ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்

ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்
Agastheeswarar-temple-adaiyur-tiruvannamalai
அல்லல்களை அகற்றும் ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ள, ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.

பத்து விரல்கள் வடுக்களாக அமைந்த அதிசய லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், பல மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம், மூலிகை நீரால் இரு வேளை அபிஷேகம் நடக்கும் கோவில், மணப்பேறு மற்றும் மகப்பேறும் தரும் திருத்தலம், நோய் தீர்க்கும் அபிஷேக நீர் உள்ள ஆலயம், கள்வனுக்கும் அருள் செய்த கருணை தெய்வம் வீற்றிருக்கும் திருக்கோவில், பேரூர் ஆதீனத்து கோவில் எ பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ள, ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.

தல வரலாறு :

இத்தலத்தின் பெயர் ‘ஆதியூர்’ ஆகும். அடி அண்ணாமலை போல, இது ஆதி அகஸ்தீஸ்வரமாக இருந்து, காலப்போக்கில் ஆதியூர் என்பது மருவி ‘ஆடையூர்’ என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இதனை இங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. இத்தலத்தின் இறைவனை அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாக இத்தல இறைவனின் திருநாமம் ‘அகஸ்தீஸ்வரர்’ என வழங்கப்படுகிறது. தன்னை வணங்கும் தன் அடியாரின் பெயரைத் தன் பெயராக்கி மகிழும் இறைவனின் விருப்பப்படி, இப்பெயர் நிலைத்துவிட்டது.

கல்வெட்டுச் சான்று:

இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் சிறப்பு பெற்று விளங்கியதற்கு, இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டு சான்றாக அமைந்துள்ளது. ராஜேந்திரசோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் (கி.பி.1030), இந்தக் கோவிலுக்கு நிலதானம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இத்தலத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர் மற்றும் தேய்ந்த நிலையில் உள்ள விநாயகர் இருவரும் சோழர் காலத்தைச் சார்ந்தவர்களாக அமைந்துள்ளனர்.

பழங்காலத்தில் ஆதியூர் தலத்தின் அருகே புனல்காடு என்ற தலம் இருந்தது. அங்கிருந்த நந்தவனத்தில் இருந்து, அண்ணாமலையாருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி புனல்காடு பகுதியில் இருந்து திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களிடம் கொள்ளையடிக்கும் கொள்ளையன் ஒருவன் இருந்தான். நாளுக்கு நாள் அவனது அட்டகாசம் அதிகரித்து வந்தது.

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் ஒருவன் கொள்ளையடிப்பது, அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மன்னன், கொள்ளையனைப் பிடிக்க அரண்மனைக் காவலர்களை அனுப்பியும், கொள்ளையன் தப்பித்துக் கொண்டே இருந்தான். ஆகையால் மன்னனே நேரடியாக கொள்ளையனைப் பிடிக்க, களத்தில் இறங்கிவிட்டான்.

தன்னைப் பிடிக்க மன்னனே மாறுவேடத்தில் களம் இறங்கியிருப்பதை அறிந்த கொள்ளையன், என்ன செய்வதென்று சிந்திக்கத் தொடங்கினான். பிடிபட்டால் கடுமையான தண்டனைக் கிடைக்கும் என்பதை அறிந்திருந்ததால் அவனை பயம் தொற்றிக்கொண்டது. தன்னிடம் இருந்த திருட்டுப் பொருட்கள் அனைத்தையும், பெரிய மண் பானையில் சேகரித்தான். பின்னர் அந்த பானையை மறைத்து வைப்பதற்கு இடம் தேடினான்.

அப்போது அவனுக்கு ஆடையூர் சிவன் கோவில் தென்பட்டது. அங்கு சென்ற கொள்ளையன், கோவிலுக்குள் பானையைக் கவிழ்த்து வைத்து விட்டு, மன்னனின் தண்டனையில் இருந்து தன்னைக் காத்து அருளும்படி இறைவனிடம் மனமுருக வேண்டினான். பின்னர் வெளியே வந்த அவனை, அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த மன்னன் சிறைபிடித்தான்.

கொள்ளையன் பயத்தை வெளிக்காட்டவில்லை என்றாலும், அவன் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான். மன்னனோடு வந்த காவலர்கள், ஆலயத்திற்குள் சென்று அங்கிருந்த பானையைத் தூக்கி வந்தனர். அதை மன்னன் முன்னாக வைத்து கொட்டினர். ஆனால் அதில் தங்கம், பணம் மற்றும் பொருட்களுக்குப் பதிலாக இறைவனின் பூஜைக்கு தேவையான தேங்காய், பூ, பழம் என மாற்றம் கண்டிருந்தது.

