அடியவர் சொல்ல இறைவன் எழுதிய ‘திருவாசகம்’

அடியவர் சொல்ல இறைவன் எழுதிய ‘திருவாசகம்’
Thiruvasagam.

     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

‘திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பெருமை கொண்ட திருவாசகத்தை பாராயணம் செய்பவர்களுக்கு, இறையருள் என்பது சாத்தியமான ஒன்றாகும்.

அகமும், புறமும் சைவ நெறியை கடைப்பிடித்து, சிதம்பரம் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த திருவாதவூரார், தில்லைநாதனை வணங்கிவிட்டு, கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். இவர் தான் இறைவனால் “மாணிக்கவாசக..” என்று அழைக்கப்பட்டு, ‘மாணிக்கவாசகர்’ ஆனவர்.

“ஐயா! வணக்கம். நான் இந்த ஊரை சேர்ந்தவன். உங்களுடைய பாடல்களை பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அவற்றை பாராயணம் செய்ய விரும்புவதால், எழுதிக் கொள்ள வேண்டி தங்களை தேடினேன். நீங்கள் இங்கே இருப்பதாக அறிந்து வந்தேன். பாடல்களை தாங்கள் சொன்னால், நான் எழுதி கொள்கிறேன்..” குரல் வந்த திசை நோக்கி திருவாதவூரார் திரும்புகிறார்.


வந்தவர் களையான முகமும், ஒளி பொருந்திய கண்களுமாக இருந்தார். பார்த்தவுடன் அனைவரை யும் கவரும் முகம் கொண்ட அவரால், உள்ளன்புடன் வைக்கப்பட்ட கோரிக்கையை, மாணிக்கவாசகரால் தவிர்க்க இயலவில்லை. தன்னை அறியாமல் அதற்கு சம்மதம் தெரிவித்து பாடல்களை சொல்ல தயாரானார். அதை எழுத அடியவர் வடிவில் வந்த இறைவனும் ஆயத்தமானார்.

தன்னைத் தேடி வந்திருப்பவர், அடியார்களிடம் திருவிளையாடல் நடத்துவதில் பேரின்பம் கொண்ட ஈசன்தான் என்பதை திருவாதவூரார் உணரவில்லை. தன்னிலை மறந்து அவர் பாடல்களை சொல்லிய வேகத்திலேயே, அவை சுவடியில் எழுதப்பட்ட அதிசயம் அங்கே நிறைவேறி முடிந்தது.

‘திருவாசகம்’ முழுவதும் எழுதியாகி விட்டது. அதன் பின்னர், திருச்சிற்றம்பலத்தின் மேல் திருக்கோவை பதிகம் ஒன்று வேண்டும் என்று அடியவர் வேண்டுகிறார். தன்னை அறியாத நிலையில் மாணிக்கவாசகர் அதையும் பாடி முடிக்கிறார்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர், சற்றே தன்னிலை வரப்பெற்ற நிலையில் மாணிக்கவாசகர் நடந்தவற்றின் பின்னணியில் இறைவன் இருப்பதை உணர் கிறார். பாடலை எழுதியவரை நேருக்கு நேராக காண நிமிர்ந்து பார்க்கிறார். உடனடியாக, பாடல்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை நூலால் கட்டிக்கொண்டு, அடியவர் வடிவில் உள்ள இறைவன் மறைந்து விட்டார்.

கண்களில் நீர் பெருக, ஆலயம் முழுவதும் தேடியும் அந்த அடியவர் கண்ணில் படவேயில்லை. தம்மை ஆட்கொண்ட இறைவன், நமது முன்னால் இருந்தும் அதை உணர இயலாமல் போய்விட்டதை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தார், திருவாதவூரார். அந்த நேரத்தில் இறைவன், ஓலைச் சுவடிகளை சிற்றம்பலத்தின் கருவறை வாசல்படியில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.

மறுநாள் காலை சிதம்பரம் நடராஜருக்கான அன்றாட பூஜைகளை செய்ய வந்த அர்ச்சகர், நுழைவு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடியை பார்த்தார். அதை கைகளில் எடுத்து கவனித்தபோது, அதை எழுதியவர் ‘அழகிய சிற்றம்பலமுடையோன்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அர்ச்சகர் ஒரு கணம் திகைத்தார். ‘பூட்டப்பட்ட கோவிலின் கருவறை வாசலில் இந்த ஓலைச் சுவடியை வைத்தது யார்?’ என்று குழம்பினார். அவரால் எவ்வித முடிவுக்கும் வர இயலாமல், மேற்கொண்டு விவரங்களை அறிய, தில்லை வாழ் மூவாயிரமவர் சபையில் ஓலைச் சுவடியை சமர்ப்பித்தார்.

சபையினருக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. ‘ஓலைச் சுவடியை வைத்தது யார்? இறைவனா அல்லது வேறு யாராவதா? கையெழுத்தாக அழகிய சிற்றம்பலமுடையான் என்று இருப்பதால் சிவபெருமானே இதை வைத்ததாக எடுத்துக்கொள்ளலாமா?’

