பாவம் - தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்

பாவம் - தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்


   தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. பாவம், தோஷம் போக்கும் சில தீர்த்தங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தீர்த்தம் என்பதே புனிதமானது என்பது அனைவரின் நம்பிக்கை. அதனால் தான் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை மக்கள் பெரிதும் ஆவலுடன் செய்கின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. நம் நாட்டில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக கும்பகோணம் மகாமக தீர்த்தம் இருக்கிறது. அதே போல முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்த்தங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சர்வ தீர்த்தம்


காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சீ புரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் இருக்கிறது ‘சர்வ தீர்த்தம்’. அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு அதனை ஆரத் தழுவிக் கொண்டாள். அதன் மூலம் அன்னைக்கு, ஈசனின் பரிபூரண அருள் கிடைத்தது.

ஆனால் நதிகள் வருத்தம் அடைந்தன. சிவனின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் அன்னையை சோதித்த தங்களுடைய செயல் உகந்தது அல்ல எனக் கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதன்படி காஞ்சீபுரம் தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை ‘தீர்த்தேஸ்வரர்’ ஆக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.

வேத தீர்த்தம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்குள்ள தீர்த்தம் ‘வேத தீர்த்தம் ஆகும். இதற்கு ‘மணிகர்ணிகை தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு. நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இந்தத் தலத்தில் தவம் இருந்த காரணத்தினால், இறைவனுக்கு ‘வேதாரண்யேஸ்வரர்’ என்றும், தீர்த்தத்திற்கு ‘வேத தீர்த்தம்’ என்றும் பெயர் வந்தது.

ராமபிரான் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வேத தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், பல்லாயிரம் வருடங்கள் தவம், தானம் செய்த பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கே நீராடுவது, மகா புண்ணியம் வாய்ந்த சேது சமுத்திரத்தில் நீராடியதற்குச் சமம் என்கிறார்கள்.

கல்யாண தீர்த்தம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் கல்யாண தீர்த்தம் இருக்கிறது. கயிலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடைபெற்ற சமயம், முப்பத்து முக்கோடி தேவர்களும், உலக மக்களும் வட பகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்துவிட்டது. சிவபெருமானின் ஆணைப்படி, அகத்திய மாமுனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

கயிலையில் இருந்து புறப்பட்டபோது அகத்தியர் கேட்டுக்கொண்டபடியே, இந்தத் தலத்தில் இறைவன் அகத்தியருக்கு அம்மையப்பராக கல்யாணக் கோலத்தில் திருக்காட்சி தந்தார். அகத்தியருக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலமாதலால், இங்குள்ள தீர்த்தம் ‘கல்யாண தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தடைப்பட்டு வரும் திருமணம் நல்லபடியாக நடந்தேறும் என்கிறார்கள். மூலிகைகள் நிறைந்த பொதிகைமலையில் தோன்றும் தாமிரபரணி, முதலில் பூமியைத் தொடும் இடம்தான் பாபநாசம் கல்யாண தீர்த்தம். இங்கு நீராடுவதால் உள்ளத் தூய்மையுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

நாழிக்கிணறு

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அமைந்திருக்கிறது, ‘நாழிக்கிணறு’ தீர்த்தம். திருச்செந்தூர் திருத்தலத்தில் தான் முருகப்பெருமான், சூரபதுமனோடு போர் புரிந்து, அவனை சம்ஹாரம் செய்தார். போர் நிறைவு பெற்று விட்டது. கடுமையாக போர் புரிந்ததன் காரணமாக, முருகப்பெருமானின் படை வீரர்கள் அனைவரும் மிகவும் களைப்புற்று காணப்பட்டனர். அவர்களின் நீர் தாகத்தை தணிக்க திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், தன்னுடைய வேலினால் ஏற்படுத்திய தீர்த்தமே ‘நாழிக்கிணறு.’ அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போன்றது இந்த தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் எந்த காலத்திலும் நீர் வற்றியதே இல்லை. இன்னும் ஒரு சிறப்பு இந்த தீர்த்தத்திற்கு இருக்கிறது. அதாவது கடலுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த தீர்த்தம், உவர்ப்பு தன்மை சிறிதும் இன்றி இனிப்பு சுவையுடன் திகழ்கிறது.



ஆதி தீர்த்தம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளம் தான் ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், இந்தக் குளத்தில் இருந்து பொன் மலர்களைப் பறித்து சொக்கநாத பெருமானை வழிபாடு செய்தனர். அதன் காரணமாகவே இந்தத் தீர்த்தக் குளம் ‘பொற்றா மரைக் குளம்’ என்று பெயர் பெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தீர்த்தம் என்பதால் ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்பட்டது. முக்தி வேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால், பொற்றாமரைக் குளத்துக்கு ‘ஞான தீர்த்தம்’, ‘முக்தி தீர்த்தம்’ போன்ற பெயர்களும் உண்டு.

ஞானதீர்த்தம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூருக்கு அருகில் தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மந்திரகிரி முருகன் ஆலயத்தில் உள்ள தீர்த்தம், ‘ஞான தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமிமலையில் முருகன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்தது நமக்குத் தெரியும். ஆனால் செஞ்சேரி திருத்தலம் ஈசனிடம், முருகப்பெருமான் உபதேசம் பெற்ற தலமாகும்.

மாயாஜாலங்களில் வல்லவனான சூரபதுமனை அழிப்பதற்காக, சத்ருசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் உபதேசம் பெற விரும்பினார் முருகப்பெருமான். தவம் இயற்ற உரிய இடம் தேடி பூமிக்கு வந்தபோது, நான்கு வேதங்களுக்கு நிகரான கடம்ப வனமும், கங்கைக்கு நிகரான ஞானச் சுனையும் அமைந்த தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்தார். இங்கு அவருக்கு மந்திர உபதேசத்தை ஈசன் வழங்கினார். இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடினால் வாழ்வில் வரும் இன்னல்கள் நீங்கும்.

பிரம்ம தீர்த்தம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டநாதர் கோவில் இருக்கிறது. இங்கு பிரதான தீர்த்தமாக விளங்குவது ‘பிரம்ம தீர்த்தம்.’

முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்ததும், போட்டியில் தாழம்பூவை பிரம்மதேவன் பொய்சாட்சி கூற வைத்ததும் நாம் அறிந்ததே. பொய் கூறிய பாவம் நீங்க பிரம்மதேவன், இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதில் நீராடி இறைவனை வழிபட்டார். பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமே ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

சட்டநாதர் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை, பிரம்மதேவரே நடத்துவதாக ஐதீகம். இங்கு சித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கும்.

சங்கு தீர்த்தம்

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருக்கிறது, வேதகிரீஸ்வரர் ஆலயம். இங்கு இருக்கும் தீர்த்தம் ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. என்றும் பதினாறு வயதாக இருக்க ஈசனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் மார்க்கண்டேயன். இவர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருக்கழுக்குன்றம் வந்தபோது, இறைவனுக்கு நீர் கொண்டு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லை. அப்போது இறைவனின் அருளால் தீர்த்த குளத்தில் வலம்புரி சங்கு ஒன்று தோன்றியது. அந்த சங்கில் நீர் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாகவே இந்தத் தீர்த்தம் ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

இன்றைக்கும் இந்த தீர்த்தத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு வலம்புரி சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் சகல பாவங்களும் நீங்கும்.