வக்கிரகாளியின் தனி சிறப்பு

வக்கிரகாளியின் தனி சிறப்பு
Thiruvakkarai-Vakrakaliamman.


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


பொதுவாக காளிகோவில் ஊரின் எல்லையில் தான் இருக்கும். ஆனால் திருவக்கரை வக்கிரகாளி ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

பொதுவாக காளிகோவில் ஊரின் எல்லையில் தான் இருக்கும். ஆனால் திருவக்கரை வக்கிரகாளி ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கத்தக்கது. உலகை காத்து ரட்சிக்கும் தாய் இங்கு தீ ஜுவாலையை பின்னணியாகக் கொண்டு, மண்டை ஒட்டு கிரீடத்துடன் தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் காணப்படுகிறது. கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள்.

அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றிய படியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும். அன்னையின் இடது பாதத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள். அக்கிரமங்களை அழித்து தர்மத்தின் வழி நடப்பவர் களைக் காப்பவள் அன்னை என்று இதன் மூலம் புலனாகின்றது.


காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள்.

வக்கிரகாளியம்மனின் இடது திருக்கரத்தின் ஆட்காட்டி விரல் அவளது இடது திருவடியை சுட்டிக்காட்டுவதுப் போல அமைந்ததிருக்கோலம் நமக்கு ‘சரணாகதி’ தத்துவத்தை உணர்த்துகிறது. அவளது திருவடியே கதி என்று சரணடைந்த வர்கள் வீடுபேறு அடைவது நிச்சயம் என்ற தத்துவத்தையே இது உணர்த்துகிறது. ஆகவே அம்மனின் முகதரிசனம் கண்ட பிறகு இப்பாத தரிசனம் செய்வது விசேஷமாக கூறப்படுகின்றது.

அருள்மிகு வக்கிரகாளியம்மன் இத்தனை ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், கோரைப்பற்கள் கொண்டு, உருண்டை விழிகளுடன் மண்டை ஓட்டு மாலை அணிந்து வித்தியாசமான நிலையில் வக்கிரமாக அமர்ந்திருந்தாலும், நம் கண்களுக்கு சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கின்றாள். இன்னும் சந்தன காப்பு அலங்காரத்தில் அன்னை நம் கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சி கொடுத்து அருள்பாலிக்கின்றாள்.

தஞ்சை நிசும்பசூதனி, திருநல்லூர்காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டீஸ்வரம் துர்க்கை, தில்லைகாளி, திண்டிவனம் கிடங்கல் கோட்டை கொற்றவை போன்ற திருவக்கரை காளியும், பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் தனக்கென்று தனிசிறப்பு பெற்று விளங்குகின்றாள். இச்சன்னதியில் சப்தமார்கள் உள்ளனர். அவர்கள் வராகி, இந்திராணி, கவுமாரி, வைஷ்ணவி, பிராமணி, துன்முகி, சாமுண்டி முதலானோர் ஆவர்.

இவர்களில் சாமுண்டிக்குப் பதிலாக அன்னை ஆதிபராசக்தியே காளியாக உருவெடுத்து பக்தர்களுக்கு இங்கு அருள்பாலிக்கின்றாள். இச்சிற்பங்கள் பல்லவர் காலக் கலைத்திறனைப் பிரதிபலிக்கின்றன. காளி சன்னதி வலதுபுறம் யோகேஸ்வர லிங்கமும், இடதுபுறம் வலம்புரி கணபதியும் இவற்றில் வலம்புரி கணபதி அபூர்வமானதாகும். ஏனென்றால் 108 சிவத்தலங்களுக்கு ஒன்று என்ற முறையில் தான் வலம்புரி கணபதியை பிரதிஷ்டை செய்வது மரபு. அதன்படி இக் கோவிலில் உள்ள வலம்புரி கணபதியை தரிசித்தால் 108 சிவத்தலங்களில் உள்ள விநாயகரையும் தரிசித்த பேறு நமக்குக் கிட்டும். காளிக்கோவில் முன்புறம் பக்கத்துக்கு இரண்டாக நான்கு துவார பாலிகைகள் சிலை உள்ளன. இவர்களின் வரலாறு நமக்கு காளியின் கருணையை எடுத்துக் காட்டுகிறது.

இந்த துவாரபாலிகைகள் நால்வரும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது குலத்தொழிலான பால், தயிர் விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு விற்பனை செய்யும்போது பாலில் அதிக அளவு நீர் ஊற்றி மக்களை ஏமாற்றி வந்தனர். இதனை அறிந்த மன்னன் அந்த நால்வரையும் சிகை நீக்கி சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டான்.

அதன்படி அவர்களுக்கு மொட்டை அடித்து சிரச்சேதம் செய்யும் தருவாயில், அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து காளியை நோக்கி கதறி அழுதனர். அம்பாள் அவர்கள் முன் பிரசன்னமாகி அவர்களை மன்னித்து அருள் வழங்கித் தன்னிடமே துவாரபாலிகைகளாக வைத்துக் கொண்டாள் என்பது வரலாறு. தன் தவறை மனதால் உணர்ந்து, வருந்தி அவளிடம் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அவளது அருளும், கருணையும் நிச்சயம் உண்டு என்பதற்கு இந்த துவாரபாலிகைகளின் வரலாறே ஒரு பெரிய சான்றாகும்.

இந்த அண்டசராசரத்தில் சுழன்று கொண்டு இருக்கிற ஒன்பது கிரகங்களுக்கும், ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகு, கேது, இரண்டிற்கும் அதிதேவதை காளி. எனவே இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலது பக்கமாக ஐந்து முறையும், இடதுபக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.

காளி முன்பு பொய் சொல்ல முடியாது

இந்த காளியின் சன்னதியின் முன் ஊர் மக்கள் தங்களுக்குள் ஏதாவது வழக்கு மூண்டால் கூடிப்பேசி தீர்த்துக் கொள்வார்கள். காளி திருஉருவத்தின் முன் பொய் கூற யாருக்கும் தைரியம் வராது என்பது பார்த்தால் தெரியும்.