இறுதியாக சபையின் தலைவர் இறைவனை பிரார்த்தித்துவிட்டு, ஓலைச்சுவடியை பிரித்து படிக்கத் தொடங்கினார். அதில் ‘திருவாசகம்’ மற்றும் சிவபெருமானை பாட்டுடை தலைவனாகக் கொண்ட ‘திருக்கோவை பதிகம்’ ஆகியவை இருந்தன. பாடலின் மூலம் எழுந்த உணர்வுகள், அனைவரது மனதையும் உருக்கி விட்ட அதிசயம் அங்கே நிறைவேறியது. அதன் காரணமாக, பாடல்களுக்கான மூல விளக்கத்தை அறிந்து கொள்ள அனைவரும் விரும்பினர்.

பாடல்களின் அடியில் ‘திருவாதவூரார் சொல்லச்சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தில்லை இறைவன் திருவாதவூரார் மூலமாக ஏதோ ஒரு செய்தியை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறார் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதுபற்றி திருவாதவூராரையே சந்தித்து கேட்பது என்று முடிவானது.

தன்னைத் தேடி வந்திருக்கும் தில்லைவாழ் மூவாயிரவர் சபையினரிடம், “இந்த அடியவனை நாடி அனைவரும் வந்துள்ள காரணம் என்ன?” என்றார் திருவாதவூரார்.

கோவில் கருவறை முன்பு ஓலைச்சுவடி இருந்தது முதல், அதைப் படித்தது வரை கூறி சபையின் தலைவர், “பாடலின் நயம் புரிந்தது. ஆனால் முழுவதுமாக அர்த்தம் விளங்கவில்லை. சுவடியின் அடியில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்ற குறிப்பும் உள்ளது. ஆகையால் தான் தங்களை சந்தித்து தக்க விளக்கம் பெற வந்துள்ளோம்” என்றார்.

திருவாதவூராரின் உடல் முழுவதும் ஒரு கணம் அதிர்ந்தது. சுதாரித்துக்கொண்ட அவர், “அந்த ஓலைச்சுவடியை நான் பார்க்கலாமா..”

பணிவுடன் கேட்ட அவரது கைகளில் தரப்பட்ட ஓலைச்சுவடியை கண்டதும், கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. பிறந்த குழந்தையை கையில் தாங்கும் அன்னையைப் போல, பரவசத்துடன் ஓலைச்சுவடியை கைகளில் தாங்கினார். உள்ளம் நிறைய அதனை தடவியபடி ஒவ்வொரு சுவடியாக பார்த்தார். பாடலின் அடியில் இருந்த ‘அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்ற வார்த்தையை கண்டு கண்ணீர் பெருக்கு இன்னும் அதிகமானது. அதை மீண்டும் மீண்டும் கண்களில் ஒற்றியவாறே இறைவனின் திருவிளையாடலை எண்ணி உள்ளம் பூரித்து நின்றார்.

சிவபெருமானின் கரங்களால் எழுதப்பட்ட தமிழை படிக்க, அவரது இரண்டு கண்கள் போதவில்லை. “இறைவா.. உன்னை எப்படி போற்றுவேன். இந்த அடியவன் சொன்னதை உனது திருக்கரங்களால் எழுதக் கூடிய பாக்கியம் பெற, எந்த பிறவியில் தவம் செய்தேனோ; இப்பிறவியில் அது வாய்த்தது” என்று பலவாறாக உணர்வுகளை வெளிப்படுத்திய திருவாதவூராரை, கூடியிருந்த அனைவரும் ஆச்சரி யத்துடன் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திருவாதவூராரின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒளியில் தோன்றிய இறைவன், “திருவாதவூராரே! நீ என்னுடைய பாதத்தை அடையும் காலம் வந்துவிட்டது. சிற்றம்பலம் நோக்கி வந்து எனது பாதத்தில் புகுவீராக..” என்று கூறி மறைந்தார்.

தன்னிலை மறந்து நின்றவர், நினைவு வந்தவராக சபையினரைப் பார்த்துச் சொன்னார், “ஐயா.. இந்த பாடல்களுக்கான அர்த்தத்தை நான் சிற்றம்பலத்தின் சன்னிதியில் தெரிவிக்கலாமா?”

அனைவரும் அதை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர். திருவாதவூரார் முன்னே செல்ல, மூவாயிரமவர் சபை அவரை பின் தொடர்ந்தது.

தில்லை சிற்றம்பலத்திற்கு சென்று நின்ற திருவாதவூரார் கருவறையை சுட்டிக் காட்டி, “அதோ அங்கே மந்தகாச புன்முறுவலுடன் அடியாருக்கு அடியாராக, அனைவருக்கும் அபயம் தந்து, மூன்று உலகத்தையும் படைத்து, காத்து, மறைக்கும் செயல் புரியும் பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்” என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார்.

அதன் பிறகே, திருவாசக ஓலைச்சுவடியை சிதம்பர இறைவனின் பாதத்தில் வைத்து தினமும் ஆறு கால பூஜையில் பாராயணம் செய்யப்பட்டது. ‘திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பெருமை கொண்ட திருவாசகத்தை பாராயணம் செய்பவர்களுக்கு, இறையருள் என்பது சாத்தியமான ஒன்றாகும்.