அதைக் கண்ட மன்னன், தவறான ஒருவனை சிறைபிடித்து விட்டோமோ என்று எண்ணி, கொள்ளையனை விடுவித்துவிட்டுச் சென்றான். கொள்ளையனுக்கோ ஆச்சரியம். மன்னன் சென்ற பிறகு, சுவாமியின் எதிரே நின்று, தன்னைக் காத்தருளிய இறைவனிடம் தன்னுடைய தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். கண்ணீர் வடித்தான்.

அன்று முதல் கொள்ளையனின் மனம் பக்தி சிந்தனையில் திரும்பியது. அந்தப் பகுதியில் வாழும் அடியார்களுக்கு தேவையான தொண்டு செய்யும் சேவகனாக தன்னை மாற்றிக்கொண்டான் என்கிறது இத்தலம் குறித்த கர்ணப்பரம்பரை கதை ஒன்று.


அகஸ்தீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஞான பிள்ளையார், முருகன் வாசலில் காட்சிதர, அருகே பழமையான சோழர் கால விநாயகர் திருமேனி தனியே வைக்கப்பட்டுள்ளது. கருவறைச் சுற்றில் தல மரமான வில்வம் உள்ளது. மேலும் அகத்தியர், தட்சிணாமூர்த்தி ஆகியோரது சிலை வடிவங்களும் காட்சியளிக்கின்றன. தட்சிணாமூர்த்தி சன்னிதியின் மேற்புறம் உள்ள கல்வெட்டு, இத்தலத்தின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.

மூலவர் அகஸ்தீஸ்வரர் மேற்கு முகமாக வீற்றிருக்க, அம்பாள் அறம்வளர்த்த நாயகி கிழக்கு முகமாக நின்று சுவாமியை தரிசித்தபடி அருள்பாலிக்கிறார். மூலவர் அகஸ்தீஸ்வரர், சோழர் கால விநாயகர் ஆகிய சிலை வடிவங்கள் மட்டுமே இந்த ஆலயத்தில் பழமையானவையாக காணப்படுகின்றன. மற்ற வடிவங்கள் 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது உருவாக்கப்பட்டவை ஆகும்.

ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. தல தீர்த்தம் அகஸ்தீஸ்வரர் தீர்த்தக் குளமாகும். இந்தத் திருக்குளம் மிகவும் தூர்ந்துபோய் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆடையூர் அகஸ்தீஸ்வரர் ஆலயத்து இறைவனுக்கு நாள்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகள் மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாகவும், மணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு வரம் தரும் விதத்திலும் அமைந்துள்ளது.

சிவலிங்கத் திருமேனி மகிமை :

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் வைகாசி மாதம் வரை 3 மாதங்களுக்கு, சூரியன் தன் ஒளிக்திர்களால் மாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் இறைவனின் திருமேனி மீது ஒளிவீசி வழிபடுவது சிறப்பான அம்சமாகும். இத்தல இறைவனின் திருமேனி மணல் லிங்கத் திருமேனியாக அமைந்துள்ளது. அபிஷேக காலங்களில் சிவலிங்கத்தில் உள்ள மணல் துளிகள் கரைந்தாலும், அதன் மேனி அமைப்பு இன்றும் குறையாமல் வளர்ந்த வண்ணமே இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகம். இறைவன் திருமேனியின் பின்புறம் சடைமுடிக் கொண்டை போன்ற வடிவம் காணப்படுவது மற்றொரு அதிசயம். இதேபோல் சிவலிங்கத்தின் பின்புறம் பத்து விரல்களின் வடுக்கள் காணப்படுகிறது. இவை சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட அகத்தியரின் விரல்களா? அல்லது அன்னை பார்வதிதேவியின் விரல்களா? என்பது வெளிவராத ரகசியமாக உள்ளது.

இத்தல இறைவனை தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தை பேரூர் ஆதீனத்தில் திருவண்ணாமலை மடத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.

அமைவிடம் :

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சந்திர லிங்கத்திற்கும், வாயு லிங்கத்திற்கும் நடுவில், வடக்கே காஞ்சி செல்லும் சாலையில், சுமார் அரை கி.மீ. தொலைவில் ஆடையூர் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.