிலையிலும் சோர்ந்துவிடாமல் விழிப்புடன் இருந்திருந்தால் நெப்போலியனும் தப்பித்திருக்கலாம். இன்னும் பல வெற்றிகளை குவித்திருக்கலாம்.

வாழ்க்கையில் நாள்தோறும் மன அழுத்தமும், பதற்றங்களும் எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோகலாம். மாணவர்களான உங்களுக்கும் அது பொருந்தும். அதுபோன்ற சூழலில் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி பெறலாம். ஆம், எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. விழிப்புடன் இருந்தால் அதை எளிதில் கண்டுபிடிக்கலாம் இல்லையேல் தோல்வியில் துவள வேண்டியிருக்கும். எனவே மாணவர்களுக்குத் தேவை ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வு!